MAP

நலமளிக்கும் இயேசு நலமளிக்கும் இயேசு 

தடம் தந்த தகைமை - என் பொருட்டுத் தம் உயிரை இழப்போரோ....

ஆயிரம் அநியாயங்கள் தன்னைச் சூழ நிகழ்ந்தாலும் அதைப் பார்த்து மௌனித்து இருப்பதும், அதோடு வாழப் பழகிக்கொள்வதும் அநீதிக்குத் துணைபோவதாகும். அது அசுத்த மனநிலையின் வெளிப்பாடு.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

தம் உயிரைக் காக்க விரும்புவோர் அதை இழந்து விடுவர். என் பொருட்டுத் தம் உயிரை இழப்போரோ அதைக் காத்துக் கொள்வர், (மத் 10:39) என்கிறார் இயேசு.

எங்கும், எப்போதும் தன்னைத் தற்காத்துக் கொள்ளுதல் என்பது இயேசுவின் பார்வையில் முரண்பட்ட வாழ்வு. ஆயிரம் அநியாயங்கள் தன்னைச் சூழ நிகழ்ந்தாலும் அதைப் பார்த்து மௌனித்து இருப்பதும், அதோடு வாழப் பழகிக்கொள்வதும் அநீதிக்குத் துணைபோவதாகும். அது அசுத்த மனநிலையின் வெளிப்பாடு. இயேசுவைப் பின்பற்ற விரும்புவோர் தங்களுக்குள் எப்போதும் எழுச்சி மனநிலை கொண்டு வாழ வேண்டும் என்பதே அவரது எதிர்பார்ப்பு.

இச்சமூகத்தில் எதிர்பாரா விபத்துக்கள், இயற்கைப் பேரிடர்கள், உரிமைக்கான போராட்டங்கள் என நிகழ்கையில் பலர் பிறரைக் காக்க முற்பட்டு, தங்கள் இன்னுயிரை இழந்துள்ளதை நாம் அறிவோம். இயேசுவின் பொருட்டு நம்மை இழத்தல் என்பது அவரது மனநிலை கொண்டு வாழ்தலும், இழத்தலுமாகும். சென்றவிடமெல்லாம் நன்மை செய்து வந்த இயேசுவின் இதய உணர்வு நமக்குள் இருக்குமாயின் நன்மைக்காக இழப்பதற்கான வலிமையையும் அவர்தாமே தருவார். நம்மைச் சுற்றி நிகழ்வதை மறந்து நம் புகழ் பரப்பச் செய்பவை அருவருப்பானவை.

இறைவா! நகம் நனையாமல் நத்தை பிடிக்கும் அர்ப்பணமற்ற நிலை கடந்து, நலிந்தோரின் நல்வாழ்விற்காய் என்னை இழக்க வரம் தாரும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 ஜூலை 2025, 12:17