MAP

வத்திக்கான் வளாகத்தில்  கூடியிருந்த மக்கள் வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த மக்கள்  (AFP or licensors)

திருஅவையில் யூபிலி ஆண்டு 2025 - மே மாதத்தில் சிறப்பிக்கப்பட்ட யூபிலி

புதிய திருத்தந்தைக்கான கர்தினால்கள் அவை, திருத்தந்தை தேர்தல், பணியேற்புத் திருப்பலி என மே மாதம் முழுவதும் வத்திக்கான் நகரமே மக்கள் கூட்டத்தாரால் நிரம்பி இருந்தது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைத் தொடர்ந்து திருஅவையை வழிநடத்தும் 267-ஆவது திருத்தந்தையாகத் திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிய திருத்தந்தைக்கான கர்தினால்கள் அவை, திருத்தந்தை தேர்தல், பணியேற்புத் திருப்பலி என மே மாதம் முழுவதும் வத்திக்கான் நகரமே மக்கள் கூட்டத்தாரால் நிரம்பி இருந்தது. எனவே இன்றைய நம் நிகழ்வில் மே மாதத்தில் திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட நிகழ்வுகள் குறித்தக் கருத்துக்களைக் காணலாம்.

அனைத்துலக தொழிலாளர் நாள்

மே 1 அனைத்துலக தொழிலாளர் நாளானது உலக மக்களால் சிறப்பிக்கப்பட்டது. ஏப்ரல் 21 திங்கள் கிழமை உயிர்ப்பு நாளுக்கு அடுத்த நாளன்று இறைபதம் சேர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவினால் திருஅவை முழுவதும் ஆழ்ந்த வருத்தத்தில் இருந்தது. திருத்தந்தைக்கான 9 நாள் துக்க அனுசரிப்புத் திருப்பலியானது வத்திக்கானிலும் தலத்திருஅவையின் பல்வேறு இடங்களிலும் ஏறெடுக்கப்பட்டது. மே முதல் நாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்கான ஆறாவது நாள் திருப்பலியில் உலக தொழிலாளர்களை நினைவுகூர்ந்து செபித்தார் கர்தினால் விக்டர் மானுவேல் பெர்னாண்டஸ்.

ஒருவரின் தொழில் என்பது மனித குலத்தின் மாண்பை வெளிப்படுத்தி அதற்கு ஊக்கமூட்டுவது என்ற நோக்கம் கொண்டவராக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இருந்தார் என்று நினைவுகூர்ந்த கர்தினால் பெர்னாண்டஸ் அவர்கள், நம் திறமைகளை வளர்க்கவும், நம் உறவுகளில் வளரவும், இவ்வுலகின் மீது அக்கறை காட்டி மேம்படுத்துவதற்கும் தொழிலானது உதவுகிறது என்பதையும் அத்திருப்பலியில் எடுத்துரைத்தார். தன் பணியிலிருந்து ஒரு முழு நாளைக்கூட ஓய்வுக்கென எடுக்காதவர் திருத்தந்தை பிரான்சிஸ் என்றும், அர்ஜெண்டினாவில் பணியாற்றியபோதும் ஓய்வின்றி உழைத்தவர், கடவுளின் அன்புக்கு பதில்மொழி வழங்குவதை தனது அன்றாடப் பணியாக் கருதியவர் திருத்தந்தை பிரான்சிஸ் என்றும் பகிர்ந்து கொண்டார் கர்தினால் பெர்னாண்டஸ்.

கான்கிளேவ் அவை

இறைவனால் தேர்ந்துகொள்ளப்பட்ட ஒருவராக, இறைவேண்டல் செய்பவராக, உண்மையின் ஊழியராக,  கனிவும் துணிவும் இரக்கமும் உள்ளவராக, இறை அன்பில் ஆழமாக வேரூன்றியவராக இருக்கும் ஒருவரை புதிய திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்க வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் மே 7 அன்று கர்தினால்கள் அனைவரும் கூடியிருந்தனர். கர்தினால்கள் அவையின் தலைவர் கர்தினால் ஜொவான்னி பத்திஸ்தா ரே அவர்கள் தலைமையில் திருப்பலியானது நடைபெற்றது. புதிய திருத்தந்தையைத் தேர்வு செய்யும் தேர்தலில் பங்கேற்கும் கர்தினால்கள் அனைவரும், தங்களது அனைத்து தனிப்பட்ட கருத்துக்களையும் கைவிட்டு, கடவுளாம் இயேசு கிறிஸ்துவை மட்டுமே தங்களது இதயத்தில் வைத்து, திருஅவை மற்றும் மனிதகுலத்தின் நன்மையை மட்டும் மனதில் இருத்தி செயல்பட அழைக்கப்படுகின்றார்கள் என்று இத்திருப்பலியில் ஆற்றிய மறையுரையில் வலியுறுத்தினார் கர்தினால் ரே.

