MAP

உலக இளைஞர் ஆண்டில் பங்கேற்றோர் உலக இளைஞர் ஆண்டில் பங்கேற்றோர்  

நேர்காணல் – இளைஞர்களின் தனித்தன்மையும், எதிர்கொள்ளும் சவால்களும்

ஏற்புடைய வாழ்விற்கான போராட்டம் – இளையோர்க்கான வாழ்வியல் சிந்தனைகள் என்ற புத்தகத்தின் ஆசிரியர் அருள்பணி. சந்தோஷ் – குமார் அப்பு.
நேர்காணல் - அருள்பணி சந்தோஷ்

மெரினா ராஜ் – வத்திக்கான்

ஒரு நாட்டினது எதிர்காலத்தை சிறந்த முறையில் கட்டி எழுப்பும் சாதனங்களாக காணப்படுபவர்கள் இளைஞர்கள். ஒரு நாட்டினுடைய ஆணிவேராக இளைஞர்கள் காணப்படுகின்றனர். “விளையும் பயிரை முளையிலே தெரியும்” என்ற பழமொழிக்கேற்ப ஓர் இளைஞன் நாட்டினுடைய வளர்ச்சிக்கு எவ்விதம் பங்காற்றுவான் என்பது அவனது சிறு வயது நடவடிக்கைகளின் வழியாக அறிந்து கொள்ள முடிகின்றது. புதிய ஆக்கத்திறன்களையும், சுறுசுறுப்பான செயற்பாடுகளையும், தர்க்க ரீதியான சிந்தனைகளையும் கொண்டவர்களாக இளைஞர்கள் காணப்படுகின்றனர். இளைஞர்களின் செயல்பாடுகளை ஒழுங்கு படுத்துவதன் வழியாக மேம்பட்ட சமுதாயத்தை உலக தரத்தில் நம்மால் ஏற்படுத்த முடிகின்றது. ஜூலை மாதத்தின் இறுதியில் இளைஞர்களுக்கான யூபிலியானது திருஅவையில் சிறப்பிக்க இருப்பதை முன்னிட்டு இன்றைய நமது  நேர்காணலில் இக்கால இளைஞர்களின் தனித்தன்மை மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து நம்முடன் பகிர்ந்து கொள்ள இருப்பவர் அருள்பணி. சந்தோஷ் – குமார் அப்பு.

தக்கலை மறைமாவட்டத்தை சார்ந்த, அருள்பணி சந்தோஷ்-குமார் அப்பு அவர்கள், கோட்டயம் புனித தாமஸ் குருத்துவக் கல்லூரியில் தத்துவயியலையும், சென்னை பூவிருந்தவல்லி தூய திருஇருதய குருத்துவக் கல்லூரியில் இறையியலையும் பயின்றவர். உரோம் தூய கிரகோரியன் திருப்பீடக் கல்லூரியில் கோட்பாட்டு இறையியலில் முதுகலைக் கல்வியைப் பயின்ற தந்தை அவர்கள், உரோம் தூய சலேசியன் திருப்பீடக் கல்லூரியில் இளைஞர் பணியில் முனைவர் பட்டம் பெற்றவர். இளைஞர்களுக்கான எழுச்சியூட்டும் கருத்துக்களை எழுத்து வடிவமாகவும் குரல் ஒலியாகவும் பகிர்ந்து வருபவர். ஏற்புடைய வாழ்விற்கான போராட்டம் – இளையோர்க்கான வாழ்வியல் சிந்தனைகள் என்ற புத்தகத்தின் ஆசிரியர். தற்போது சென்னையிலுள்ள தூய திருஇருதயக் குருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருக்கும் தந்தை சந்தோஷ் அவர்களை இளைஞர்களின் தனித்தன்மை, அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து எடுத்துரைக்க எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம். 

