MAP

வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த இலட்சக் கணக்கான இளைஞர்கள் வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த இலட்சக் கணக்கான இளைஞர்கள்   (ANSA)

திருஅவையில் யூபிலி ஆண்டு 2025 – இளைஞர்களுக்கான யூபிலி

ஜுலை 29 செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டு ஆகஸ்ட் 3 ஞாயிற்றுக்கிழமை திருத்தந்தையின் திருப்பலியுடன் இளைஞர்களுக்கான யூபிலி நாளானது நிறைவு பெற இருக்கின்றது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

இளைஞர்களுக்கான யூபிலியானது வத்திக்கானில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஜுலை 29, செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டு ஆகஸ்ட் 3, ஞாயிற்றுக்கிழமை திருத்தந்தையின் திருப்பலியுடன் இளைஞர்களுக்கான யூபிலி நாளானது நிறைவு பெற இருக்கின்றது. செவ்வாய்க்கிழமை உரோம் உள்ளூர் நேரம்  மாலையில் வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் இளையோர் யூபிலிக்கான ஆரம்பத் திருப்பலியானது கர்தினால் ரீனோ பிசிகெல்லா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திருப்பலியின் நிறைவில் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் திறந்த காரில் வலம் வந்து இளைஞர்களை வாழ்த்தினார்.

ஜுலை 30 மற்றும் 31 உரோம் நகரத்தோடு உரையாடல் என்ற கருப்பொருளில் உரோம் நகரின் பல்வேறு முக்கிய வளாகத்தில் இளைஞர்களுக்கான கூட்டங்கள், கருத்தரங்குகள், உரையாடல்கள் மற்றும் பகிர்வுகள் தனிப்பட்ட அமைப்புக்களின் தலைமையில் நடைபெறுகின்றன. ஆகஸ்ட் 1, வெள்ளிக்கிழமையானது ஒப்புரவு, மனமாற்றத்தின் நாளாக கருதப்பட்டு உரோமின் சிர்கோ மாசிமோ வளாகத்தில் இளைஞர்களுக்கான யூபிலியில் பங்கேற்கும் இளைஞர்களுக்கான ஒப்புரவு வழிபாடானது நடைபெற இருக்கின்றது. காலை 10.30 மணிமுதல் மாலை 6 மணிவரை நடைபெறும் இந்நிகழ்வில் ஒப்புரவு அருளடையாளம் பெறுவதற்கான 200 இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இத்தாலியம், இஸ்பானியம், ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மானியம், ஹங்கேரி, போர்த்துக்கீசியம், போலந்து, ஸ்லோவாக்கியம், கொரியம், சீனம் ஆகிய மொழிகளில் ஒப்புரவு அருளடையாளத்தைப் பெறும் வகையில் இளைஞர்களுக்காக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2, சனிக்கிழமை பகல் 3 மணிமுதல் Tor Vergata பல்கலைக்கழகத்தின் அருகில் இளைஞர் யூபிலி நாளுக்கான முன்தயாரிப்பு செபவழிபாட்டினைத் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் நடத்த இருக்கின்றார். மறுநாள் அதாவது ஆகஸ்ட் 3, ஞாயிறன்று காலை 9 மணியளவில் இளைஞர்களுக்கான யூபிலி நாள் சிறப்புத்திருப்பலியினைத் திருத்தந்தை அவர்கள் தலைமையேற்று வழிநடத்த இருக்கின்றார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 ஜூலை 2025, 11:16