MAP

 Consolata சபை மறைப்பணியாளர்கள் Consolata சபை மறைப்பணியாளர்கள்   (Cremildo Alexandre, Rádio Encontro (Nampula, Moçambique))

பயணம் போன்றது மறைப்பணியாளர்களின் வாழ்க்கை

நற்செய்தி என்பது நான்கு சுவர்களுக்குள் பூட்டப்பட்ட ஒன்றாக இல்லாமல், பூமியின் எல்லைகளைக் கடந்து, மனிதகுலத்திற்கு மீட்பு அறிவிக்கப்பட வேண்டும்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

மறைப்பணியாளர்களின் வாழ்க்கை என்பது பயணம் போன்றது என்றும், ஆறு போன்று நிற்காது ஓடிக்கொண்டிருக்கும் நமது பணியில் நமக்காக மக்கள் எங்குக் காத்துக்கொண்டிருக்கின்றார்களோ அங்கு இயேசு நமக்காகக் காத்துக்கொண்டிருக்கின்றார் என்றும் கூறினார் கொன்சலாத்தா சபை மறைப்பணியாளர் Sérgio Warnes.

மறைப்பணியின் போது பல்வேறு இடங்களுக்குச் செல்லும் நாம் ஒரிடத்தில் உணவு உண்கின்றோம், வேறொரு இடத்தில் நீர் அருந்துகின்றோம், ஓரிடத்தில் விழாக்களைக் கொண்டாடுகின்றோம். மற்றொரு இடத்தில் அருளடையாளங்களைச் சிறபிக்கின்றோம். ஓடுகின்ற ஆறுபோல் ஓரிடத்தில் இல்லாது இயங்கிக்கொண்டே இருக்கின்றோம் என்றும் எடுத்துரைத்தார் அருள்தந்தை வார்ன்ஸ்.   

மறைப்பணி என்பது இயேசுவை மக்களிடத்தில் கொண்டு வருவது மட்டுமல்ல, மாறாக மக்கள் ஒவ்வொருவரின் புன்னகை, அன்பின் எளிய செயல்கள், பகிர்வுகள் என எல்லாவற்றிலும் கடவுள் இருப்பதை மக்களுக்கு எடுத்துரைக்கும் பணி என்றும் கூறினார் அருள்தந்தை வார்ன்ஸ்.

பிரேசிலில் உள்ள மனாசில் மறைப்பணியாற்றும் கொன்சாலாத்தா சபை மறைப்பணியாளர்களின் அனுபவங்களை பீதேஸ் என்னும் கத்தோலிக்க செய்தி நிறுவனத்திடம் பகிர்ந்துகொண்ட போது இவ்வாறு தெரிவித்த அருள்தந்தை Sérgio Warnes அவர்கள், மக்களின் தாராள மனப்பான்மை ஆன்மாவை நெகிழ வைக்கும் நிகழ்வுகளில் ஒன்று என்றும், அவர்கள் தங்களிடம் இருந்த சிறியதை தங்களுக்கு வழங்கி உயிருள்ள ஆற்றல் மிக்க நம்பிக்கையைப் பகிர்ந்துகொண்டனர் என்றும் எடுத்துரைத்தார்.

வறுமை என்பது சோகத்தைக் கொண்டதாக இல்லை என்பதற்கு உதாரணமாக அம்மக்கள் திகழ்ந்தார்கள் என்று எடுத்துரைத்த அருள்தந்தை வார்ன்ஸ் அவர்கள், காட்டின் நடுவில் கூட உண்மையான ஆன்மிக செல்வம் உள்ளது, அது தாராளமாக உள்ளது என்பதற்கு அங்கு வாழும் சாதாரண ஏழை எளிய மக்கள் சான்றுகளாக இருக்கின்றார்கள் என்றும் கூறினார்.

நற்செய்தி என்பது நான்கு சுவர்களுக்குள் பூட்டப்படாமல், பூமியின் எல்லைகளைக் கடந்து, மனிதகுலத்திற்கு மீட்பின் நற்செய்தியை அறிவிக்க வேண்டும் என்று எடுத்துரைத்த அருள்தந்தை வார்ன்ஸ் அவர்கள், நற்கருணையில் வீற்றிருக்கும் இயேசுவை ஆற்றின் கரைகள், மர வீடுகள், காடுகள், ஆறுகள் போன்றவற்றைக் கடந்து, அங்கு வாழும் மக்களிடத்தில் அழைத்துச் செல்வது கிறிஸ்தவர்களாகிய நமது கடமை என்றும் வலியுறுத்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 ஜூலை 2025, 13:43