தேசிய சிறுபான்மையினர் ஆணையம் மீண்டும் செயல்பட வேண்டும்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட ஓர் அரசு அமைப்பான தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தில் (NCM) நியமனங்கள் இல்லாதது குறித்து இந்தியாவில் உள்ள கிறிஸ்தவர்கள் உட்பட, மதச் சிறுபான்மையினத் தலைவர்கள் கவலை கொண்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது யூக்கான் செய்தி நிறுவனம்.
முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், பார்சிகள் மற்றும் சைனர்கள் உள்ளிட்ட ஆறு சிறுபான்மைச் சமூகங்களின் பிரதிநிதித்துவம் கொண்ட இந்த ஆணையத்தின் தலைவர் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான இடம் நிரப்பப்படாமல் காலியாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதையும் எடுத்துக்காட்டியுள்ளது அச்செய்தி நிறுவனம்.
இவ்வாணையத்தின் கடைசி கிறிஸ்தவப் பிரதிநிதி கடந்த 2020-ஆம் ஆண்டில் வெளியேறினார் என்றும், காலியிடங்களை நிரப்ப 2021-ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும், அரசு அதற்கான எவ்வித முயற்சியையும் மேற்கொள்ளவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது அச்செய்தி நிறுவனம்.
மணிப்பூரில் பல கிறிஸ்தவர்கள் பாதிக்கப்பட்டு, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கிறிஸ்தவர்கள் மீதான துன்புறுத்தல் மற்றும் இன வன்முறை அதிகரித்துள்ள நிலையில், இந்தச் சிறுபான்மையினர் ஆணையம் செயலற்றதாகவும் பயனற்றதாகவும் இருப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றனர் என்றும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய மக்கள் தொகையில் ஏறத்தாழ 18 விழுக்காடாக இருக்கும் சிறுபான்மையினர் சமூகங்களைச் சிறப்பாகப் பாதுகாக்க, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைமையிலான அரசு உடனடியாக இந்த ஆணையத்திற்குப் பிரதிநிதிகளை நியமிக்க வேண்டும் என்று சிறுபான்மையினத் தலைவர்கள் கேட்டுக்கொண்டுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளது இச்செய்தி நிறுவனம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்