இன்றைய இளையோரின் தன்மை மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்

இளையோர் யார்? என்னும் கேள்வி எழுவதுண்டு. உள்ளத்தில் இளமையாய் உணர்வோர் அனைவரும் இளையோரே என்னும் உளவியல் சார்ந்த வரையறை இருப்பினும், 16 வயது தொடங்கி 29 வயது வரையில் உள்ளவர்களையே இளையோர் எனலாம். இதையே, 2017 இல் வெளிவந்த இளையோர் மாமன்றத்திற்கான தயாரிப்பு ஆவணம் கூறியது. அப்படிப் பார்த்தால், இன்றைய இளையோர்கள் அனைவரையும் Gen-Z என்னும் வயது பிரிவுக்குள் கொண்டு வரலாம். இவர்கள் 1996 முதல் 2009 வரையிலான ஆண்டிற்குள் பிறந்தவர்கள். இதற்குப் பின்னர் பிறந்தவர்களை Gen-Alpha என வகைப்படுத்துகிறார்கள்.

Gen-Z தலைமுறைக்கென பல தனித்தன்மைகள் உள்ளன. அவற்றை நுண்கருவிப் பயன்பாடு, மற்றும் பொருளாதார தாராளமயம் என்னும் இரண்டு பரிமாணங்களை அடிப்படையாகக் கொண்டு விளக்கலாம்.

முதலாவதாக இவர்களை டிஜிட்டல் தலைமுறையினர் எனலாம். இவர்கள் திறன்பேசிகளின் காலத்தில் பதின்வயதை அடைந்தார்கள். ஆகையால், நுண்கருவிகள் அல்லது Smart gadgets மூலமாக உலகைக் நோக்கிப் பார்க்கிறார்கள். சமூகம், பொருளாதாரம், அரசியல்,  மதம் போன்றவற்றைப் பற்றியப் புரிதல்களை அதன் வழியாக பெறுகிறார்கள். கல்வி கற்றல், நோய்கள் மற்றும் மருத்துவம் குறித்தத் தகவல்களை சேகரித்தல், உறவுகளை பேணுதல், புதிய உறவுகளை ஏற்படுத்துதல், அவர்களோடு உறவாடுதல், தகவல்களைப் பரிமாறுதல், பாசத்தை வெளிப்படுத்துதல் என அனைத்தையும் அதன் வழியாகவே செய்கிறார்கள். நட்பும் காதலும் பெரும்பாலும் அதிலே உருவாகிறது. ஒன்றில் வளர்கிறது இல்லையென்றால் தேய்கிறது. நுண்கருவிகளின் தாக்கம் அதிகம் இருப்பதால், அதனுடைய தாக்கமும் வாழ்வில் ஏற்படுகிறது.  

