வத்திக்கான்-ஜப்பானிய உறவுகளைப் புதுப்பித்த கர்தினால் பரோலின்
சுஜிதா சுடர்விழி -வத்திக்கான்
ஜூன் மாதம் 28ஆம் தேதி முதல் ஜூலை 1-ஆம் தேதி வரை கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்களின் ஜப்பானுக்கான நான்கு நாள் சுற்றுப் பயணம், வத்திக்கான்- ஜப்பானிய உறவுகளுக்கும், நாட்டின் சிறிய ஆனால் துடிப்பான கத்தோலிக்க சமூகத்திற்கும் ஒரு முக்கியமான தருணத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது யூகான் செய்தி நிறுவனம்.
2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஒசாகாவில் நடந்த கண்காட்சி மற்றும் திருப்பீடத்தின் தேசிய தினத்தை மையமாகக் கொண்ட இந்த வருகை, கலாச்சார நலன் மற்றும் மேய்ப்புப் பணி ஆகியவற்றை ஒருங்கிணைத்ததாகவும், மேலும் தங்கள் வாழ்க்கைக்கான எதிர்கால சமூகத்தை வடிவமைப்பது என்ற தலைப்பில் துவங்கிய கண்காட்சியை பார்வையிட்டதாகவும், சமூக சவால்களை எதிர்கொள்ள உலகளாவிய ஒத்துழைப்பு மற்றும் புதுமைக்கான மேடையாக அது அமைந்துள்ளதாகவும் கர்தினால் குறிப்பிட்டதாக கூறியுள்ளது அச்செய்தி நிறுவனம்.
ஏறக்குறைய ஆறு மாதங்கள் நீடிக்கும் இந்த கண்காட்சி அக்டோபரில் நிறைவு பெறும் போது, ஏறக்குறைய 2.8 கோடி மக்கள் பங்கேற்பார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளது.
கர்தினால் தனது உரையில், ஆயுதங்களின் கட்டுப்பாடற்ற பரவலைக் குறைக்கும் முயற்சிகளில் வத்திக்கான் மற்றும் ஜப்பான் நாடுகள் இணைந்து மேற்கொண்டு வரும் செயல்பாடுகளை நினைவூட்டியதையும், ஹிரோஷிமா மற்றும் நாகசாகி குண்டுவெடிப்புகளின் 80வது ஆண்டு நிறைவு, அமைதிக்கான அவசரத் தேவையின் நினைவூட்டலாக இருப்பதை சுட்டிக்காட்டியதையும் குறிப்பிட்டுள்ளது அச்செய்தி நிறுவனம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்