அன்னை ஓர் அதிசயம் – Montichiari மற்றும் லூக்கா நகர்களின் ரோசா அன்னைமரியா
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
இயேசுவின் தாயும், திருஅவையின் தாயுமாக இருக்கும் அன்னைமரியா, மறையுண்மைகளைத் தாங்கிய ஒரு ரோசா மலரோடு ஒப்புமைப்படுத்தப்படுகிறார். பண்டைக்காலத்தில் ரோசா மலர், புதிரான ஒன்றின் அடையாளமாகக் கருதப்பட்டது. மரியா கன்னியாக இருந்து தாய்மைப்பேறு அடைந்ததே அவரது மறைபொருளான வாழ்வாகும்.
இவ்வாறு ரோசா மலர் அன்னைமரியாவின் வாழ்வோடு நெருங்கிய தொடர்பைக் கொண்டிருக்கிறது. இத்தாலியின் Montichiari Rosa Mystica அன்னைமரியா திருத்தலம், பியெரினா ஜிலி என்பவரோடு தொடர்புடையது. Montichiari, வட இத்தாலியில், Brescia நகருக்கு 20 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஒரு சிறிய நகரமாகும். இந்நகரம், Po நதி பாயும் வளமான சமவெளிப் பகுதியில் இத்தாலிய ஆல்ப்ஸ் மலைகளுக்கு முன்பக்கத்தில் அமைந்துள்ளது. இந்தச் சிறிய நகரத்தில் 1911ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி ஓர் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்த பியெரினா, அந்நகரத்திலிருந்த மருத்துவமனையில் தாதியாக வேலை செய்து வந்தார். பியெரினாவுக்கு அன்னைமரியா, 1947ஆம் ஆண்டிலிருந்து 1966ஆம் ஆண்டுவரை எட்டு தடவைகள் காட்சி கொடுத்திருக்கிறார். 1947ஆம் ஆண்டின் வசந்த காலத்தின் ஒருநாளில் Montichiari மருத்துவமனையிலுள்ள சிற்றாலயத்தில் பியெரினா செபித்துக் கொண்டிருந்தபோது அன்னைமரியா தோன்றினார். கண்களைக் கூசவைக்கும் ஒளிக்கு மத்தியில், இலேசான நீலநிற உடையுடன் கண்களில் கண்ணீர் மல்க மிகவும் சோகமாகத் தோன்றினார் அன்னைமரியா. அப்போது அன்னைமரியாவின் இதயம், மூன்று வாள்களால் ஊடுருவப்பட்டிருந்தது.
முதல் வாள், அருள்பணியாளர்கள் தகுதியில்லாமல் திருப்பலி நிகழ்த்துவதையும், திருநற்கருணை வாங்குவதையும், இரண்டாவது வாள், அருள்பணியாளர்கள் தங்களது அருள்பணித்துவ மற்றும் துறவு வாழ்வுக்குப் பிரமாணிக்கமில்லாமல் இருந்து அவ்வழைப்பைக் கைவிட்டு விடுவதையும், மூன்றாவது வாள், அவர்கள் விசுவாசத்தை மறுதலிப்பதையும் குறிக்கின்றன. எனவே செபம், தியாகம், தபம் ஆகிய செயல்களை, பியெரினா வழியாக கேட்டுள்ளார் அன்னைமரியா. 1947ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் தேதி இரண்டாவது முறையாக, பியெரினாவுக்குத் தோன்றிய அன்னைமரியா, வெள்ளை, சிவப்பு, மஞ்சள் ஆகிய மூன்று அழகான ரோசா மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெண்ணிற ஆடையில் இருந்தார். இம்மூன்று மலர்களும், முதன்முறை காட்சியில் தோன்றிய அந்த மூன்று வாள்கள் இருந்த இடத்தில் இருந்தன. அதற்கு நல்லதொரு விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது. வெள்ளை ரோசா செப உணர்வையும், சிவப்பு ரோசா தியாக உணர்வையும், மஞ்சள் ரோசா, தபம் மற்றும் மனமாற்ற உணர்வையும் குறிக்கின்றன.
பியெரினா தனக்குக் காட்சி கொடுக்கும் அந்த அழகான பெண் யாரென்று தெரியாமல் இருந்தார். ஆதலால், இரண்டாவது காட்சியில் அவரிடம், தயவுசெய்து நீங்கள் யார் எனச் சொல்லுங்கள் எனக் கேட்டார். அப்போது அந்தப் பெண் புன்முறுவலுடன், “நான் இயேசுவின் தாய், உங்கள் அனைவருக்கும் தாய். அனைத்துத் துறவு சபைகளுக்கும் துறவு நிறுவனங்களுக்கும் இவ்வுலகின் குருக்கள் அனைவருக்கும் ஒரு புதிய அன்னைமரியா பக்தியை வழங்குவதற்காக நம் ஆண்டவர் என்னை உன்னிடம் அனுப்பியிருக்கிறார். எனக்கு இந்தச் சிறப்பான வழியில் பக்தி முயற்சிகளைச் செய்யும் துறவு சபைகளுக்கும் துறவற நிறுவனங்களுக்கும் நிறைய அருளைப் பொழிவேன்” என்று சொன்னார்.
