கிறிஸ்தவ நகரமான தைபே மீது மீண்டும் வன்முறைத் தாக்குதல்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
மேற்குக் கரையில் உள்ள கிறிஸ்தவ நகரமான தைபே மீதான வன்முறைத் தாக்குதலை எருசலேமிலுள்ள முதுபெரும் தந்தையர்களும் திருஅவைத் தலைவர்களும் வன்மையாகக் கண்டித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.
ஜூலை 29, இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டுள்ள இவ்வறிக்கையில், கிறிஸ்துவின் புனித நாட்டில் வேரூன்றிய அமைதியும் விசுவாசமும் நிறைந்த சமூகத்தை நோக்கி இயக்கப்பட்ட ஒரு தெளிவான மிரட்டல் செயல் இது என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் தீ வைப்பு, சுவற்றின்மீதான கீறல்கள் மற்றும் ஆயுதமேந்தி குடியேறிகளை மிரட்டுதல் உள்ளிட்டவை அடங்கும் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இஸ்ரேலியக் காவல்துறை இந்தச் சம்பவத்தைக் குறைத்து மதிப்பிட்டதை கண்டித்துள்ள அவர்கள், தைபேவுக்கான அனைத்துலக ஆதரவைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் நோக்கில் அவர்கள் மேற்கொண்டுள்ள தவறான தகவல் பிரச்சாரத்தையும் விமர்சித்துள்ளனர்.
மேலும் இந்தத் தாக்குதல் குடியேறிகள் மீதான வன்முறையின் ஒரு பெரிய வடிவத்தின் ஒரு பகுதி என்று கூறியுள்ள அவர்கள், பொறுப்புக்கூறல் மற்றும் தண்டனையின்மை குறித்த தங்களின் கவலையையும் அவ்வறிக்கையில் வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த வன்முறைத் தாக்குதலுக்கு குற்றவாளிகளைப் பொறுப்பேற்க வைத்தல், பாதிக்கப்படக்கூடிய சமூகங்களைப் பாதுகாத்தல், அனைத்துலகச் சட்டத்தை நிலைநிறுத்துதல் ஆகிய மூன்று கோரிக்கைகளை இஸ்ரேல் அரசுக்கு வலியுறுத்தி தங்கள் அறிக்கையை நிறைவு செய்துள்ள அவர்கள், அனைத்துத் தூதரக அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்து தொடர்ந்து அவர்களின் ஆதரவைக் கோரியுள்ளனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்