காசாவின் மக்களுக்காக குரல் கொடுக்கும் ஆஸ்திரிய ஆயர்
ஜெர்சிலின் டிக் ரோஸ் - வத்திக்கான்
அண்மையில் காசா பகுதியில் நடந்துள்ள நிகழ்வுகள் மிகுந்த அதிர்ச்சியை அளித்துள்ளன என்றும், இந்தப் பேரழிவை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் இன்ஸ்ப்ருக்கின் ஆயர் Hermann Glettler அவர்கள் விண்ணப்பித்துள்ளார்.
காசாவில் உணவு விநியோக மையங்களில் இஸ்ரேலிய இராணுவத்தால் மீண்டும் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதனாலும் நியாயப்படுத்த முடியாது என்று கூறிய ஆயர் Glettler அவர்கள், படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வரும் பாலஸ்தீன குடிமக்களின் பெருமளவிலான இடம்பெயர்வு, மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரான குற்றம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், சிறைபிடிக்கப்பட்ட பிணையக்கைதிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டுமெனவும், பாதிக்கப்பட்டவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் காசாவில் மனிதாபிமானமற்ற சூழ்நிலையில் துன்பப்படுபவர்கள் அனைவருக்கும் தான் இறைவேண்டல் செய்வதாகவும் கூறியுள்ளார்.
காசாவில் உதவி தேவைப்படுவோர் மீதான தாக்குதலையும், கத்தோலிக்க திருக்குடும்ப தேவாலயத்தின் மீதான தாக்குதலையும் கண்டித்துள்ள ஆயர் Glettler அவர்கள், இத்தாக்குதல் பாலஸ்தீன மக்களையும், அம்மக்களின் பன்முகக் கலாச்சாரத்தையும் அவமரியாதைக்கு உள்ளாக்கும் மோசமான செயல் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களுடன் இணைந்து உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்துவதாகவும், மௌனம், புறக்கணிப்பு, மற்றும் ஒற்றுமையை ஆதரிக்கும் பேரணிகளை குற்றமாக்குவது மனித குலத்திற்கு நாம் இழைக்கும் துரோகம் என்றும் கூறியுள்ளார் ஆயர் Glettler.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்