தடம் தந்த தகைமை - பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டுமென
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டுமென விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள் (மத் 7:12) என்றார் இயேசு.
என்னை எல்லாரும் மதிக்கவும் துதிக்கவும் வேண்டும். எப்போதும் உதவி, உறுதுணையாக வேண்டும். என் சொல் கேட்டுச் செயல்பட வேண்டும். என் திட்டங்களை, தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும். இவை போன்ற ஏராள எதிர்பார்ப்புகளிலே வாழ்பவர்களுக்கு பொன்விதி பெரும் பொருள் சொல்கிறது. 'எல்லாரும் எனக்காக' என்ற பார்வையைக் கைவிட்டு 'எல்லாருக்காக என் வாழ்வு' என்ற அணுகுமுறையைக் கையாள்வதே நல்மதி.
'உனக்கு விருப்பமில்லாததைப் பிறருக்குச் செய்யாதே' என்கிறார் யூதப் போதகர் ஹில்லேல். எவைஎவற்றைப் பிறர் எனக்குச் செய்தால் பிடிக்காதோ அவையவற்றை நான் அடுத்தவருக்குச் செய்யாமலிருப்பதே நேரிய வாழ்வு. பெற்ற வாழ்வைப் பொன்போலக் காக்க இயேசு தந்த பொன்விதி கண்போலக் காக்க வேண்டிய நியதி. 'அனைத்தையும் அன்போடு செய்யுங்கள்' (1கொரி 16:14) என்ற பவுலின் அன்புமொழி நம்
வழியாக வெளிப்படுமாயின் இவ்வுலகு அன்பால் நிரம்பி வழியும். அன்பு செய்யும் கலையைக் கற்றவர் அனைத்தையும் சாதிக்கிறார்.
இறைவா! எனக்கு என்ன தேவை என்றல்ல, பிறருக்கு என்னென்ன நன்மைகள் செய்ய வேண்டும் என மனமுணர்ந்து செயலாற்ற ஆற்றல் தாரும்.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்