அன்னை ஓர் அதிசயம் – லூர்து அன்னைத் திருத்தலம், பிரான்ஸ்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
அன்பு நேயர்களே, ஒவ்வொர் ஆண்டும் பிப்ரவரி 11ஆம் தேதி உலகக் கத்தோலிக்கர் லூர்து அன்னை திருவிழாவை சிறப்பிக்கின்றனர். லூர்து அன்னை பக்தியின் வரலாறு பிரான்ஸ் நாட்டு லூர்து நகரோடு தொடர்புடையது. உலகில் கத்தோலிக்கர் அதிகமாக விரும்பிச் செல்லும் இந்த லூர்து நகரம், பிரான்சில் பாரிஸ் நகருக்கு அடுத்தபடியாக அதிகமான சுற்றுலாப் பயணிகள் செல்லும் இடமுமாகும். ஒவ்வோர் ஆண்டும் உலகெங்கிலுமிருந்தும் 40 இலட்சம் முதல் 60 இலட்சம்வரை திருப்பயணிகள் லூர்து நகரம் செல்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் அங்கிருக்கும் மசபியேல்(Massabielle) குகை. அந்தக் குகையில் பெர்னதெத் சுபிரி (Bernadette Soubirous) என்ற 14 வயது சிறுமிக்கு அன்னை மரியா காட்சி கொடுத்ததால் அது சிறப்புப் பெற்றிருக்கிறது.
பெர்னதெத் சுபிரி, பிரான்ஸ் நாட்டு லூர்து நகரில் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். பெர்னதெத், மற்ற சிறார்களுடன் சுள்ளிகள் பொறுக்கப் போவது வழக்கம். அது 1858ஆம் ஆண்டு, பிப்ரவரி 11ஆம் தேதி. அன்று பெர்னதெத், அவரது சகோதரிகள் Toinette, Jeanne Abadie ஆகிய இருவருடன் விறகு பொறுக்கச் சென்றார். மசபியேல் எனும் குகைக்கு அருகில் ஓடும் ஆற்றைக் கடந்து செல்வதற்காக காலணிகளையும், காலுறைகளையும் அவர்கள் கழற்றிக் கொண்டிருந்தபோது, சுழல்காற்று வீசுவது போன்ற சப்தம் கேட்பதாக பெர்னதெத் சொன்னார். ஆனால் அருகிலிருந்த மரங்களும் புதர்களும் அசையவில்லை. அந்தக் குகையிலிருந்து ஓர் ஒளியும் அதன் நடுவே வெண்மை நிற உருவமும் பெர்னதெத்துக்குத் தெரிந்தன. அந்த உருவம், நீண்ட வெள்ளை அங்கி உடுத்தி, இடுப்பில் நீலநிறக் கச்சை கட்டி, வலது கையில் செபமாலை வைத்திருந்தது. அதன் ஒவ்வொரு பாதத்திலும் ஒவ்வொரு தங்கநிற ரோஜா மலரும் இருந்தன. தான் பார்த்த இந்தக் காட்சியை பெர்னதெத் இரகசியமாகவே வைத்திருக்க விரும்பினார். ஆயினும், வீட்டிற்குச் சென்றதும் அவரது தங்கை Toinette அச்செய்தியை தாயிடம் சொல்ல, பெற்றோர் இச்சகோதரிகளைப் பல கேள்விகளால் துளைத்தெடுத்தனர். இவர்கள் கதை கட்டுவதாகச் சொல்லி தண்டனையும் கொடுத்தனர்.
ஓரிரு நாள்கள் கழித்து பெர்னதெத் மீண்டும் மசபியேல் குகைப் பக்கம் சென்றார். தனக்குத் தோன்றிய காட்சி தீயது என்று எண்ணி, அதற்காகத் தீர்த்தமும் கொண்டு சென்றார். தனக்குத் தோன்றிய அப்பெண் கடவுளிடமிருந்து வந்திருந்தால் அங்கேயே நிற்குமாறும், சாத்தானிடமிருந்து வந்திருந்தால் உடனடியாகப் போகச் சொல்ல வேண்டும் என நினைத்திருந்தார். ஆனால் அன்று காட்சியில் அப்பெண் வந்தபோது பெர்னதெத் தீர்த்தத்தைத் தெளித்தார். அப்பெண் தலையை அசைத்து நன்றியோடு புன்முறுவலுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது பெர்னதெத் பரவசநிலையில் இருப்பதைப் பார்த்த அவரோடு வந்த மற்ற சிறார்கள் அச்சமடைந்தனர். அவர்கள் கிராமத்துக்குத் திரும்பிச் சென்றுவிட்டதுகூடத் தெரியாமல் பெர்னதெத் பரவசநிலையிலேயே இருந்தார். பிப்ரவரி 18ஆம் தேதியன்று காட்சியில் தோன்றிய பெண் பெர்னதெத்திடம், இரண்டு வாரங்களுக்கு அந்தக் குகைக்கு வரும்படிக் கேட்டுக் கொண்டார். இந்த உலகில் அல்ல, மறு உலகில் பெர்னதெத்தை மகிழ்ச்சியாக வைப்பதாகவும் அப்பெண் உறுதியளித்தார்.
