தடம் தந்த தகைமை - உங்கள் கண்களோ பேறுபெற்றவை!
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
கண்களோ பேறுபெற்றவை; ஏனெனில் அவை காண்கின்றன. உங்கள் காதுகளும் பேறுபெற்றவை; ஏனெனில் அவை கேட்கின்றன, (மத் 13:16) என்றார் இயேசு.
பார்வை என்பது விழிகளைச் சார்ந்த புறம் பார்த்தல் மட்டுமல்ல, அது அகம் சார்ந்த அகப்பார்வை. கேட்டல் என்பது புறத்தே செவிகளால் கேட்கும் ஒலிகள் மட்டுமல்ல, அது இதயத்தால் மௌன மொழியைத் தெளிவாக உணர்தல். இயேசுவை அச்சமூகத்தில் வாழ்ந்த எல்லாரும் பார்த்தார்கள். அகவிழிகளால் பார்த்தவர்கள் அவரை அகம் ஏற்றார்கள். அவ்வாறே அவரது குரலை எல்லாரும் கேட்டார்கள். இதயச் செவிகளைத் திறந்து கேட்டவர்கள் இறையாட்சிக்குட்பட்டார்கள். நல்லவற்றைப் பார்க்க, கேட்க, பேச, உணர, முகர நாம் பெற்றதே ஐம்புலன்கள். அவை வெளிப்புறப் பணிகளுக்காக மட்டுமன்றி அகம் ஆழ்ந்து பயணிக்க உதவுவதாக வேண்டும். அத்தோடு நாம் கொடையெனப் பெற்றுள்ள பார்வை, கேட்டல், பேசுதல் என எல்லாத் திறன்களும் மேன்மைக்குரியவற்றை வெளிப்படுத்தவே. இவற்றைக் கொண்டு நம்மோடு வாழ்வோரை நம்மைவிட மேன்மையாக வாழச் செய்வதே நமதான சவால். கொடையெனப் பெற்றவை யாவும் கொடையெனக் கொடுக்கவே.
இறைவா! உம்மைப் பார்க்கும் போது உலகைப் பார்க்கவும், உலகின் குரலைக் கேட்கும்போது உம்மைக் கேட்கவும் என்னைப் பக்குவப் படுத்தும்
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்