திருஅவை எப்போதும் "ஒன்றிப்பின் இல்லமாகவும் பள்ளியாகவும்" இருக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும் என்றும், தொழில்நுட்ப முன்னேற்றத்தால் வகைப்படுத்தப்பட்ட, கடவுளை மறக்க முனைகின்ற, இன்றைய சமூகத்தில் அனைவரின் மனசாட்சியையும் ஆன்மிக ஆற்றல்களையும் எவ்வாறு எழுப்புவது என்பதை நன்கு அறிந்த திருத்தந்தையைக் கடவுள் திருஅவைக்கு வழங்குவார் என்று நம்பிக்கையுடனும் நாம் செபிக்க வேண்டும் என்றும் அழைப்புவிடுத்தார் கர்தினால் ரே.

புதிய திருத்தந்தை தேர்வு

மே 8, அன்று மாலை புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதை அறிவிக்கும் வெண்புகையானது சிஸ்டைன் சிற்றாலயப் புகைபோக்கி வழியாக வெளியிடப்பட்டது. வத்திக்கான் வளாகத்தை நோக்கி மக்கள் கடல் அலையென திரண்டு வந்தனர்.  வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் முன்பாக,  மேல் மாடத்தில் தோன்றிய கர்தினால் தோமினிக் மம்பர்த்தி அவர்கள்,  (Annuntio vobis gaudium magnum: habemus Papam!) “நான் உங்களுக்கு ஒரு பெரிய மகிழ்வான செய்தியை அறிவிக்கிறேன்: நாம் ஒரு திருத்தந்தையைப் பெற்றுவிட்டோம்” என்று கூறினார்.

திருஅவையை வழிநடத்தும் 267-ஆவது திருத்தந்தையாக அமெரிக்க ஐக்கிய நாட்டின் சிகாகோவைச் சார்ந்தவரும், அகுஸ்தீன் சபையைச் சார்ந்தவருமான கர்தினால் Robert Francis, O.S.A. அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, திருத்தந்தை பதினான்காம் லியோ என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தார். மே 8, உரோம் உள்ளூர் நேரம் மாலை 7.30 மணியளவில் வத்திக்கான் மேல்மாடத்தில் மக்கள் முன் தோன்றிய புதிய திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள் ஊருக்கும் உலகிற்குமான ஊர்பி எத் ஓர்பி எனப்படும் சிறப்பு உரையையும் ஆசீரையும் மக்களுக்கு வழங்கினார். ஏறக்குறைய இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வத்திக்கான வளாகத்தில் கூடியிருக்க அவர்கள் முன் தோன்றிய திருத்தந்தை அவர்கள் அமைதி பற்றிய கருத்துக்களையே அதிகமாக வலியுறுத்தினார்.

கடவுளின் மந்தையாம் மக்களுக்காகத் தனது உயிரைக் கொடுத்த நல்லாயனாம் உயிர்த்த இயேசு கிறிஸ்து கூறிய முதல் வார்த்தைகள் அமைதி. இந்த அமைதியின் வாழ்த்து நம் இதயங்களில் நுழைந்து, நம் குடும்பங்களுக்கும், உலகின் எல்லா திசைகளில் இருக்கும் மக்கள் எல்லாருக்கும், பூமியெங்கும் சென்றடைய வேண்டும் என்று தான் விரும்புவதாக எடுத்துரைத்து உங்களுக்கு அமைதி உண்டாகட்டும்! என்று வாழ்த்துக் கூறினார் புதிய திருத்தந்தை பதினான்காம் லியோ.

கர்தினால்கள் அவையின் கர்தினால்களுடன் முதல் திருப்பலி

நம்பிக்கைக் குறைவுபடும்போது, வாழ்வு தன் அர்த்தத்தை இழக்கின்றது கிறிஸ்துவில் நம் மகிழ்ச்சிநிறை விசுவாசத்திற்கு நாம் சான்றுகளாக இருக்க வேண்டும் என தன்னை திருத்தந்தையாக தேர்ந்தெடுத்த கர்தினால்கள் அவையுடன், தான் திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதே சிஸ்டைன் சிற்றாலயத்தில் மே 9 காலை திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கினார் திருத்தந்தை 14ஆம் லியோ.  சிலுவை சுமக்க என்னைத் தேர்ந்தெடுத்துள்ள கர்தினால்கள் அனைவரும் புதிய திருத்தந்தையாம் தனது மறைப்பணியில் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார்.

முதல் பாஸ்கா கால மூவேளை செப உரை

மே 11, ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் மேல் மாடத்தில் நின்று தனது முதல் பாஸ்கா கால மூவேளை செப உரையினை வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த இலட்சக் கணக்கான இறைமக்களுக்கு வழங்கிய திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள், நல்லாயன் இயேசு தனது ஆடுகளை அறிந்து அன்பு செய்கின்றார், அவைகளுக்காகத் தனது உயிரைக் கொடுக்கின்றார் உண்மையான ஆயனாகத் தன்னை வெளிப்படுத்துகின்றார் என்று கூறினார் திருத்தந்தை 14-ஆம் லியோ.

