MAP

காசாவில் துயருறும் பெண்கள் காசாவில் துயருறும் பெண்கள்  

துயருறும் காசா மக்களுக்கு தென்னாப்பிரிக்க ஆயர்கள் ஆதரவு!

தென்னாப்பிரிக்கா, போட்ஸ்வானா மற்றும் எஸ்வதினி நாடுகளைச் சேர்ந்த ஆயர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தென்னாப்பிரிக்க கத்தோலிக்க ஆயர் பேரவை (SACBC), பன்னாட்டு நீதிமன்றத்தில் இஸ்ரேலுக்கு எதிரான அந்நாட்டின் இனப்படுகொலை குற்றச்சாட்டுக்குத் தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

காசாவின் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட படுகொலைகள் தொடர்பாக, பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் இஸ்ரேலுக்கு எதிராக தென்னாப்பிரிக்க அரசு தாக்கல் செய்த குற்றச்சாட்டுக்கு அந்நாட்டு ஆயர்கள் தங்கள் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாகக் கூறியுள்ளது பீதேஸ் செய்தி நிறுவனம்.

கடந்த வாரம் காசாவில் உள்ள திருக்குடும்ப பங்குத்தள வளாகத்தின் மீது இஸ்ரேல் இராணுவம் குண்டுவீச்சு நடத்தியதில் 3 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 9 பேர் காயமடைந்தனர் என்றும், இதன் விளைவாக தென்னாப்பிரிக்க ஆயர் பேரவை இந்த ஆதரவை வழங்கியுள்ளது என்றும் உரைக்கிறது அச்செய்தி நிறுவனம்.

கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதியன்று, ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு இஸ்ரேல் தற்போது நிகழ்த்திவரும் பதில் தாக்குதல் இனப்படுகொலை மற்றும் இன அழிப்புக்குச் சமம் என்று கர்தினால் ஸ்டீபன் பிரிஸ்லின் தலைமையிலான ஆயர்கள் கூறியுள்ளதையும் எடுத்துக்காட்டியுள்ளது அச்செய்தி நிறுவனம்.

மோதலுக்கு ஆயுதங்களை வழங்கும் நாடுகளை ஆயர்கள் விமர்சித்துள்ளதாகவும், மேலும் புறக்கணிப்புகள் மற்றும் போராட்டங்கள் உள்ளிட்ட உலகளாவிய வன்முறையற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களுடன் இணைந்து போர்நிறுத்தம் மற்றும் அனைத்துப் பிணையக்கைதிகளையும் விடுவிக்கவும்  வலியுறுத்தியுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளது அச்செய்திக் குறிப்பு.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 ஜூலை 2025, 12:11