திருஅவையில் யூபிலி ஆண்டு 2025 – ஜூன் மாதத்தில் சிறப்பிக்கப்பட்ட யூபிலி
மெரினா ராஜ் – வத்திக்கான்
கடந்த வாரம் மே மாதத்தில் சிறப்பிக்கப்பட்ட யூபிலி நிகழ்வுகள் குறித்தக் கருத்துக்களை அறிந்துகொண்ட நாம் இன்றைய நம் நிகழ்வில் ஜூன் மாதத்தில் திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட யூபிலி நிகழ்வுகள் மற்றும் விழாக்கள் பற்றிக் காணலாம்.
குடும்பங்கள், குழந்தைகள், தாத்தா பாட்டிகள் மற்றும் முதியோருக்கான யூபிலி
ஜூன் 1, ஞாயிற்றுக்கிழமை குடும்பங்கள், குழந்தைகள், தாத்தா பாட்டிகள் மற்றும் முதியோருக்கான யூபிலியானது வத்திக்கானில் சிறப்பிக்கப்பட்டது. இத்திருப்பலியில் பங்குகொள்வதற்காக உலகின் ஏறக்குறைய 131 நாடுகளிலிருந்து வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். அம்மக்களுக்கு ஆற்றிய திருப்பலி மறையுரையின்போது, “குடும்பம் என்பது உலகைப் படைத்த இறைவன் தனது முழுமையான அன்பினால் படைப்பை அரவணைக்கும் இடமாக உள்ளது. நம்பிக்கை, எதிர்நோக்கு, பிறரன்புச் செயல்கள் குடும்பத்தில் எப்போதும் வளர்கின்றன என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை 14-ஆம் லியோ.
“தொடக்கமும் முடிவுமாக இருக்கும் இயேசுவின் வழியில் நாம் ஒருவர் மற்றவரை அன்பு செய்தால், சமூகத்திலும் உலகிலும் அனைவருக்கும் அமைதியின் அடையாளமாக நாம் இருப்போம். மக்களின் எதிர்காலம் குடும்பங்களால் உருவாக்கப்படுகிறது என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை. கத்தோலிக்க மக்கள் குடும்பம் குடும்பமாக இர்த்திருப்பலியில் பங்கேற்றது திருஅவை குடும்பம் என்னும் திருஅவை வழியாக வளர்கின்றது என்பதை எடுத்துரைக்கும் வண்ணம் இருந்தது.
ஜூன் மாதத்தில் வழங்கிய புதன் மறைக்கல்வி உரை
ஜூன் 4, மாதத்தின் முதல் புதன்கிழமையன்று வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு திராட்சைத்தோட்ட வேலையாள்கள் உவமை குறித்த தனது கருத்துக்களை எடுத்துரைத்தார் திருத்தந்தை 14-ஆம் லியோ. வேலைக்காக் காத்திருக்கும் பணியாளர்கள் பற்றியக் கருத்துக்களை இக்கால இளைஞர்களின் பணியோடு ஒப்பிட்ட திருத்தந்தை அவர்கள், இக்கால இளைஞர்கள் வாய்ப்பிற்காகக் காத்திருக்காது, கடவுளது திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்ய தன்னை அழைக்கும் கடவுளுக்கு உற்சாகமாக பதிலளிப்பவர்களாக இருக்க வேண்டும். அதைத் தள்ளிப் போடாது அவரது பணியில் முழுமையாக ஈடுபட நம்மை நாமே ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். ஏனென்றால் கடவுள் தாராளமானவர், அவரை நம்பும் நாம் ஒருபோதும் ஏமாற்றமடைய மாட்டோம். அவரது திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்வதன் வழியாக, நமது வாழ்க்கையின் அர்த்தம் என்ன? என்று நமக்குள் நாம் சுமந்து செல்லும் ஆழமான கேள்விக்கான ஒரு பதிலைக் காண்கின்றோம் என்றும் கூறினார்.
