MAP

ஆயர் Christian Carlassare ஆயர் Christian Carlassare 

நற்செய்தியின் அமைதியை எதிர்நோக்கும் தெற்கு சூடான்

நற்செய்தியின் அமைதியை அடிப்படையாகக் கொண்ட மாற்றமே தெற்கு சூடானுக்கு வேண்டும்; அமைதி மட்டுமே எதிர்கால தலைமுறைகளுக்கு வாழ்வையும் வாய்ப்புகளையும் தரக்கூடிய பாதையாகும்: ஆயர் கிறிஸ்டியன் கார்லசாரே

ஜெர்சிலின் டிக்ரோஸ் – வத்திக்கான்

நற்செய்தியின் அமைதியையும், வன்முறையின்மையையும் துணிவுடன் ஏற்றுக்கொள்ள அழைப்பு விடுத்து, 2026 ஆம் ஆண்டு தேர்தலை எதிர்நோக்கி இருக்கும் தெற்கு சூடானின் பலவீனமான நிலை குறித்து எடுத்துரைத்துள்ளார் Bentiu மறைமாவட்ட ஆயர் கிறிஸ்டியன் கார்லசாரே.

கிணறுகள், விருந்தினர் மாளிகை, வகுப்பறைகள் எனப் பல சிறிய அர்த்தமுள்ளத் திட்டங்களை நிறைவேற்றுவது நம்பிக்கை அளிப்பதாகத் தெரிவித்துள்ள ஆயர், பொதுமக்களை  குறிவைத்து நடத்தப்படும் வான்வழித் தாக்குதல் போன்ற வன்முறைகளையும்  கண்டித்துள்ளார்.

தனிமைப்படுத்துதல், ஆயுதமயமாக்கல், சரியான உரையாடலின்மை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்ற நாட்டின் தற்போதைய பலவீனமான நிலையை  எடுத்துரைத்து, செவிசாய்ப்பதை விட முன்னெச்சரிகை நடவடிக்கைகளும், அமைதியை விட வன்முறைகளும் முக்கியத்துவம் பெறுகிறது என்றும் கூறியுள்ளார் ஆயர்.

மேலும், 2021 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஒரு தாக்குதலில் தீவிரமாக காயமடைந்த ஆயர் கார்லசாரே அவர்கள், நாட்டை நிரந்தரமான மோதலும், மனிதாபிமான நெருக்கடிகளும் நிறைந்த சூழலில் வைத்திருக்கவேண்டும் என்பதே சிலரின் நோக்கமாகத் தெரிகிறது என்றும் வருத்தம் தெரிவித்துள்ளார்.

நற்செய்தியின் அமைதியை அடிப்படையாகக் கொண்ட மாற்றத்தை வலியுறுத்தியதோடு, தெற்கு சூடான் மக்கள் வன்முறையற்ற பாதையையே எப்போதும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும், அதுவே மனித நற்குணங்களை பாதுகாக்கும் ஒரே வழியாகும் என்றும்  கூறியுள்ளார் ஆயர் கார்லசாரே.

மேலும், திருத்தந்தை 14ஆம் லியோ அவர்களின் வார்த்தையை மேற்கோள்காட்டி, மோதல் மற்றும் குழப்பங்களுக்கான உண்மையான காரணங்களை ஆராயவும் அழைப்பு விடுத்த ஆயர் கார்லசாரே அவர்கள், இவ்வாறான மோதல்களால் ஏழை மக்களே அதிகம் பலியாக்கப்படுகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்..

தெற்கு சூடானுக்கும், அதன் திருஅவைக்கும் மன்னிப்பின் அடிப்படையில் உறவுகளை கட்டியெழுப்பக்கூடிய அமைதியின் தலைவர்கள் தேவைப்படுகிறார்கள் என்றும், உண்மையான அமைதி என்பது சமூக உறவுகளை மாற்றி அமைப்பதுடன், இளம் தலைமுறையினருக்குள் அவ்வமைதியின்  மதிப்பீடுகளை ஊட்டுவது என்றும் மேலும் எடுத்துரைத்துள்ளார் ஆயர்.

அமைதிக் கலாச்சாரத்தை உருவாக்குவதில், பள்ளிகள் மற்றும் கற்றுத்தரும் மறைக்கல்வியாளர்கள்   முக்கியப் பங்கு வகிக்க வேண்டும் என்றும், பள்ளிகள் நம்பிக்கையின் இடங்களாக மாற வேண்டும் என்றும் ஆயர் வலியுறுத்தியதோடு, அமைதி மட்டுமே எதிர்கால தலைமுறைகளுக்கு வாழ்வையும் வாய்ப்புகளையும் தரக்கூடிய பாதையாகும் என்றும் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 ஜூலை 2025, 15:45