MAP

இயேசுவும் சீடரும் இயேசுவும் சீடரும் 

தடம் தந்த தகைமை - எத்தகைய மனநிலையில் கேட்கிறீர்கள்?

எதை, எப்படிக் கேட்கிறோம் என்ற மனநிலையில் கவனம் தேவை. கடவுளிடமும், மனிதரிடமும் நம் தேவைகளைக் களங்கமற்ற மனதோடு, பிறரன்பு உணர்வோடு, விடாமுயற்சிப் பண்போடு, நம்பிக்கை நினைவோடு கேட்டோமெனில், அது இறைத்திருவுளத்திற்கு உகந்ததாயின் நிச்சயம் நிகழ்வுறும்.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

நீங்கள் எத்தகைய மனநிலையில் கேட்கிறீர்கள் என்பது பற்றிக் கவனமாயிருங்கள். உள்ளவருக்குக் கொடுக்கப்படும். இல்லாதவரிடமிருந்து தமக்கு உண்டென்று அவர் நினைப்பதும் எடுத்துக்கொள்ளப்படும். (லூக் 8:18) என்கிறார் இயேசு.

உள்ளத்திற்கு இரு வழிகளில் நாம் கேட்டல் செயலை செய்வோம். 1. காதுகளால் செவிமடுத்தல், 2. கைகளால் பெறல். இயேசுவின் பார்வை ஒளியில் இவை இரண்டும் மிகக் கவனத்திற்குரியவை. நாம் காதுகளால் கேட்பவை எல்லாம் உண்மையா? கைகளால் பெறுவதெல்லாம் நன்மையா? கேட்பதையும் பெறுவதையும் நம் மனநிலையே தீர்மானம் செய்கிறது. ஏனெனில் நல்ல மனநிலை என்ற சரியான அடித்தளம் இருந்தால்தான் வாழ்வைச் சிறப்பாகக் கட்டி எழுப்ப முடியும். எனவே எதை, எப்படிக் கேட்கிறோம் என்ற மனநிலையில் கவனம் தேவை. கடவுளிடமும், மனிதரிடமும் நம் தேவைகளைக் களங்கமற்ற மனதோடு, பிறரன்பு உணர்வோடு, விடாமுயற்சிப் பண்போடு, நம்பிக்கை நினைவோடு கேட்டோமெனில், அது இறைத்திருவுளத்திற்கு உகந்ததாயின் நிச்சயம் நிகழ்வுறும். இது இறைவேண்டலுக்கும் இறைவார்த்தை செவிமடுத்தலுக்கும் கூடப் பொருந்தும். ஏனெனில் மனிதரை மனநிலைகளே உருவாக்குகின்றன. நல்ல மனிதர் என்பவர் நல்ல மனநிலை கொண்டவர்.

இறைவா! எனக்கென எதுவும் வேண்டாமல் வாழும் வேட்கையை என்னுள் உருவாக்கும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 ஜூலை 2025, 11:31