இரண்டாவதாக பொருளாதார ரீதியில் இத்தலைமுறையினரைப் பார்க்கலாம். இத்தலைமுறையினரின் பெற்றோர் 1992 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட புதிய பொருளாதார திட்டத்திற்குப் பிந்தைய அரசியல்-பொருளாதாரச் சூழல்களில் வாழ்கிறார்கள். சற்று விளக்குதல் சிறந்தது. இந்தியாவின் பிரதமராக திரு. பி.வி. நரசிம்ம ராவ் 1992 பதவியேற்ற போது, அவரது அமைச்சரவையில், திரு. மன்மோகன் சிங் அவர்கள் நிதி அமைச்சராக அங்கம் வகித்தார். அவர், இந்தியாவின் பொருளாதாரத்தை புதிய திசையை நோக்கி நகர்த்தினார். அதுவரை இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகள் சமவுடைமையை மையப்படுத்தியதாய் இருந்தது. அதாவது அரசின் திட்டங்கள் அனைத்தும், எல்லா மக்களையும் சமமாக பாவிக்கும் நிலைக்குள் இருந்தது. இதன் அடிப்படையில், கல்வி, மருத்துவம், தொழிற்சாலைகள், நிறுவனங்கள், போக்குவரத்துத் துறைகள், வேலைவாய்ப்புகள் என அனைத்தும் அரசே நடத்தும் விதத்தில் அமைந்திருந்தன. இதில் குறைபாடுகள் இருந்தன, வறுமையும் நிலவியது. இக்குறைகளைப் போக்க, சந்தையை மையப்படுத்திய பொருளாதாரத் திட்டம் முன்வைக்கப்பட்டது. இது, தாராளமயமாக்கம், உலகமயமாக்கம் மற்றும் தனியார்மயமாக்கம் என விரிந்தது. இம்மாற்றமானது, மக்களின் வாழ்க்கை முறையை மாற்றி அமைத்தது. ஒவ்வொரு மனிதரும் தத்தமது வாழ்க்கையை தங்களது முயற்சிகளால் அமைத்துக் கொள்ள வேண்டும் என்னும் நிலை உருவாகியது. கல்வி, மருத்துவம் என அனைத்தையும் தங்களது பணத்தால் கவனித்துக் கொள்ள வேண்டும், தொழில்களை உருவாக்குவதும், வேலையைத் தேடுவதும் தனிநபரின் பொறுப்பாக மாறியது. இதன் வழியாக மக்கள் மத்தியில் சமூக உணர்வும், கூடி வாழ்தல் இயல்பும் குறைந்து, தன்னை மையப்படுத்திய வாழ்வாக உருமாறியது. பொதுநலன் குறைந்து சுயநலன் மேலோங்கியது. இவர்களால் வளர்க்கப்பட்ட பிள்ளைகள், இன்று தன்னை மையப்படுத்தியவர்களாகவும், சுய வளர்ச்சியில் அதிகம் அக்கறை கொண்டவர்களாவும் மாறிவிட்டார்கள். ஆங்கிலத்தில் இதை individualism என்கிறார்கள்.

மேலும் பல காரணிகள் இருப்பினும், மேற்கூறிய இரண்டின் அடிப்படையில் இன்றைய தலைமுறையினரின் பண்புகளை வகைப்படுத்தலாம்.

 நுண்கருவிகளின் தாக்கம்.

1.          இன்றைய காலத்தைப் பற்றி Hypermarket போல, Hyperaware, Hyperconnected என்று சொல்கிறார்கள். அதாவது உச்சங்களின் காலம். மேல, மேல அதுக்கும் மேல... என்னும் நிலை உருவாகி உள்ளது. உச்சமானது உறவுகளின் அடிப்படையில் பேச வேண்டுமென்றால், சமூக ஊடங்கள் வழியாக எப்போதும் இணைப்பில் இருக்கும் இளையோர்கள் அதே வேளையில் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் ஒதுக்கப்பட்டதாகவும் கண்டுக் கொள்ளப்படாததாகவும் உணர்கிறார்கள். இக்காரியத்தில் திருஅவையால் பெரும்பணி செய்ய முடியும்.

2.          இரண்டாவதாக, தங்களை ஏற்று அங்கீகரித்து, அவர்களுக்கான அடையாளத்தை ஏற்படுத்தும் சமூக உறவுகளுக்காகவும், சிறு குழுக்களுக்காகவும் அவர்கள் ஏங்குகிறார்கள். நுண்கருவிகளின்றி, முகத்தோடு முகமாக பேசி, அவர்களின் நிறைகளையும் குறைகளையும் கேட்கும் சமவயது குழுக்களுக்கான ஏக்கம் இருக்கிறது. இதை, பங்கு சமூகங்கள் ஏற்படுத்திக் கொடுக்கலாம். முதிர்ச்சி அடைந்த முதிர்வயதினர் இதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து, தேவைப்பட்டால் மட்டும் சில பரிந்துரைகளை முன்வைக்கலாம்.

