நீதியை வலியுறுத்தும் பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவை!
ஜெர்சிலின் டிக் ரோஸ் - வத்திக்கான்
“பிலிப்பீன்ஸ் நாட்டில் தொழிலாளர்கள் பெறும் ஊதியம், அவர்களது தேவைகள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தின் தேவைகளை ஆதரிக்கத் தேவையான குறைந்தபட்ச அளவுக்கும் கீழாகவே உள்ளது” என பிலிப்பீன்சின் மணிலாவில் நடைபெற்ற ஆயர் பேரவையின் 130-வது ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தின் முடிவில் வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளனர்.
இறைவாக்கினர் மீக்கா குறிப்பிட்டுள்ள நீதியை (காண்க. மீக் 6:8-) இக்கடிதத்தின் கருப்பொருளாக வலியுறுத்தியுள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.
மேலும், துன்புறும் மக்களுக்காக, குறிப்பாக, காசா மற்றும் உலக அமைதிக்காக இறைவேண்டல் செய்ய, நோன்பிருக்க, தியாகச் செயல்கள் செய்ய நம்பிக்கையாளர் அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துணை அரசு அதிகாரி சாரா டுடெர்ட்டேவின் பதவிநீக்கம் தாமதப்படுத்தப்பட்டதை குறிப்பிட்டு, “ஆட்சி நிர்வாகத்தில், உண்மை மற்றும் நீதியுடன் தொடரப்படும் பதவி நீக்கம் என்பது வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலுக்கான ஒரு சட்டபூர்வமான மக்களாட்சி வழிமுறையாகும்" என்றும் ஆயர்கள் கூறியுள்ளதையும் குறிப்பிட்டுள்ளது அவ்வறிக்கை.
நீதியின் கருப்பொருள் "வீட்டிலிருந்தே தொடங்குகிறது" என்றும், திருஅவையின் நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியங்கள், சலுகைகள் மற்றும் மாண்புக்குரிய சிகிச்சையை உறுதி செய்வதன் வழியாக, திருஅவை ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்றும் அக்கடிதத்தில் உரைக்கப்பட்டுள்ளது.
மேலும் நியாயமான ஊதியங்கள் மற்றும் வேலைப் பாதுகாப்பு தொடர்பாக அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுகளை அடைவதற்கு ஊழியர்கள், முதலாளிகள் மற்றும் அரசுக்கு இடையே உரையாடலுக்கான அழைப்பொன்றையும் விடுத்துள்ளது இவ்வாயர் பேரவை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்