MAP

இயேசு கிறிஸ்து இயேசு கிறிஸ்து  

தடம் தந்த தகைமை - அக்கரைக்குச் செல்வோம், வாருங்கள்

வாழ்வெனும் பயணத்தில் எந்தத் தேவையும் தேடலும் கடினமும் இல்லையென்றால் அது நம்மை இடறச் செய்யும். துன்பங்கள் நம்மை அலையாகத் தொடர்ந்தாலும் கடந்து செல்லும் உணர்வை மனதில் கோர்ப்போம். அக்கரைக்குச் செல்லுதல் என்பது வாழ்வைக் கடத்திச் செல்லலாகும்.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

அக்கரைக்கு செல்வோம், வாருங்கள், (மாற் 4:35) என இயேசு தம் சீடர்களை நோக்கி அழைத்தார்.

நம் எல்லாருடைய வாழ்விலும் துன்ப துயரங்கள் உண்டு. வறுமை, திருமணத் தடை, நோய், கடன், தனிமை, வேலையின்மை, ஊதியமின்மை, குழந்தையின்மை, வீடின்மை, ஏற்பின்மை, உயர் கல்வியின்மை, மதிப்பின்மை, உரிமையின்மை, ஆதரவின்மை போன்ற இன்மைகள்; இம்மை வாழ்வை இம்சைப்படுத்திக் கொண்டே இருக்கும். இவற்றை நினைந்து நினைந்து நம் மனம் கலங்கும். உடனிருந்து தேற்ற யாரும் இரார். மனம் சோர்ந்து, சாவுதான் ஒரே வழி என்றுகூடத் தோன்றும். சிலர் இச்சிந்தனையொடு வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைப்பதும் உண்டு. நாம் பல பயணங்கள் மேற்கொண்டிருக்கிறோம். பாதைகள் பளபளப்பாக இருந்தால் நம் பயணம் அவ்வளவுதான். ஏனெனில் பளபளப்பான, வழுவழுப்பான பாதை நம்மை வழுக்கி விழச் செய்யும்.

வாழ்வெனும் பயணத்தில் எந்தத் தேவையும் தேடலும் கடினமும் இல்லையென்றால் அது நம்மை இடறச் செய்யும். துன்பங்கள் நம்மை அலையாகத் தொடர்ந்தாலும் கடந்து செல்லும் உணர்வை மனதில் கோர்ப்போம். அக்கரைக்குச் செல்லுதல் என்பது வாழ்வைக் கடத்திச் செல்லலாகும்.  தேங்கிக் கிடப்பதல்ல, கடப்பதே வாழ்க்கை.

இறைவா! நேற்றைய தினத்தில் இன்றைய பொழுதைக் கழிக்காமல், இன்றைய பொழுதை இனிதாய் வாழ்ந்து நாளை நோக்கி நம்பிக்கையோடு நகர வரம் தாரும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 ஜூலை 2025, 12:56