தடம் தந்த தகைமை : அரசரின் இரண்டாம் கனவின் தொடர்ச்சி!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
நெபுகத்னேசர் தனது இரண்டாம் கனவு குறித்து தானியேலிடம் தொடர்ந்து கூறியதாவது : நான் படுக்கையில் கிடந்தபோது என் மனக்கண்முன்னே இக்காட்சிகளைக் கண்டேன்; அப்பொழுது, இதோ! காவலராகிய தூயவர் ஒருவர் வானத்திலிருந்து இறங்கி வந்தார். அவர் தமது குரலை உயர்த்திக் கூறியது இதுவே: இந்த மரத்தை வெட்டுங்கள்; கிளைகளைத் தறித்து விடுங்கள்; இதன் இலைகளை எல்லாம் பறித்தெறியுங்கள்; இதன் கனிகளைச் சிதறடியுங்கள்; இதன் கீழ் வாழும் விலங்குகள் ஓடிப்போகட்டும்; இதன் கிளைகளில் தங்கிய பறவைகள் பறந்தோடட்டும். ஆயினும் வேர்கள் நிறைந்த அடிமரத்தை அப்படியே நிலத்தில் விட்டுவையுங்கள்; இரும்பாலும் வெண்கலத்தாலுமான சங்கிலியால் அது கட்டப்பட்டு, வயல்வெளிப் பசும்புல் நடுவில் கிடக்கட்டும். வானத்தின் பனியால் அந்த மனிதன் நனையட்டும்; தரையில் புல்வெளியில் விலங்குகளோடு அவன் கிடக்கட்டும். அவனது மனித உள்ளம் மாற்றப்பட்டு, அவனுக்கு விலங்கின் மனம் கொடுக்கப்படட்டும். ஏழு ஆண்டுகள் அவனைக் கடந்து செல்லட்டும்.
காவலர் விதித்த தீர்ப்பு இதுவே: தூயவர் வாய்மொழியின் முடிவும் இதுவே: மனிதர்களின் அரசை உன்னதமானவரே ஆள்கின்றார் என்பதையும், தாம் விரும்பியவர்க்கே அதனைத் தந்தருள்வார் என்பதையும், மனிதருள் தாழ்ந்தவர்களையே அதற்குத் தலைவர்களாக்குகின்றார் என்பதையும் உயிர்கள் அனைத்தும் அறியும்படி இவ்வாறு விதிக்கப்பட்டது. அரசர் நெபுகத்னேசராகிய நான் கண்ட கனவு இதுவே: பெல்தசாச்சார்! இதன் உட்பொருளை எனக்குத் தெரிவியும்! என் நாட்டிலுள்ள எல்லா ஞானிகளாலும் இதன் உட்பொருளை விளக்கிக் கூற இயலவில்லை. நீர் ஒருவரே இதைத் தெரிவிக்கக்கூடியவர்; ஏனெனில் புனிதமிகு கடவுளின் ஆவி உம்மிடம் உள்ளது.”
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்