மீண்டும் அன்னைமரியா, Montichiari மருத்துவமனையிலுள்ள சிற்றாலயத்தில் 1947ம் ஆண்டு அக்டோபர் 22ம் தேதி பியெரினாவுக்குத் தோன்றினார். அச்சமயம் மருத்துவர்கள், பல பணியாளர்கள் மற்றும் மக்களும் கூடியிருந்தனர். அக்காட்சியின்போது அன்னைமரியா தான் இயேசுவுக்கும், மனித சமுதாயத்துக்கும், சிறப்பாக, இறைவனுக்குத் தன்னை அர்ப்பணிக்கும் ஆன்மாவுக்கும் இடையே இடைநிலையாளராக இருப்பேன் என்று கூறினார். மீண்டும் இதே ஆண்டு நவம்பர் 16, நவம்பர் 22, டிசம்பர் 7,8 ஆகிய நாள்களிலும் அன்னைமரியா பியெரினாவுக்குத் தோன்றினார். இந்தக் கடைசிக் காட்சி பங்குக் கோவிலில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த போது இடம்பெற்றது. Montichiariல் அன்னைமரியா காட்சி கொடுத்தபோது, தான் 'Rosa Mystica' என்ற பெயரில் போற்றப்பட வேண்டுமெனத் தெரிவித்தார். இந்தக் காட்சிகளின்போது பல புதுமைகள் நடைபெற்றன. எழுந்து நிற்கவோ, நடக்கவோ முடியாமல் போலியோவினால் தாக்கப்பட்டிருந்த 6 வயதுச் சிறுவன், 12 ஆண்டுகளாக காச நோயால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டு 9 ஆண்டுகளாக ஒரு வார்த்தைகூடச் உச்சரிக்க முடியாமல் இருந்த 26 வயதுப் பெண், மனநலம் பாதிக்கப்பட்ட 36 வயதுப் பெண் போன்றோர் முழுமையாய்க் குணமடைந்தனர். இப்படி அங்கு நடந்த பல புதுமைகளைச் சொல்லலாம். இத்திருத்தலங்களில் இன்றும் புதுமைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
Montichiariவுக்கு அருகிலுள்ள Fontanelle என்ற ஊரில், 1966ஆம் ஆண்டு, ஏப்ரல் 17, மே 13, ஜூன் 9, ஆகஸ்ட் 6, ஆகிய நாள்களிலும் அன்னைமரியா பியெரினாவுக்குத் தோன்றினார். இந்தக் காட்சிகளின்போதும் பியெரினா, அன்னைமரியாவை யார் என்றும், அவர் என்ன விரும்புகிறார் என்றும் கேட்டுள்ளார். அதற்கு அன்னைமரியா, தனது பிள்ளைகளுக்கு, அன்பு, ஐக்கியம் மற்றும் அமைதியைக் கொண்டு வந்துள்ளேன். தனது பிள்ளைகள் பிறரன்புச் சேவைகள் செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.
Montichiari, Fontanelle ஆகிய இடங்களிலுள்ள திருத்தலங்களுக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் சென்று அன்னைமரியாவிடம் அருள்வரங்களைப் பெற்று வருகின்றனர். தனது பிள்ளைகளின் நிலைமையை, தாயின்றி வேறு யார் நன்றாக அறிந்திருக்க முடியும்?
இத்தாலியின் லூக்கா நகர் ரோசா அன்னைமரியா
எத்தனை வகை மலர்களைப் பார்த்தாலும் ரோசாவைக் கண்டவுடன் அது அத்தனை பேரின் மனதையும் கொள்ளை கொண்டு விடுகின்றது. அதன் அழகும், மணமும், பல வண்ணங்களும் அனைவரையும் கவர்ந்திழுக்கின்றன. ஞானத்தின் புகழ்ச்சி பற்றிச் சொல்லும் சீராக் புத்தகம் 24,14ல் “எங்கேதி ஊரின் பேரீச்சமரம் போலவும், எரிகோவின் ரோசாச் செடி போலவும்” என்று குறிப்பிடுகிறது.
பழைய இலத்தீன் நாள் குறிப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள பல அன்னைமரியா திருவிழாக்களில் “ரோசா அன்னைமரியா விழாவும்” ஒன்று. இத்திருவிழா, இத்தாலியின் Lucca நகரில் சனவரி 30ஆம் தேதி சிறப்பிக்கப்படுகிறது. அந்நகர் புனிதர்கள் பேதுரு பவுல் ஆலயத்திலுள்ள அன்னைமரியா திருவுருவத்தின் தோள்களில் சனவரியில் மூன்று ரோசா மலர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே 'Rosa Mystica' என்றும் அன்னைமரியா அழைக்கப்படுகிறார்.