கத்தோலிக்க இயக்கங்கள், அமைப்புகள் மற்றும் புதிய சமூகங்களுக்கான யூபிலி
ஜூன் 7, சனிக்கிழமை மாலை பெந்தகோஸ்து பெருவிழா முன்தயாரிப்பை முன்னிட்டு வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு செப வழியபட்டிற்குத் தலைமையேற்று உரையாற்றினார் திருத்தந்தை. கத்தோலிக்க இயக்கங்கள், அமைப்புகள் மற்றும் புதிய சமூகங்களுக்கான யூபிலி விழாவில் பங்கேற்ற ஏறக்குறைய 70,000 திருப்பயணிகள் பங்கேற்றனர். அதில் அம்மக்களுக்கு வழங்கிய உரையில், “திருஅவை மற்றும் உலகைப் புதுப்பிக்கின்ற பெந்தக்கோஸ்து நாளில், தூய ஆவியாரின் வலிமையான காற்று நம் மீதும் நமக்குள்ளும் வந்து, நம் இதயங்களின் எல்லைகளைத் திறந்து, கடவுளைச் சந்திக்கும் அருளை நமக்குத் தரட்டும். அன்பின் எல்லைகளை விரிவுபடுத்தி, அமைதி ஆட்சி செய்யும் ஓர் உலகத்தைக் கட்டியெழுப்ப நமது முயற்சிகளைத் தக்கவைக்கட்டும்” என்று எடுத்துரைத்தார் திருத்தந்தை.
தூய ஆவியார் பெருவிழா
ஜூன் 8, ஞாயிறு பெந்தக்கோஸ்து பெருவிழாவை முன்னிட்டு வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு, தூய ஆவியாரின் ஆற்றலினால் இந்த யூபிலி ஆண்டில் புதுப்பிக்கப்பட்டவர்களாக வாழ்வை மீண்டும் தொடங்க அழைப்புவிடுத்த திருத்தந்தை அவர்கள், ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவின் எதிர்நோக்கை இவ்வுலகில் உள்ள எல்லாருக்கும் கொண்டு செல்லுங்கள் என்றும் வலியுறுத்தினார்.
திருமுழுக்கு மற்றும் உறுதிப்பூசுதல் திருவருளடையாளங்களின்போது நமது நெற்றிகளில் பூசப்பட்ட கிறிஸ்மா திருத்தைலத்தின் வழியாக நாம் கிறிஸ்துவின் நறுமணத்தை உணர்கிறோம் என்றும், இந்த இரு அருள்சாதனங்களும், கடவுளின் இறையரசில் இயேசுவின் மறுமலர்ச்சிப் பணிக்குள் நம்மை ஒன்றிணைத்துள்ளன என்றும் கூறினார்.
திருப்பீடத்திலுள்ளோருக்கான யூபிலி
ஜூன் 9, திங்கள்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் நடைபெற்ற திருப்பீடத்திலுள்ளோருக்கான யூபிலிக் கொண்டாட்டத் திருப்பலிக்குத் தலைமையேற்று மறையுரையாற்றிய திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள், தனது பணியின் காரணமாக ஒரு கனமான சிலுவையைச் சுமந்து செல்லும் ஓர் அருள்பணியாளர், ஒவ்வொரு நாளும் அலுவலகத்திற்குச் சென்று அன்புடனும் நம்பிக்கையுடனும் தனது பணியைச் செய்ய முயற்சிப்பதன் வாயிலாக திருஅவை பலனில் பங்கேற்று பங்களிக்கிறார் என்று கூறினார்.
மேலும், அவ்வாறே தனது வீட்டில் ஒரு கடினமான சூழ்நிலையை அனுபவிக்கும் ஒரு குடும்பத்தின் தந்தை அல்லது தாய், கவலையை ஏற்படுத்தும் ஒரு நோய்வாய்ப்பட்டக் குழந்தை, நோய்வாய்ப்பட்ட பெற்றோர் ஆகியோர்க்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றுபவர் ஒவ்வொருவரும், அன்னை மரியா மற்றும் திருஅவையின் பலனில் பங்களிக்கிறார்கள் என்றும் கூறினார் திருத்தந்தை.
எதிர்நோக்கின் திருப்பயணிகளாகிய நாம் அனைவரும் மக்கள் மற்றும் உயிரினங்களிடையே ஒன்றிப்பை நோக்கி நகர முடிவு செய்யும் ஒருவராக இருக்க வேண்டும், இதனால் மற்றவர்கள் நம்மைப் பின்பற்றுபவர்கள் ஆவார்கள் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த லியோன்ஸ் நகர ஆயர் இரேனியஸைப் போலவே, சுவர்கள் இருக்கும் இடங்களில் பாலங்களைக் கட்ட முனைவோம், உள்ளக் கதவுகளைத் திறந்து உலகுடன் நம்மை இணைப்போம் இதனால் நம்பிக்கை பிறக்கும் என்று கூறி தனது கருத்துக்களை நிறைவுசெய்தார்.
