MAP

காவல்துறையால் கைது செய்யப்பட்ட சகோதரிகள் காவல்துறையால் கைது செய்யப்பட்ட சகோதரிகள்  

இந்தியாவில் பொய்குற்றச்சாட்டுகளின் பேரில் அருள்சகோதரிகள் கைது !

கிறிஸ்தவர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்முறைகளையும், மதமாற்றத் தடைச் சட்டங்களை தவறாகப் பயன்படுத்துவதையும் சுட்டிக்காட்டி, கேரள கத்தோலிக்க ஆயர் பேரவையும், இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவையும் கடுமையான கண்டனம் ஒன்றைத் தெரிவித்துள்ளது.

ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்

ஜூலை 25, வெள்ளிக்கிழமையன்று, சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள  துர்க் என்ற நகரில், மனித வர்த்தகம் மற்றும் மதமாற்றம் தொடர்பான குற்றச்சாட்டில், அமல அன்னையின் அசிசி அருள்சகோதரிகள் சபையைச் சேர்ந்த வந்தனா பிரான்சிஸ், ப்ரீத்தி மேரி என்னும் இரண்டு அருள்சகோதரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் இந்திய அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளதுடன், எதிர்க்கட்சிகள், குறிப்பாக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எதிர்க்கட்சியினர், இந்து தேசியவாத உணர்வோடு செயல்படும் பாஜக தலைமையிலான மத்திய அரசு, சிறுபான்மையினருக்கு எதிராக அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வருவதாகக்  குற்றம்சாட்டியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட அருள்சகோதரிகள் இருவரும், மூன்று இளம் பெண்களை துறவற இல்லத்தில் வேலைக்கு அமர்த்துவதற்காக அழைத்துச் சென்ற போது, இந்து தேசியவாதக் குழுவான பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த ஒரு கும்பல், அந்த இளம்பெண்களைக் கட்டாய மதமாற்றம் செய்ய முயற்சிப்பதாகக்  கூறி அச்சகோதரிகள் மீது  குற்றம் சாட்டிய வேளை இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்நிலையில், காவல்துறையினர் தொடக்கத்தில் அவ்விரு சகோதரிகளையும் விடுவிப்பதாக உறுதியளித்திருந்த போதிலும், அவர்கள் 14 நாட்கள் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த இந்த அருள்சகோதரிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் அம்மாநிலத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கிறிஸ்தவர்களுக்கு எதிராக  அதிகரித்து வரும் வன்முறைகளையும், மதமாற்றத்  தடைச்  சட்டங்களை தவறாகப் பயன்படுத்துவதையும் சுட்டிக்காட்டி, கேரள கத்தோலிக்க ஆயர் பேரவையும், இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையும் கடுமையான கண்டனம் ஒன்றைத் தெரிவித்துள்ளது.

மேலும், இந்தியாவில் மதச் சுதந்திரம் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகள் குறித்த அச்சத்தை எடுத்துக்காட்டி, ராகுல் காந்தி மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட முக்கியமான தலைவர்கள், அருள்சகோதரிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 ஜூலை 2025, 13:46