இந்தக் காட்சி குறித்த செய்தி எங்கும் பரவத் தொடங்கியது. அந்த இடத்துக்குப் போக வேண்டாமென்று பெர்னதெத்தை பெற்றோர் கட்டளையிட்டனர். ஆயினும் பெர்னதெத் அங்குச் சென்றார். பிப்ரவரி 24ஆம் தேதியன்று இடம்பெற்ற காட்சியில் பாவிகளின் மனமாற்றத்துக்காகச் செபமும் தபமும் செய்யுமாறு தன்னிடம் அப்பெண் கேட்டதாகச் சொன்னார். அடுத்தநாள் காட்சியில் அந்த இடத்தில் தோண்டி அதிலிருந்து வரும் நீரைக் குடிக்கச் சொன்னார் என்றார். எனவே இதைப் பார்ப்பதற்குப் பலரும் சென்றனர். முதலில் அது சகதியாக வந்தாலும், பின்னர் சுத்தமான நீராக வந்தது. அன்று இந்த நீர் பல நோயாளிகளுக்குக் கொடுக்கப்பட்டது. பலர் அற்புதமாக குணமடைந்தனர். ஒரு விபத்தில் வலது கை முடமாகியிருந்த ஒரு பெண்ணின் கை குணமானது முதல் புதுமையாக இருந்தது. அன்று நடந்த 7 புதுமைகளுக்கு மருத்துவமுறைப்படி எந்த விளக்கமும் கொடுக்க முடியாது என்று 1860ஆம் ஆண்டில் பேராசிரியர் மருத்துவர் Verges சொன்னார். மேலும் பல புதுமைகள் நடந்தன. இவ்விடயம் பிரான்சின் தேசிய விவகாரமானது. இதனால் பேரரசர் மூன்றாம் நெப்போலியன் தலையிட்டார். 1858ஆம் ஆண்டே அந்தக் குகைக்கு வேலி போடப்பட்டது. இதனால் பெர்னதெத் இருட்டின பிறகு அங்குச் சென்று வந்தார்.
அவ்வாண்டு மார்ச் 25ஆம் தேதியன்று இடம்பெற்ற காட்சியில், அப்பெண் தனது பெயரை, "நானே அமல உற்பவம்" என அறிவித்தார். 1854ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி திருத்தந்தை 9ஆம் பயஸ், ‘அன்னைமரியா பாவமின்றி பிறந்த அமல உற்பவி’ என்ற விசுவாச உண்மையைப் பிரகடனப்படுத்தியிருந்தார். ஆனால் படிப்பறிவற்ற சிறுமி பெர்னதெத்துக்கு இந்த விசுவாச உண்மை குறித்து எதுவுமே தெரியாது. பெர்னதெத்தைப் பரிசோதிக்க விரும்பிய மருத்துவர்கள், ஏப்ரல் 7ஆம் தேதி காட்சியின்போது அவர் கையில் மெழுகுதிரியை ஏற்றி வைத்தனர். ஆனால் அது அவரைக் காயப்படுத்தவில்லை. கடைசியாக ஜூலை 16ஆம் தேதி அந்தக் குகைக்குச் சென்றார் பெர்னதெத். அதன்பின்னர் பெர்னதெத், இப்பெண் போன்ற அழகானவரை நான் இதுவரைக் கண்டதில்லை என்று விவரித்திருக்கிறார். இவ்வாறு 1858ஆம் ஆண்டில் 18 தடவைகள் கன்னிமரியாவைக் காட்சியில் கண்டார் பெர்னதெத்.
