நோயுற்றவர்கள் மீது இரக்கம், அன்பை அளிக்கும் அர்ப்பணமுள்ள பணி
மெரினா ராஜ் - வத்திக்கான்
புனித கமில்லஸின் விழாவைக் கொண்டாடும் கமில்லஸ் சபை அருள்பணியாளர்கள் அனைவரும் மிகுந்த நம்பிக்கையுடனும், ஆன்மிக ரீதியாக மட்டுமல்லாமல், சுறுசுறுப்பான வாழ்க்கை, அன்றாட வாழ்க்கையின் உறுதியான தன்மை கொண்டு நோயுற்றவர்கள் மீது இரக்கத்தையும் அன்பையும் வழங்கும் அர்ப்பணமுள்ள பணிக்குத் தொடர்ந்து சான்றளித்து வருவதாக எடுத்துரைத்துள்ளார் அருள்பணி Massimo Miraglio.
ஜூலை 14 புனித கமில்லஸ் தே லில்லிஸ் திருவிழாவை முன்னிட்டு பீதேஸ் எனப்படும் கத்தோலிக்க நிறுவனத்திற்கு வழங்கிய செய்தியில் இவ்வாறு எடுத்துரைத்துள்ளார் கமில்லஸ் மறைப்பணியாளர்கள் சபையைச் சார்ந்தவரும் ஹெய்ட்டியின் Pourcine Pic-Makaya பங்குத்தள தந்தையுமான அருள்தந்தை Massimo Miraglio.
துன்புறும் ஹெய்ட்டி மக்களுக்கும், ஏழைகள், நோயாளிகள் என அனைவருக்கும் உதவுவதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் உணவு தேவைப்படும் நிலையில் இருப்பவர்களுக்கு உணவும், மருத்துவ சிகிச்சை தேவைப்படும் மக்களுக்காக சிகிச்சைகள் வழங்க மருத்துவமனையின் கதவுகள் எப்போதும் திறந்து தயாராக இருக்கும் என்றும் விளக்கியுள்ளார் அருள்பணி Miraglio..
பல ஆண்டுகளாக ஊனமுற்ற குழந்தைகளுக்கான புனித கமில்லோ மருத்துவமனை ஃபாயர் அமைப்புடன் இணைந்து ஊனமுற்ற குழந்தைகளுக்கு போர்ட் ஓ பிரின்ஸில் ஒரு மருத்துவமனையை செயல்படுத்தி வருகின்றது என்று தெரிவித்துள்ள அருள்பணி Miraglio அவர்கள், அங்குப் பணியாற்றும் அருள்சகோதரிகள் பல ஆயிரம் சிரமங்கள் இருக்கும் சூழலிலும் மருத்துவமனையைத் தொடர்ந்து நடத்தி வருகின்றார்கள் என்றும் கூறியுள்ளார்.
ஆண்டின் எல்லா நாள்களிலும் திறந்திருக்கும் இந்த மருத்துவமனைய்யில் அருள்சகோதரிகளும் அருள்சகோதரர்களும், ஒவ்வொரு நாளும் நோயுற்றவர்களையும் ஏழைகளையும் வரவேற்கின்றனர் என்றும், அவர்களது வாழ்க்கைக்கான ஒரு தீர்வையும் தொடர்ந்து முன்னேறுவதற்கான வழிகளையும் தேடி வருகிறார்கள் என்றும் எடுத்துரைத்துள்ளார் அருள்பணி Miraglio.
ஏழை மற்றும் நோய்வாய்ப்பட்ட மக்களுடன் குறிப்பாக நெருக்கமாக இருக்க பாடுபடுவதாகவும், திருஅவையில் மேற்கொள்ளும் அனைத்து திட்டங்களும் எப்போதும் பல்வேறு செயல்பாடுகள் வழியாக மக்களின் பராமரிப்பு மற்றும் ஆதரவை அளிக்கும் நோக்கமாகக் கொண்டுள்ளன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் அருள்பணி Miraglio. (Fides)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்