MAP

மாலி நாட்டின் மசூதி ஒன்று புதுப்பிக்கப்படல் மாலி நாட்டின் மசூதி ஒன்று புதுப்பிக்கப்படல்  (AFP or licensors)

தடம் தந்த தகைமை - ஒருவர் கோபுரம் கட்ட விரும்பினால்

என்னதான் திட்டமிட்டாலும் தான் ஏற்ற பணி மீதான அன்பும், அர்ப்பணமும் அதனோடு இணைக்கப்பட வேண்டியவை. நன்றாக, கவனமாக, திட்டமிட்டுச் செய்த நல்லவற்றைப் பற்றி அஞ்ச வேண்டியதில்லை.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

உங்களுள் யாராவது ஒருவர் கோபுரம் கட்ட விரும்பினால், முதலில் உட்கார்ந்து, அதைக் கட்டிமுடிக்க ஆகும் செலவைக் கணித்து, அதற்கான பொருள் வசதி தம்மிடம் இருக்கிறதா எனப் பார்க்கமாட்டாரா? இல்லாவிட்டால் அதற்கு அடித்தளமிட்ட பிறகு அவர் கட்டி முடிக்க இயலாமல் இருப்பதைப் பார்க்கும் யாவரும் ஏளனமாக, ‘இம்மனிதன் கட்டத் தொடங்கினான் ஆனால் முடிக்க இயலவில்லை’ என்பார்களே!, (லூக் 14:28&30) என்றார் இயேசு.

ஒரு சீடருக்கு எளிமை எவ்வளவு முக்கியமோ அவ்வளவுக்குத் திட்டமிடலும் முக்கியம். ஓர் இறையாட்சிப் பணியாள் தன் பணியைச் செயலாக்குமுன் தனது பணியின் தன்மை, பணித்தளம், பணிக்கான மக்கள், பணிக்காலம், பணிக்கான சூழல் என்பவற்றை ஓரளவேனும் புரிந்திருக்க வேண்டும். எத்திட்டமும் இல்லாமல் ‘எடுத்தேன், கவிழ்த்தேன்’ எனும் பாணியில் பணி தொடங்கினால் ஏளனமும், பழியும், எதிர்ப்புமே மிஞ்சும்.

பணி வாழ்வின் எத்திட்டத்திலும் 4 படிநிலைகள் உண்டு. 1) திட்டத்தை வரையறுத்தல். 2) காலத்தை வரையறுத்தல். 3) அதை நிறைவேற்றத் தேவையான செலவினம் வரையறுத்தல். 4) அவ்வப்போது ஆய்வோடு தொடர்ந்து நிறைவு செய்தல். என்னதான் திட்டமிட்டாலும் தான் ஏற்ற பணி மீதான அன்பும், அர்ப்பணமும் அதனோடு இணைக்கப்பட வேண்டியவை. இயேசுவின் திட்டமிடும் யுக்தி உலகில் உழைத்து வாழும் ஒவ்வொருவருக்கும் ஒளி போலானது. நன்றாக, கவனமாக, திட்டமிட்டுச் செய்த நல்லவற்றைப் பற்றி அஞ்ச வேண்டியதில்லை.

இறைவா! ஒவ்வொரு நாளும் பொழுதும் கிடைத்தற்கரிய கொடை. அதனைத் திட்டமிட்டுச் செலவிடச் செயலூக்கம் தாரும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 ஜூலை 2025, 10:39