இந்தோனேஷியா - சுலாவெசி தீவு மக்களின் உறவு ஒன்றிப்பு!
ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்
இந்தோனேசியாவில் சிறுபான்மையினராக உள்ள கத்தோலிக்கர்கள், உரையாடல் மற்றும் இரக்கத்தின் வழியாக இஸ்லாமிய மக்களுடன் ஒன்றாக பயணிப்பதாக கடந்த ஜூன் 29, ஞாயிறன்று திருத்தந்தை 14 ஆம் லியோ அவர்களிடமிருந்து பால்யம் பெற்ற Makassar மறைமாவட்டத்தின் பேராயர் Franciskus Nipa கூறியதாக fides செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பால்யம் பெற்ற இந்த நிகழ்வு, திருத்தந்தையுடனான வலிமையான ஒன்றிப்பை உணர்த்திய ஒரு தருணமாக அமைந்தது என்றும், திருத்தந்தை 14ஆம் லியோ ஒரு மறைப்பணியாளராக இருந்ததால், மறைபணியாளர்களின் வாழ்க்கையை நன்கு புரிந்துகொள்கிறார் என்றும் பேராயர் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாவின் மிகப்பெரிய தீவுகளில் ஒன்றான சுலாவெசி தீவு இரண்டு கத்தோலிக்க மறைமாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது என்றும், 1.3 கோடி மக்கள்தொகையினைக் கொண்ட அத்தீவில் ஏறக்குறைய 2.5 இலட்சம் கத்தோலிக்கர்கள் வாழும் அப்பகுதி 56 பங்குத்தளங்களை கொண்டுள்ளது என்றும் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சுலாவெசி தீவில் பல ஆண்டுகள் மக்களோடு நேரிடையாகப் பணியாற்றிய பேராயர் அவர்கள், தனது ஆயர் திருநிலைப்பாட்டின் விருதுவாக்கு Misericodiam volo எனப்படும் “எனக்கு இரக்கம் வேண்டும்” அதாவது கடவுள் அவரிடம் ஒப்படைத்த மக்களுக்காக முழுமையாக பணியாற்ற வேண்டும் என்ற ஆழமான விருப்பத்தையும் செய்தி நிறுவனம் எடுத்துரைத்துள்ளது.
2021, மார்ச் 28-ஆம் நாள் குருத்து ஞாயிறன்று, மக்காசார் நகரில் உள்ள இயேசுவின் திரு இதய பேராலயத்தில் ஒரு குண்டுத் தாக்குதல் இடம்பெற்றது என்றும், இதில் இரண்டு தாக்குதல்காரர்கள் உயிரிழந்ததுடன் குறைந்தது 20 பேர் காயமடைந்தனர் என்றும் பேராயர் செய்தி நிறுவனத்திடம் கவலை தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு தடையையும் கடந்து, ஒவ்வொரு நிகழ்விலும் இறைவன் அளிக்கும் நன்மையைக் கண்டறிய எப்போதும் முயன்று வருவதாக கூறியுள்ள பேராயர், இஸ்லாமியர் போன்ற அனைத்து மத மக்களோடும், அரசு அதிகாரிகளுடனும் நல்லுறவைப் பேணி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இந்தோனேசிய வருகை இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ உறவுகளுக்குப் பலம் சேர்த்தது என்றும், திருத்தந்தையின் வருகைக்கான தயாரிப்பின் போது ஒரு முறை ஆலயத்திலும், அடுத்த முறை மசூதியிலும், இஸ்லாமிய தலைவர்கள் மற்றும் நம்பிக்கையாளர்களை சந்தித்து உறவுகளை மேலும் வலுப்படுத்தியதாகவும் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார் பேராயர் Nipa.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்