தென்கொரிய இளையோரின் யூபிலித் திருப்பயணம்!
ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்
ஜூலை 28 முதல் ஆகஸ்டு 3 வரை நடைபெறவுள்ள இளையோருக்கான யூபிலி கொண்டாட்டத்தில் பங்கேற்க, சியோல் உயர் மறைமாட்டத்தில் ஜூலை 19, சனிக்கிழமையன்று, 1078 கொரிய கத்தோலிக்க இளைஞர்களை வழியனுப்பும் நிகழ்வு ஒன்றை அம்மறைமாவட்டம் ஏற்பாடு செய்தது.
தென்கொரிய தலைநகரில் உள்ள டோங்சங் உயர்நிலைப் பள்ளியின் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், கொண்டாட்டங்கள் மற்றும் திருப்பலியும் இடம்பெற்றது என்றும், சியோல் உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயரும், 2027-ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள அனைத்துலகக் கத்தோலிக்க இளையோர் தினத்தின் ஒருங்கிணைப்பாளருமான ஆயர் Paul Kyung-sang Lee அவர்கள் தலைமையில் இந்நிகழ்வுகள் அனைத்தும் நிகழ்ந்தன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 3 வரை, 1078 இளம் கொரிய திருப்பயணிகள் 18 குழுக்களாக பிரிந்து அசிசி, மிலான் மற்றும் தூரின் வழியாகப் பயணித்து, பின்னர் உரோமையில் நடைபெறும் யூபிலி நிகழ்வுகளில் கலந்து கொள்வர் என்றும், இவர்கள் புனிதக் கதவுகள் அமைந்துள்ள பாப்பிறைப் பேராலங்கள் மற்றும் இத்தாலியின் பாரம்பரியக் கத்தோலிக்க இடங்களுக்கும் செல்வார்கள் என்றும் அவர்களின் பயணத்திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
ஒருமைபாட்டைக் கட்டியெழுப்பும் மற்றும் மேற்கொள்ளும் பயணத்திற்குத் தயார்படுத்தும் விதமாக, பல செயல்பாடுகளுடன் ஜூலை 19 அன்று மாலை 6.30 மணிக்கு இந்நிகழ்வு தொடங்கியது என்றும், மேலும் இந்த இளம் திருப்பணிகள் தங்கள் பயணத்தின் போது பயன்படும் அடிப்படை இத்தாலியச் சொற்களையும் கற்றுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளது.
பின்னர் மாலை 7.30 மணிக்கு 60 அருள்பணியாளர்களுடன் இணைந்து ஆயர் Paul Kyung-sang Lee அவர்கள் திருப்பலி நிறைவேற்றினார் என்றும், திருப்பலியின் போது ஆயர் தனது மறையுரையில் இத்திருப்பயணத்தின் உண்மையான நோக்கம் நமக்காகப் பணிபுரிய வரும் இயேசுவின் அன்பைச் சந்திப்பதுதான் என்பதை நினைவில் கொள்ளுமாறு அவர்களை வலியுறுத்தினார் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், திருப்பலியின் போது, இளம் கத்தோலிக்கர்கள் அனைவரும், ஒருவரையொருவர் அன்புகூர்வதற்கும், தங்கள் சிறந்த முயற்சிகளை வழங்குவதற்கும், பயணம் முழுவதும் நம்பிக்கையின் சாட்சிகளாக இருப்பதற்கும் உறுதிமொழி ஒன்றை எடுத்துக் கொண்டனர்.
இந்தத் திருப்பயணம் "திட்டம் 1004" என்று அழைக்கப்படுவதாகவும், இதில் தேவதை என்று பொருள்படும் கொரிய வார்த்தையான "cheon-sa" என்பது, 1004 என்ற எண்ணை குறிக்கிறது என்றும் குறிப்பிடும் அச்செய்திக்குறிப்பு, இது யூபிலிக்கு இளைஞர்களை ஆன்மிக ரீதியாகத் தயார்படுத்துவதையும், அதேவேளையில், சியோலில் இடம்பெறவுள்ள உலக இளையோர் நாளுக்கான எதிர்காலத் தலைவர்களை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
ஜூலை 31-ஆம் தேதி காலை 10 மணிக்கு, அனைத்துத் திருப்பயணிகளும் உரோமையில் உள்ள புனித கிறிசோகோனோ பெருங்கோவிலில் ஒன்று கூடுவார்கள் என்றும், சியோல் உயர்மறைமாட்டத்தின் ஓய்வுபெற்ற பேராயர் கர்தினால் Andrew Yeom Soo-jung அவர்கள் அத்திருப்பலிக்குத் தலைமையேற்று வழிநடத்துவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்