மூவொரு கடவுள் பெருவிழா / விளையாட்டுத்துறையினருக்கான யூபிலி
ஜூன் 14, 15 ஆகிய நாள்களில் விளையாட்டுத்துறையினருக்கான யூபிலி திருஅவையில் சிறப்பிக்கப்பட்டது. ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை காலை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் மூவொரு கடவுளின் பெருவிழா மற்றும் விளையாட்டுத் துறையினருக்கான யூபிலி திருப்பலி நடைபெற்றது. இத்திருப்பலிக்குத் தலைமையேற்று மறையுறையாற்றிய திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள், தூய மூவொரு கடவுளின் பெருவிழாவை நினைவுகூர்ந்து இறைஞானம் தூய தமத்திரித்துவத்தில் வெளிப்படுகின்றது அந்த ஞானம் நம்மை எப்பொழுதும் உண்மையை நோக்கி இட்டுச்செல்கின்றது என்றும் கூறினார்.
விளையாட்டு என்பது மரியாதை மற்றும் நம்பிக்கையின் பள்ளியாகவும், சந்திப்பின் கலாச்சாரம், உடன்பிறந்த உறவு போன்றவற்றை உருவாக்கும் இடமாகவும் இருக்கின்றது என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், அனைத்து வகையான வன்முறை மற்றும் ஒடுக்குமுறையையும் எதிர்த்து, இத்தகைய விளையாட்டை உணர்வுப்பூர்வமாகப் பயிற்சி செய்ய ஊக்கப்படுத்தினார்.
கடவுளது அழகின் பிரதிபலிப்பைக் கொண்டுள்ள ஒவ்வொரு மனிதரின் நற்செயல்களில் விளையாட்டும் உறுதியாக உள்ளது என்றும், தந்தை, மகன் தூய ஆவியாருக்கு இடையே ஓர் உயிருள்ள உறவாக, மனிதகுலத்திற்கும் உலகத்திற்கும் கடவுள் தன்னையேத் திறக்கிறார் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை 14-ஆம் லியோ.
இயேசுவின் திருஉடல் திருஇரத்தப் பெருவிழா / நிர்வாகத்துறையினருக்கான யூபிலி
ஜூன் 21, 22 ஆகிய நாள்களில் அரசு நிர்வாகத்துறையினருக்கான யூபிலியானது திருஅவையில் சிறப்பிக்கப்பட்டது. ஜூன் 22, ஞாயிறு இயேசுவின் திரு உடல் திரு இரத்தப் பெருவிழாவை முன்னிட்டு உரோம் தூய யோவான் இலாத்தரன் பெருங்கோவிலில் மாலை திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றிய திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள், பாலைவனத்தில் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்க கூடியிருந்த மக்களுக்கு ஏற்பட்ட பசியானது, சூரிய மறைவு போன்று உலகத்தின் மீதும் அதில் உள்ள ஒவ்வொரு உயிரினத்தின் மீதும் ஏற்படும் ஓர் அடையாளம் என்றும், பசி, வறுமை போன்ற துன்பங்களின் மத்தியில் கடவுள் நிழலாக நம்மோடு கூட இருக்கின்றார் என்றும் கூறினார்.
அருள்பணியாளர்களுக்கான யூபிலி
அருள்பணியாளர்கள் அனைவரும் தங்களது வாழ்வில் திருநற்கருணைக்கு முதலிடம் கொடுத்து மறைப்பணியாற்ற வேண்டும் என்றும், இறைமக்களைக் கவனித்துக்கொள்ளவும் திருஅவையில் ஒற்றுமையை வளர்த்தெடுக்கவும் அருள்பணியாளர்கள் அழைக்கப்படுகின்றார்கள் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
திருத்தொண்டர்களுக்கான யூபிலி
ஜூன் 23, 24 ஆகிய நாள்களில் அருள்பணித்துவ மாணவர்களுக்கான யூபிலியானது திருஅவையில் சிறப்பபிக்கப்பட்டது. வெளியிடங்களுக்குச் சென்று பணிபுரியும் மறைபணித்திருஅவையின் பணியாளர்களாகவும், மீட்கும் இறைவார்த்தையை அறிவிப்பவர்களாகவும் திருப்பயணிகளாக மட்டுமல்லாது, நம்பிக்கையின் சான்றுகளாகவும் செயல்படுகிறார்கள் என்றும் உரைத்தார் திருத்தந்தை.
