தடம் தந்த தகைமை - கோவிலுக்கான காணிக்கை செலுத்திய தாவீது
மெரினா ராஜ் - வத்திக்கான்
தாவீது அரசர் சபையார் அனைவரையும் நோக்கி, “என் மகன் சாலமோனை மட்டுமே கடவுள் தேர்ந்து கொண்டார். அவன் அனுபவமற்ற இளைஞன். செய்ய வேண்டிய பணியோ பெரிது. கட்டவிருக்கும் இல்லமோ மனிதனுக்கு அன்று, கடவுளாகிய ஆண்டவருக்கே! நான் என்னால் முடிந்தவரைக்கும் என் கடவுளின் கோவிலுக்கென்று, பொன் வேலைக்குரிய பொன், வெள்ளி வேலைக்குரிய வெள்ளி, வெண்கல வேலைக்குரிய வெண்கலம், இரும்பு வேலைக்குரிய இரும்பு, மரவேலைக்குரிய மரம் ஆகியவற்றையும், பதிப்பதற்கான கோமேதகக் கற்கள். மாணிக்கக் கற்கள், படிகப்பச்சைக் கற்கள், எல்லாவகை விலையுயர்ந்த கற்கள், சலவைக் கற்கள் ஆகியவற்றையும் பெருவாரியாகச் சேர்த்து வைத்துள்ளேன். என் கடவுளின் கோவிலின் மேல் நான் வைத்துள்ள பற்றார்வத்தால், திருத்தலத்திற்கென்று நான் சேர்த்து வைத்துள்ள யாவற்றையும் தவிர, என் சொந்தக் கருவூலத்திலிருந்து என் கடவுளின் கோவிலுக்குப் பொன்னையும் வெள்ளியையும் வழங்குகிறேன். கோவிற்சுவர்களில் பொதிவதற்காக மூவாயிரம் தாலந்து ஓபீரின் பொன்னும் ஏழாயிரம் தாலந்து தூய வெள்ளியும் கொடுக்கிறேன். மற்றும் திறன் மிக்க கைவினைஞரால் செய்யப்பட வேண்டிய அனைத்துப் பணிக்காக பொன் வேலைக்காகப் பொன்னும், வெள்ளி வேலைக்காக வெள்ளியும் தருகிறேன். இன்று இப்பணிக்கெனத் தம் கையிலிருந்து தாராளமாக ஆண்டவருக்குக் கொடுப்பது வேறு யார்?” என்றார்.
அப்போது மூதாதைவீட்டுத் தலைவர்களும் இஸ்ரயேல் குலத் தலைவர்களும் ஆயிரத்தவர், நூற்றுவர் தலைவர்களும் அரசப் பணிக்கான அலுவலர்களும் தன்னார்வக் காணிக்கை செலுத்தினார்கள். அவர்கள், கடவுளின் கோவில் வேலைக்கென்று, ஐயாயிரம் தாலந்து பொன்னும் பத்தாயிரம் பொற்காசுகளும், பத்தாயிரம் தாலந்து வெள்ளியும், பதினெட்டாயிரம் தாலந்து வெண்கலமும், ஓர் இலட்சம் தாலந்து இரும்பும் செலுத்தினார்கள். விலையுயர்ந்த கற்கள் வைத்திருந்தோர் ஆண்டவரின் இல்லக் கருவூலத்தில் சேர்ப்பதற்கென்று கேர்சோனியனான எகியேலின் கையில் கொடுத்தனர். அவர்களின் தன்னார்வக் காணிக்கையை முன்னிட்டு மக்கள் மகிழ்ந்தனர். ஏனெனில், அவர்கள் முழுமனத்தோடும் ஆர்வத்தோடும் ஆண்டவருக்குக் கொடுத்தனர். தாவீது அரசரும் பெரிதும் மகிழ்ந்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்