சமூகத் தொடர்புத்துறையினருடன் சந்திப்பு   

மே 12, திங்கள்கிழமை காலை வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் உலக சமூகத்தொடர்புத் துறையினரைச் சந்தித்த திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள், தகவல் தொடர்பு என்பது தகவல்களைப் பரப்புவது மட்டுமல்லாது, உரையாடல் மற்றும் கலாச்சாரத்தை உருவாக்கும் இடங்களாகவும், மனித மற்றும் மின்னனு சூழல்களின் கலாச்சாரமாக மாறுவதாகவும் இருக்கவேண்டும். அளப்பரிய ஆற்றல் கொண்ட செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை மனித குல நன்மை மற்றும் பொறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பயன்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.

கீழை வழிபாட்டுமுறைத் திருஅவையினருக்கான யூபிலி

மே 14, புதன்கிழமை காலை வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் கீழை வழிபாட்டுமுறை திருஅவையினரைச் சந்தித்து உரையாற்றினார் திருத்தந்தை 14ஆம் லியோ. கீழை வழிபாட்டுமுறை திருஅவையினருக்கான யூபிலியானது வத்திக்கானில் மே 12, திங்கள்கிழமை சிறப்பிக்க ஆரம்பிக்கப்பட்டு மே 14, புதன்கிழமையுடன் நிறைவிற்கு வந்தது.

திருஅவைக்கு நீங்கள் தேவை. கீழை வழிபாட்டு திருஅவையினர் திருஅவைக்கு வழங்கக்கூடிய பங்களிப்பு மகத்தானது! வழிபாட்டு முறைகளில் உயிருடன் இருக்கும் மறைபொருள் உணர்வை மீட்டெடுக்க வேண்டிய அவசியம் நமக்கு உள்ளது. கீழைவழிபாட்டு தலத்திருஅவை ஆன்மிக மரபுகள், பழமையானவை, ஆனால் எப்போதும் புதியவை, குணமளிக்கும் ஆற்றல் கொண்டவை என்று எடுத்துரைத்தார் திருத்தந்தை.

திருத்தந்தை 14-ஆம் லியோ பணியேற்புத் திருப்பலி நிகழ்வுகள்

திருஅவையின் 267-ஆவது திருத்தந்தையாக கர்தினால்கள் அவையினால் தேர்ந்தெடுக்கப்பட்டு 14-ஆம் லியோ என்ற பெயரை ஏற்ற புதிய திருத்தந்தை அவர்களின் பணியேற்பு விழாவானது மே 18, ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

அன்பான சகோதர சகோதரிகளே, இது அன்பின் நேரம்! நம்மை நம்மிடையே சகோதரர்களாக மாற்றும் கடவுளின் பிறரன்புப் பணியே நற்செய்தியின் இதயம். தூயஆவியின் ஒளி மற்றும் ஆற்றலுடன், கடவுளன்பின் மீதும் ஒற்றுமையின் அடையாளத்தின் மீதும் நிறுவப்பட்ட ஒரு திருஅவையை, ஒரு மறைப்பணி திருஅவையை உருவாக்குவோம். மனிதகுலத்திற்கான புளிக்காரமாக மாறுவோம். என்று தனது பணியேற்புத்திருப்பலியின்போது வலியுறுத்தினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

முதல் புதன் பொதுமறைக்கல்வி உரை

மே 21, புதனன்று வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் விதைப்பவர் உவமை குறித்த கருத்துக்களைத் திருப்பயணிகளுக்கு தனது முதல் மறைக்கல்வி உரையின்போது எடுத்துரைத்தார் திருத்தந்தை 14-ஆம் லியோ. இன்றைய வாழ்க்கையின் எந்த சூழ்நிலையிலும் இறைவனின் வார்த்தையாகிய விதையை வரவேற்க எப்போதும் தயராக இருப்போம் என்றும், நாம் ஒரு வளமான மண் அல்ல என்பதை உணர்ந்து சோர்வடையாமல், நம்மை ஒரு சிறந்த நிலமாக மாற்றுவதற்கு இன்னும் அதிகமாக உழைக்கும்படி இறைவனின் அருளை நாடுவோம் என்று கூறினார் திருத்தந்தை

உங்களோடு கிறிஸ்தவராகவும், உங்களுக்கு ஆயராகவும் நான் இருக்கிறேன் ஒன்றிணைந்து பயணிப்போம்  என்று கூறி மே 25, 26 ஆகிய நாள்களில் உரோமில் உள்ள பிற மூன்று பெருங்கோவில்களான  புனித யோவான் இலாத்தரன், புனித மேரி மேஜர், புனித பவுல் பெருங்கோவில்களின் பொறுப்பேற்றார் திருத்தந்தை.

இவ்வாறாக கடந்த மே மாதத்தில் திருஅவையில் நிகழ்வுகள் சிறப்பாக நடந்து முடிந்தன. வரும் வாரத்தில் ஜூன் மாதத்தில் இடம்பெற்ற திரு அவை நிகழ்வுகள் குறித்தக் கருத்துக்களைக் காணலாம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 ஜூலை 2025, 10:13