அன்னைமரியா குறித்து புனித Clairvauxன் Bernard கூறுவதைக் கேட்போம். மனித சமுதாயத்தின் முதல் பெண்ணாகிய ஏவாள் ஒரு முள்ளாக இருந்து காயப்படுத்தி அனைவருக்கும் மரணத்தைக் கொண்டு வந்தார். ஆனால் மரியாவில் ரோசாவைப் பார்க்கிறோம். இது ஒவ்வொருவரின் புண்களையும் இதமாகத் தடவிக் கொடுத்து குணமாக்கி மீட்பை பெற்றுக் கொடுத்தது. மரியா, ரோசா மலராக இருந்தார். வெள்ளை ரோசா கன்னிமைக்கும், சிவப்பு ரோசா அன்புக்கும் அடையாளங்கள். வெள்ளை, அன்னைமரியாவின் உடலிலும், சிவப்பு அவரது ஆன்மாவிலும் இருக்கின்றன. வெள்ளை நற்பண்புகளைத் தேடுவதையும், சிவப்பு தீயவைகளை அழிப்பதையும் குறிக்கின்றன என்று சொல்கிறார் புனித பெர்னார்டு.
சோதனைப் புயல்கள் வீசுகின்றனவா, துன்பப்படுகுழியில் கஷ்டப்படுகிறீர்களா, அன்னைமரியாவை உற்று நோக்கி அவரை அழையுங்கள். தற்பெருமை, பொறாமை, பழித்துக்கூறுதல் போன்ற காற்றால் அலைக்கழிக்கப்படுகின்றீர்களா, அன்னைமரியாவை உற்று நோக்கி அவரைக் கூப்பிடுங்கள். உடலின்பத்தால், கோபத்தால், பேராசையால் உங்கள் மனது அடித்துச் செல்லப்படுகின்றதா, அன்னைமரியாவை உற்று நோக்குங்கள். உங்கள் பாவங்களால் கஷ்டப்படுகிறீர்களா, உங்களது மனசாட்சியின் தீமைகளால் குழம்பிப் போயிருக்கிறீர்களா, இறந்த பின்னர் நடக்கும் நீதித்தீர்ப்புக்குப் பயந்து கொண்டிருக்கிறீர்களா, கவலையாக சோகமாக இருக்கிறீர்களா அன்னைமரியாவை நினைத்துப் பாருங்கள். ஆபத்தில், குழப்பத்தில், இடர்களில் அன்னைமரியாவை நினைத்து அவரை அழையுங்கள். அன்னைமரியாவின் பெயர் உங்கள் வாயிலும் இதயத்திலும் எப்போதும் இருக்கட்டும். அவரது உதவியைக் கேட்டு உதவிகளை நீங்கள் பெறலாம் அதேநேரம் அன்னைமரியா வாழ்ந்த விதத்தை முன்மாதிரிகையாய்க் கொள்ள எப்போதும் மறக்க வேண்டாம் என்றும் புனித பெர்னார்டு சொல்கிறார்.
நீங்கள் அன்னைமரியாவைப் பின்பற்றினால் நெறிதவறிப் போகமாட்டீர்கள். நீங்கள் அன்னைமரியாவிடம் செபித்தால், சோர்வடையமாட்டீர்கள். நீங்கள் அன்னைமரியாவை நினைத்தால் தொலைந்து போகமாட்டீர்கள். நீங்கள் அன்னைமரியாவைப் பற்றிக்கொண்டால் கீழே விழமாட்டீர்கள். அன்னைமரியா உங்களைப் பாதுகாத்தால் நீங்கள் பயப்படத் தேவையில்லை. அவர் உங்களது வழிகாட்டியாக இருந்தால் நீங்கள் களைப்படையமாட்டீர்கள். அவர் உங்களுக்குச் சார்பாக இருந்தால் நீங்கள் உங்கள் இலக்கை அடைவீர்கள். நீங்களே உங்கள் வாழ்வில் அனுபவிப்பீர்கள்.
கர்தினால் Newman அன்னைமரியா பற்றி இவ்வாறு சொல்கிறார் - ஆன்மீக உலகில் மிக மிக அழகான மலராக இருப்பவர் அன்னைமரியா. கடவுளின் அருளால், தூய்மை, மகிமை ஆகிய அனைத்து மலர்களையும் அவர் வறண்ட நிலங்களில் பூக்கச் செய்கிறார். அனைத்து ஆன்மீக மலர்களுக்கும் இவரே அரசி. எனவே அன்னைமரியா ரோசா என அழைக்கப்படுகிறார். ஏனெனில் ரோசா மலர் அனைத்து மலர்களிலும் மிக அழகானது. எனினும் அவர் ஆடம்பரங்களை விரும்பாது மறைவாக வாழ்பவர் என்று.
ரோசா அன்னைமரியாவிடம் செபிப்போம். ரோசா மலர் போன்று நாமும் நற்பண்புகளால், தூய்மையால், வாழ்க்கையில் நறுமணம் வீசுவோம். நம்மைச் சுற்றி வாழ்வோரையும் அந்த நறுமணத்தால் நிரப்புவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்