3.          மூன்றாவதாக, இன்றையை பெற்றோர்களுள் பலரும் பிள்ளைகளுக்கு உறுதுணையாக இருக்க விரும்புகிறார்கள். ஆனால், அதற்கான திறன்களும் மதிநுட்பமும் இல்லை என்பது குறையாகப் பார்க்கப்படுகிறது. இதைப் போக்க, பங்குத்தளங்கள் மற்றும் அன்பியங்களில் பல முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

4.          நான்காவதாக, அரவணைப்பும் பாதுகாப்பும் கொடுக்கும் நிரந்தர அமைப்புகளுக்கான ஏக்கம் அவர்களுக்குள் இருக்கிறது. நுகர்வு கலாச்சாரம், பயன்படுத்தி விட்டு தூக்கி வீசும் கலாச்சாரம் நுண்கருவிகளின் காலத்தில் மேலோங்கி இருக்கிறது. ஆகையால் அவர்கள் நிரந்தரமான பாதுகாப்பு கொடுக்கும் அமைப்புகளுக்காக ஏங்குகிறார்கள். சிலர், காதல், திருமணம் என நிரந்தரமானவற்றைக் காண முயல்கிறார்கள். பங்குத்தளங்கள் இளையோரை அரவணைக்கும் நிரந்தர அமைப்பாக மாறலாமே.

5.          ஐந்தாவாதாக, நிரந்தரமாக உணர்ச்சிகளைத் தூண்டும் போக்கு நுண்கருவிகளின் காலத்தில் ஏற்பட்டிருக்கிறது. ஒன்றன்பின் ஒன்றாக ஆசைகள் அலைமோதுகின்றன. எதிலும் மனதை குவிக்காமல், மனம் அலைகிறது. எதிலும் நிறைவு கொள்ளாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. நிதானமாக யோசித்துத் தீர்மானங்கள் எடுக்கும் நிலை அருகி விட்டது. எப்போதும், எதாவது செய்து கொண்டிருக்க வேண்டும், அது தொந்தரவுகளாக, மனதை குழப்புவதாக, சிந்தனையை மழுங்கடிப்பதாக இருந்தாலும் கவலைகள் இல்லை. நிரந்தர தொந்தரவுகள் பொழுதுபோக்காக மாறிவிட்டது எனலாம். இதைக்களைய திசையமைவு பயிற்சிகளை பங்குத்தளங்களில் ஏற்படுத்தலாம்.

சந்தைப் பொருளாதாரத்தின் தாக்கம்.

6.          முதலாவதாக, வேர்களை இழந்த சொந்தமான வரலாறு இல்லாத சமூகமாக மாறிவிட்டார்கள் எனலாம். பணம் சம்பாதிக்க வேண்டும், அதற்கான முயற்சிகளை தாங்களே எடுக்க வேண்டும் என்னும் நிலை ஏற்பட்டதால், பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் சொந்த ஊர்களையும், நிலபுலன்களையும் விட்டுவிட்டு நகரங்களுக்குப் புலம் பெயர்ந்தார்கள். இதன் விளைவாக, அவர்கள், மண்ணோடு பிணைக்கும் கலாச்சாரக் கூறுகளைப் பற்றி அதிகம் அக்கறை கொள்வதில்லை. வாழ்வைத் தாங்கும் சமூக உறவுகளின் வேர்களை இழந்தவர்களாக மாறிவிட்டார்கள். வேர்களை இழந்த மரங்கள் வாடும் என்பது இயற்கையின் நியதி. அதுபோல, இன்றைய சிக்கல் என்னவென்றால், வாழ்வில் அழுத்தம் ஏற்படும் போது, அதைத் தாங்குவதற்கான ஊர், உறவு சார்ந்த உதவிகள் இல்லாமல் போய்விடுகிறது. தங்களுடைய அழுத்தங்களே தாங்களே கையாள வேண்டும் என்னும் நிலை ஏற்படுதவால், மன அழுத்தங்களுக்கும் மன நோய்களுக்கும் தற்கொலை மனப்பான்மைகளுக்கும் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது இளையோர் மத்தியில் பெருமளவு காணப்படுகிறது.

7.          இரண்டாவதாக, இருபது வயதிற்குள் எப்படியாவது வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும், நிறைய சம்பாதிக்க வேண்டும் என்னும் எண்ணம் இன்று மேலோங்கி இருக்கிறது. போட்டித் தேர்வுகளுக்கான தயாரிப்புகள் தரும் மன அழுத்தங்கள், அரசு வேலைகளுக்கான கூட்டம் அலைமோதும்  போக்கால் ஏற்பட்டுள்ள அச்சங்களை போக்க, வழிவகைகள் செய்ய வேண்டும்.