ஆயர்களுக்கான யூபிலி
ஜூன் 25 ஆயர்களுக்காக சிறபிப்பிக்கப்பட்ட யூபிலியை முன்னிட்டு ஆயர்களை சந்தித்த திருத்தந்தை அவர்கள், ஆயர்கள் விவேகமுடன் தலைமைத்துவம், உரையாடல் மற்றும் ஒன்றிணைந்து பயணித்தலில் (synodality) பயிற்சி செய்தல் வேண்டும் என்றும், செல்வப்பற்று மற்றும் ஒருதலைப் பற்றிலிருந்து விலகி எளிமையாகவும் தாராள மனதுடனும் வாழ்வது அவசியம் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் எதிர்நோக்கின் சாட்சிகளாகவும், ஒன்றிப்பு மற்றும் பணியார்வம் கொண்டவர்களாகவும், அடிப்படை நற்பண்புகள், அத்தியாவசிய நற்பண்புகள் கொண்டவர்களாகவும், ஏழ்மை மற்றும் கற்பு வார்த்தைப்பாட்டிற்கு நேர்மையுள்ளவர்களாகவும், இறையியல் வாழ்க்கை கொண்டு சான்றுபகர்பவர்களாகவும் இருக்க வலியுறுத்தினார்.
இயேசுவின் திருஇருதயப் பெருவிழா
ஜூன் 27, வெள்ளிக்கிழமை இயேசுவின் திருஇருதயப் பெருவிழாவை முன்னிட்டு வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் 32 பேரை குருத்துவ அருள்பொழிவு செய்து, அருள்பணியாளர்களுக்கான யூபிலி நிறைவு நாள் திருப்பலியில் நிறைவேற்றினார் திருத்தந்தை அத்திருப்பலியில் மறையுரையாற்றியபோது பெரிய மற்றும் பயங்கரமான மோதல்களின் காலத்தில், நம்மைத் தழுவும் கடவுளுடைய அன்பு உலகளாவியது என்பதையும், அவருடைய பார்வையில் நம்மில் எந்த வகையான பிரிவினைகளுக்கும் வெறுப்புக்கும் இடமில்லை என்பதையும் அவர் அன்பு நமக்கு நினைவூட்டுகின்றது என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
கடவுளின் மகிழ்ச்சியைப் பற்றியும், அவரது இதயத்தின்படி அன்பு செய்து பணியாற்றும் ஒவ்வொரு மேய்ப்பனின் மகிழ்ச்சியைப் பற்றியும் எடுத்துரைக்கும் நற்செய்தியின் நல்ல ஆயன் பகுதியானது இறைத்தந்தையைப் போல நாமும் தொண்டுப்பணியாற்றி வாழவும், அவரது விருப்பத்தை நம்மில் வளர்த்துக் கொள்ளவும் அழைப்புவிடுக்கின்றது என்று கூறினார் திருத்தந்தை.
திருத்தூதர்களான தூய பேதுரு மற்றும் தூய பவுல் பெருவிழா
வெவ்வேறு பாதைகளில் பயணித்து வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டிருந்த திருத்தூதர்கள் தூய பேதுரு மற்றும் தூய பவுல் இருவரும் நற்செய்தியின் வெளிப்படையான தன்மையைக் கொண்டு எதிர் எதிராக இருந்துள்ளனர் என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், தூய ஆவியின் வாழும் ஒன்றிப்பு மற்றும் பன்முகத்தன்மையில் ஓர் பயனுள்ள இணக்கத்துடன் வாழ்ந்தவர்கள் அவர்கள் என்றும் மொழிந்தார்.
இவ்வாறு திருஅவையில் ஜூன் மாத்தில் பல்வேறு யூபிலி விழாக்கள் மிகச்சிறப்பான முறையில் சிறப்பிப்பிக்கப்பட்டன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்