காசாவின் பாதிக்கப்பட்ட மக்களை திருஅவை ஒருபோதும் கைவிடாது!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
காசாவில் இடம்பெற்று வரும் தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட மக்களை, திருஅவை ஒருபோதும் கைவிடாது என்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் நம்பிக்கை தெரிவித்துள்ளார் எருசலேமின் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை கர்தினால் Pierbattista Pizzaballa.
காசாவிற்கு அண்மையில் பயணம் ஒன்றை மேற்கொண்டபோது இடம்பெற்ற இந்தச் செய்தியாளர் சந்திப்பில், எருசலேமின் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை கர்தினால் Pierbattista Pizzaballa மற்றும் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை மூன்றாம் தியோபிலோஸ் இருவரும் கலந்துகொண்டு கூட்டாக தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
மேலும், இச்செய்தியாளர் சந்திப்பின்போது, மக்கள் மீது தாங்கள் கொண்டிருக்கும் ஆழ்ந்த அக்கறையை வெளிப்படுத்திதுடன், அமைதி மற்றும் மனிதாபிமான உதவிக்கும் அழைப்பு விடுத்தனர்.
விசுவாசத்தைப் பொருட்படுத்தாமல், காசாவின் துயருறும் மக்களை, திருஅவை ஒருபோதும் கைவிடாது என்பதை இருவரும் வலியுறுத்திய அதேவேளை, இந்தப் பேரழிவின் மத்தியில் கிறிஸ்துவின் பிரசன்னத்தையும் எடுத்துக்காட்டினர்.
நெருக்கடியின் போது நம்பிக்கை மற்றும் உடனிருப்புக்கான ஆதாரமாக, திருஅவையின் பங்கை இரு தலைவர்களும் எடுத்துக்காட்டியதுடன், காசாவில் நிலவிவரும் தற்போதைய மனிதாபிமான நெருக்கடியைக் கண்டித்து, அது தார்மீக ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதையும் உறுதிப்படக் கூறினர்.
போரை முடிவுக்குக் கொண்டுவரவும், பிணையக் கைதிகளை விடுவிக்கவும், காசா மற்றும் புனித பூமியில் மனித மாண்பை மீட்டெடுக்க ஒரு நலப்படுத்தும் செயல்முறையைத் தொடங்கவும் அவர்கள் உலகத் தலைவர்களிடம் கூட்டு வேண்டுகோள் (joint appeal) ஒன்றையும் விடுத்தனர்.
இறுதியாக, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் கருத்துக்களையும், இறைவார்த்தைகளையும் மேற்கோள் காட்டி, பொதுமக்களைப் பாதுகாக்கவும், பன்னாட்டுச் சட்டத்தை மதிக்கவும் வலியுறுத்தியதுடன், உலகளாவியச் சமூகம் செயல்பட வேண்டிய தார்மீகப் பொறுப்பையும் செய்தியாளர்களிடம் சுட்டிக்காட்டினர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்