8.          மூன்றாவதாக, உடைமைகளின் அடிப்படையில் தன்னடையாளம் உருவாக்கும் போக்கு ஏற்பட்டிருக்கிறது. சொந்தமாக வைத்திருக்கும் வீடு, உடைமைகள், சந்தையில் பொருள் வாங்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் மனிதரின் அடையாளம் நிர்ணயிக்கப்படும் காலம் ஏற்பட்டாயிற்று. அதனால், அவர்கள் அறம், பொதுநலம், கல்வி, ஆகியவற்றின் அடிப்படையில் தன்னடையாளைத்தை ஏற்படுத்துவதற்கான பயிற்சி இல்லாமல் போய்விட்டது. இதற்கான பயிற்சிகள் இன்றும் அவசியம்.

9.          அடுத்ததாக, கிறிஸ்தவர்களைப் பொறுத்த வரைக்கும் திருச்சபையில் இளையோரின் பங்கேற்பு குறைந்து வருகிறது. அவர்கள் விலகி நிற்கும் போக்கு நிலவுகிறது. சந்தைப் பொருளாதாரமானது, மக்களின் பொருள் வாங்கும் திறனை அதிகரிக்கச் செய்திருப்பதோடு, பல புதிய பொழுது போக்கு அம்சங்களையும் பொதுவெளியில் புகுத்தி இருக்கிறது. கோயிலுக்குச் செல்வதைவிட, வணிக வளாகங்களுக்குச் சென்று பொருள் வாங்குதல், கேளிக்கைகளில் ஈடுபடுதல் ஆகியவை நிறைவு தருவதாகச் சொல்கிறார்கள்.கோயில் வெறுமனே ஆன்மீக தளங்களாக மட்டும் பார்க்கும் நிலை ஏற்பட்டு விட்டது. தனிமனித ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு உதவும் தளமாக பங்குக் கோயில்கள் உருமாறவில்லை என்பது குறையாகப் பார்க்கப்படுகிறது

இத்தலைமுறையினரில் காணப்படும் நல்லவற்றைப் பார்த்தல் சிறப்பாக இருக்கும்.

மனித வரலாற்றில், வேறு எத்தலைமுறையினரையும் விட இத்தலைமுறையினர் கல்வியில் சிறந்து விளங்குகிறார்கள். அறிவுபூர்வமாக அவர்களை வழிநடத்த வேண்டும்.

நான்காவதாக, வேலைவாய்ப்பிலும் தொழிலிலும் பெண்களின் பங்கேற்பு அதிகரித்திருக்கிறது. சொல்லிலும் நடத்தையிலும் பெண்களை மதிக்கும் போக்கு அதிகரிக்க வேண்டும்.

பல்திறன் பெற்றவர்களாக இருக்கிறார்கள். அவற்றைப் பயன்படுத்தும் தளங்கள் பல உருவாக வேண்டும்.

புதியத் தளங்களையும் வெளிகளையும் தேடுவதில் இவர்களுக்குத் தயக்கம் இல்லை. புதுமைகளைக் கண்டு அஞ்சுபவர்கள் அல்ல. புதுமைகள் புகுத்துதல் இன்று அவசியம்.

தடைகளின் நடுவே எதிர்நோக்கை வெளிப்படுத்துகிறார்கள். இவர்களைப் புரிந்து கொண்டு ஏற்றப்பணி ஆற்றினால், இளையோர் வாழ்வு நலம் பெறும், திரு அவை பயன்பெறும், கிறிஸ்துவின் புகழ் ஓங்கும்.

நன்றி

சந்தோஷ்-குமார் அப்பு

தூய நெஞ்சக் குருத்துவக் கல்லூரி

பூந்தமல்லி, சென்னை,

தமிழ்நாடு, சென்னை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 ஜூலை 2025, 08:28