பெர்னதெத் கண்ட காட்சிகளையும், அவை தொடர்பாக அச்சிறுமி சொன்ன விபரங்களையும் ஆராய்வதற்கு 1858ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி கத்தோலிக்கத் திருஅவை ஒரு குழுவை உருவாக்கியது. இக்குழு நான்கு ஆண்டுகள் தீர ஆராய்ந்த பின்னரே அக்காட்சி உண்மையானதென்று திருஅவை அங்கீகரித்தது. லூர்து அன்னை பக்தியையும் ஏற்றுக் கொண்டது. அன்னைமரியா பெர்னதெத்திடம் ஒரு காட்சியில் தனக்கென ஓர் ஆலயம் கட்டுமாறு கேட்டிருக்கிறார். அன்னைமரியாவின் விருப்பத்திற்கேற்ப லூர்து நகரில் ஆலயம் எழுப்பப்பட்டது. அதுவே இன்று வானளாவ உயர்ந்து நிற்கும் லூர்து அன்னைத் திருத்தலம். பெர்னதெத் விளக்கியபடி Joseph-Hugues Fabisch என்ற சிற்பி 1863ஆம் ஆண்டில் அன்னைமரியா திருவுருவம் செய்யும் பொறுப்பை ஏற்றார். 1864ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதியன்று 20,000 திருப்பயணிகள் முன்பாக லூர்து அன்னைமரியா திருவுருவம் மசபியேல் குகையில் வைக்கப்பட்டது. திருத்தந்தையர்கள் 15ஆம் பெனடிக்ட், 11ஆம் பயஸ், 23ஆம் ஜான் ஆகியோர் ஆயர்களாக அங்குச் சென்றுள்ளனர். திருத்தந்தை 12ஆம் பயஸ் பாப்பிறையின் பிரதிநிதியாகச் சென்றுள்ளார். இக்காட்சியின் 100வது ஆண்டையொட்டி 1958ஆம் ஆண்டில் அப்போஸ்தலிக்க திருமடலும் வெளியிடப்பட்டது. திருத்தந்தை 2ஆம் ஜான் பால் 3 முறைகள் லூர்து நகர் சென்றுள்ளார்.
திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்களும் அன்னை மரியா லூர்து நகரில் காட்சி கொடுத்ததன் 150வது ஆண்டு கொண்டாட்டங்களையொட்டி 2008ஆம் ஆண்டு அத்திருத்தலத்திற்குச் சென்றார்.
இன்றும் ஒவ்வோர் ஆண்டும் இலட்சக்கணக்கான மக்கள் அனைத்துக் கண்டங்களிலிருந்தும் லூர்து நகருக்கு திருப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். பல நூல்களும் திரைப்படங்களும் லூர்து நகரின் பெருமையைப் பறைசாற்றுகின்றன. 1940ஆம் ஆண்டில் ஹாலிவுட்டில், "The Song of Bernadette" என்ற திரைப்படம் எடுக்கப்பட்டது. இத்திரைப்படம் ஆறு விருதுகளைப் பெற்றது. லூர்து நகருக்கு வரும் எவரும் தங்களது விசுவாசத்தை ஆழப்படுத்தாமல் திரும்பிச் செல்வதில்லை. உடலும் உள்ளமும் குணம்பெற்றுச் செல்கிறார்கள்.
உலகில் அதிகமாக திருப்பயணிகள் செல்லும் இடம் லூர்து நகர் என்று உறுதியாகச் சொல்லலாம். இதற்கு லூர்து அன்னைத் திருத்தலத்தில் நடைபெறும் அற்புதங்களும் ஒரு முக்கிய காரணம் என்றும் சொல்லலாம்.
உடல்நோயைவிட, ஒழுக்கநெறி வாழ்வும் ஆன்மிக வாழ்வும் குணமடைவதைப் போன்ற நேர்த்தியான நிகழ்வு மனிதர் வாழ்வில் இருக்க முடியாது. லூர்து அன்னையின் திருத்தலத்துக்கு முற்சார்பு எண்ணங்களுடன் செல்லும் சிலர், அங்குச் சென்றவுடன் திடீரென மனதில் பல மாற்றங்களை உணருகின்றனர். அவர்களுடைய விசுவாசம் மலருகிறது. கடவுளன்பும் மிகுதியாகின்றது.
அன்பர்களே, லூர்து நகரில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அற்புதமாய் உடலும் உள்ளமும் குணமாகியிருக்கிறார்கள். குணமாகியும் வருகிறார்கள்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்