வியாட்நாம் திருஅவையில் பெருகும் அருள்பணித்துவத்திற்கான அழைப்பு
ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்
இயேசுவின் திருஇதயத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஜூன் மாதத்தில், இவ்வாண்டு வியாட்நாமின் கத்தோலிக்கத் திருஅவையில் 40 பேர் புதிய அருள்பணியாளர்களாகத் திருநிலைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும், இவர்கள் வியாட்நாம் திருஅவையின் விலையுயர்ந்த பரிசாக அமைந்துள்ளார்கள் என்றும் fides செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Da Nang மறைமாவட்டத்தைச் சேர்ந்த 6 பேர், Mekong Delta-வில் உள்ள Can Tho மறைமாவட்டத்தைச் சேர்ந்த 13 பேர் மற்றும் Ho Chi Minh உயர்மறைமாவட்டடத்தைச் சேர்ந்த 21 பேர் என மொத்தம் 40 பேர் அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று அச்செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜூன் 24, அன்று Da Nang மறைமாவட்டப் பேராலயத்தில் நிறைவேற்றப்பட்ட ஆறு அருள்பணியாளர்களின் குருத்துவ அருள்பொழிவுத் திருப்பலியின் போது ஏராளமான விசுவாசிகள் கலந்து கொண்டதாகவும், இப்புதிய அருள்பணியாளர்கள் ஒவ்வொருவரும் ஒரு கிறிஸ்துவாகவும், கடவுளுடைய மக்களின் போதகர்களாகவும், தங்களுக்காக வாழாமல், எல்லா மக்களுக்கும் எல்லாமுமாகவும் வாழ அர்ப்பணிக்கப்பட்டுள்ளனர் என்று Hue-ன் பேராயர் Joseph Dang Duc Ngan கூறியுள்ளார்.
மேலும், ஒருவர் அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்ட நாளிலிருந்தே முழுமையான குருவாக மாறுவதில்லை; குருத்துவம் என்பது, கிறிஸ்துவில் நாள்தோறும் வளர்ந்து, தூய ஆவியானவரின் ஆற்றலால் கடவுள் மற்றும் திருஅவையின் பணிகளை மகிழ்ச்சியுடனும், உண்மையான அன்புடனும் நிறைவேற்றும் ஒரு பயணம் என்றும் பேராயர் Duc Ngan கூறியதாக fides செய்தி நிறுவனம் எடுத்துரைத்துள்ளது.
ஜூன் 25 அன்று, Can Tho மறைமாவட்டத்தின் Soc Trang பேராலயத்தில் 13 புதிய அருள்பணியாளர்களை திருநிலைப்படுத்திய ஆயர் Peter Le Tan Loi அவர்கள், இப்புதிய அருள்பணியாளர்கள் அவர்களது பணியில் உண்மையுடனும், பணிவுடனும், தூய்மையுடனும் வாழவும், அவர்களோடு இறைவேண்டலில் ஒன்றித்திருக்குமாறும், திருஅவையின் மக்களை கேட்டுக்கொண்டதாகவும் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜூன் 27 அன்று Ho Chi Minh மறைமாவட்டத்தில் பேராயர் Joseph Nguyen Nang அவர்களின் தலைமையில், 21 புதிய அருள்பணியாளர்கள் திருநிலைப்படுத்தப்பட்டார்கள் எனவும், அவ்வருள்பணியாளர்கள் இன்றைய காலத்தின் இயந்திரங்களைப் போல அல்லாமல் ,திருப்பலி, மேய்ப்புப்பணி, பிறரன்புச் செயல்கள் என அனைத்திலும் இறைவனின் திருவுளத்தைக் கருத்தில் கொண்டு மக்களுக்கு நற்செய்தியை எடுத்துச் செல்பவர்களாக வாழ வேண்டுமென்று பேராயர் கூறியதாகவும் fides செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், Ba Ria மறைமாவட்டத்தில் உள்ள Bai Dau அன்னை திருத்தலத்தில், இயேசுவின் திருஇதய பெருவிழாத் திருப்பலியின் போது ஆயர் Emmanuel Nguyen Hong Son அவர்கள், 6 குருமடமாணவர்களை திருத்தொண்டர்களாகத் திருநிலைப்படுத்தினார் என்றும், இந்நிகழ்வுகள், வியட்நாம் திருஅவையின் உயிரோட்டத்தையும், கடவுளின் பேரருளினால் ஏற்படும் புதிய தலைமுறையின் அருள்பணித்துவ அழைத்தலையும் பிரதிபலிக்கின்றன என்றும் fides செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்