MAP

இறைவேண்டல் இறைவேண்டல்   (AFP or licensors)

இந்தியாவில் திட்டமிடப்பட்ட மதமாற்றத் தடைச் சட்டம்!

இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள மதமாற்றத் தடைச் சட்டங்கள், அவர்களைத் துன்புறுத்துவதற்கும், அவர்கள்மீது அவதூறுகளைப் பரப்புவதற்கும் தவறுதலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இந்தியாவின் மகாராஷ்டிரா  மாநிலத்தில், மதமாற்றம் தொடர்பான குற்றச்சாட்டைத் தடுக்க ஒரு சட்டம் இயற்றப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, மதச் சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள் குறித்து கிறிஸ்தவத் தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளதாக யூக்கான் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

கடுமையான மதமாற்றத் தடைச் சட்டத்தை அறிமுகப்படுத்தும் திட்டம் குறித்து ஜூலை 9 அன்று, அம்மாநில வருவாய்த் துறை அமைச்சர் சந்திரசேகர் பவன்குலே அவர்கள், மாநில சட்டமன்றத்தில் தெரிவித்ததைத் தொடர்ந்து கிறிஸ்தவத் தலைவர்களிடமிருந்து இந்த எதிர்வினைகள் எழுந்துள்ளன.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள மகாராஷ்டிராவின் நாக்பூர் பேராயர் எலியாஸ் கோன்சால்வஸ் அவர்கள், "நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் மதச் சுதந்திரத்திற்கான அரசியலமைப்பு உரிமைகளை நிலைநிறுத்துவதுதான் அரசின் கடமையே ஒழிய, மதச் சுதந்திரத்தை அடக்குவதற்குப் புதிய சட்டங்களை கொண்டு வருவதல்ல" என்று கூறியுள்ளார்.

மேலும் "பல்வேறு மாநிலங்களில், மதச் சிறுபான்மையினரைக் குறிவைத்து மதமாற்றத் தடைச் சட்டங்கள் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன" என்றும் பெரிதும் கவலை தெரிவித்துள்ளார்.

பாஜக ஆளும் மாநிலங்கள் வலதுசாரிகளின் எண்ணங்களை ஊக்குவிக்கும் விதமாக மதமாற்றத் தடைச் சட்டங்களைப் பயன்படுத்தி வருவதாக பத்திரிகையாளரும் மனித உரிமை ஆர்வலருமான ஜான் தயாள் அவர்களும் தனது கருத்தைப் பதிவுசெய்துள்ளார். இவர் அனைத்திந்தியக் கத்தோலிக்க ஒன்றியத்தின் செய்தித் தொடர்பாளராகவும் இருக்கின்றார்.

மேலும் "பாஜக ஆளும் 12 மாநிலங்களின் அரசுகளால் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வரும் மதமாற்றத் தடைச் சட்டங்கள், சிறுபான்மை சமூகங்களின் மதப் பழக்கவழக்கங்களை குற்றமாக்குவதற்கும், இந்தியாவில் பரவலாகக் காணப்படும் வலதுசாரி பெரும்பான்மைவாதத்திற்கு உதவுவதற்கும் ஓர் அரசியல் கருவியாக மாறியுள்ளன" என்றும் கவலை தெரிவித்துள்ளார் தயாள்.

உத்தரபிரதேசம், ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் சிறுபான்மையினருக்கு எதிரான அதிக எண்ணிக்கையிலான பாலியல் முறைகேடுகள் வழக்குகளை எடுத்துக்காட்டுகளாக மேற்கோள்காட்டியுள்ள தயாள் அவர்கள், "இம்மாநிலங்கள் அனைத்தும் பாஜக-வால் ஆளப்படுகின்றன" என்றும் கூறியுள்ளார்.

புது தில்லியை தளமாகக் கொண்ட கிறிஸ்தவ ஒன்றிப்புக் குழுவின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஏ.சி. மைக்கேல் அவர்கள், "பாஜக அரசியல் அதிகாரத்திற்காக தங்கள் இந்துத்துவா கொள்கையை  ஒருங்கிணைக்க "வாக்கு வங்கி அரசியலை" கையாள்கிறது என்று குற்றம் சுமத்தியுள்ளார்.

மகாராஸ்திரா மாநிலத்தில் மொத்தம் உள்ள 12 கோடியே 65 இலட்சம் மக்களில் கிறிஸ்தவர்கள் 0.96 விழுக்காட்டினராக உள்ளனர். மும்பை உயர் மறைமாவட்டத்தில் மட்டும் 5 இலட்சம் கத்தோலிக்கர்கள் உள்ளனர். தேசிய அளவில், இந்தியாவின் 146.39 கோடி மக்கள் தொகையில் கிறிஸ்தவர்கள் வெறும் 2.3 விழுக்காட்டினர் மட்டுமே என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 ஜூலை 2025, 14:24