MAP

தென் கொரியாவில் இறைவேண்டல் செய்யும் பெண்கள் தென் கொரியாவில் இறைவேண்டல் செய்யும் பெண்கள்   (ANSA)

தங்கள் மறைச்சாட்சிகளை நினைவுகூரும் கொரியக் கத்தோலிக்கர்!

கொரியத் திருஅவை தற்போதைய மற்றும் எதிர்காலத் தலைமுறையினரை ஊக்கப்படுத்தும் நோக்கோடு மறைச்சாட்சிகளின் நினைவை நம்பிக்கையின் கருவூலமாகப் பாதுகாத்து வணங்கி வருகிறது.

ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்

தென் கொரியாவில் பல நூற்றாண்டுகளுக்கு முன், விசுவாசத்திற்காகத் தங்களின் உயிரை தியாகம் செய்த மறைசாட்சிகளை தென் கொரிய திருஅவை நினைவு கூர்கின்றது.

கடந்த 2014 ஆம் ஆண்டு தென் கொரியாவின் தலைநகர் சியோலில் பால் யுன் ஜி-சுங் மற்றும் 123 தோழர்களுக்கு அருளாளர் பட்டம் வழங்கியபோது, மறைந்த முன்னாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அம்மறைச்சாட்சிகளின் முன்மாதிரியை எடுத்துரைத்ததையும் அவர்கள் நினைவுகூர்ந்துள்ளனர்.  

இன்று  கொரிய நாட்டு நம்பிக்கையாளர்கள் பலரும், “கொரியாவில் கத்தோலிக்கப் புனித தலங்கள்” போன்ற ஒழுங்குபடுத்தப்பட்ட திருப்பயணங்கள் வழியாக, அம்மறைச்சாட்சியருடன் தொடர்புடைய புனித இடங்களுக்குச் சென்று வருகின்றனர்.

19-ஆம் நூற்றாண்டின் மறைச்சாட்சிகளான பிரெஞ்சு மறைப்பணியாளர்கள் மற்றும் கொரிய அருள்பணியாளர்கள் உள்பட 103 புனிதர்களையும், 124 அருளாளர்களையும் கொரியத் திருஅவை நினைவுகூர்கிறது.

20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும், கொரிய நாடுகளின் பிரிவின் போது கொல்லப்பட்டவர்கள் உட்பட, மறைச்சாட்சிகளின் குழுக்களுக்கு புனிதர் பட்டமளிப்பிற்கான   செயல்முறைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அந்தத் துயரமான காலங்களில் பலர் ஹாந்தி மலைப்பகுதிகளில் தஞ்சம் அடைந்ததாகவும், அம்மலைகளில் புதைக்கப்பட்ட  உடல்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், அம்மறைச்சாட்சிகளின் கல்லறைகளிலிருந்து எடுக்கப்பட்ட மண்ணைக் கொண்டு புனித பொருள்கள் தயாரித்துப் பயன்படுத்துவதை கொரிய விசுவாசிகள், தங்களின் இறை நம்பிக்கைக்காக உயிர்துறந்தவர்களுடன் உள்ள ஆழமான உறவின் அடையாளமாகவும் பார்க்கின்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 ஜூலை 2025, 12:10