MAP

வெள்ள நீரால் சூழப்பட்டுள்ள டெக்சாஸ் பகுதி வெள்ள நீரால் சூழப்பட்டுள்ள டெக்சாஸ் பகுதி  

டெக்சாஸில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக செபிக்க அழைப்பு

ஏறக்குறைய 20 சிறுமிகள் வெள்ளத்தில் காணாமல் போயுள்ளனர். 24 பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. – Sheriff Larry L. Leitha.

மெரினா ராஜ் - வத்திக்கான்

அமெரிக்க ஐக்கிய நாட்டின் டெக்சாஸ் மாநிலத்தில் ஏற்பட்ட பேரழிவு தரும் வெள்ளத்தால் இறந்த மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக செபிக்க அழைப்பு விடுத்துள்ளது தூய அந்தோனியோ மறைமாவட்டம்.

ஜூலை 4, வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வரலாறு காணாத பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்தால் இதுவரை 20 சிறுமிகள் காணாமல் போயுள்ளனர், 24 பேர் இறந்துள்ளனர் எனவே, இறந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்காகவும் செபிப்போம் என்று அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கொண்ட தூய அந்தோணியோ மறைமாவட்டம்.

ஆறுகள் மற்றும் சிற்றோடைகளில் வெள்ள நீர் மட்டம் உயர்ந்து வருவதால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவில்லை என்றும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் தங்கள் வாழ்வை நோக்கி எழும்பி வர வலிமை பெற வேண்டும் என்பதே தங்களது செபத்தின் நோக்கம் என்றும் அம்மறைமாவட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.

இத்தகைய சவாலான சூழ்நிலைகளில் மக்களுடன் இருப்போம், ஒருவரையொருவர் அன்பு செய்வதன் வழியாக கிறிஸ்துவின் அழைப்புக்கு பதிலளிப்போம் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 6, ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு கெர்வில்லில் உள்ள நோட்ரே டேம் திருத்தலத்தில், பேராயர் குஸ்டாவோ கார்சியா-சில்லர் தலைமையில், "உயிர் இழந்தவர்களுக்காகவும், காணாமல் போனவர்களுக்காகவும் – அவர்களின் பிரிவால் துன்புறும் குடும்பங்கள் மற்றும் சமூகங்களின் ஆறுதலுக்காகவும் செபித்து திருப்பலி நிறைவேற்றப்படும் என்றும் அவ்வறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.

டெக்சாஸின் ஹன்ட்டில் உள்ள குவாடலூப் ஆற்றங்கரை அருகில் உள்ள கிறிஸ்தவ பெண்கள் முகாமில் இருந்த ஏறக்குறைய 20 சிறுமிகள் 10 அங்குல அளவு பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் காணாமல் போயுள்ளனர் என்றும், வெள்ளத்தில் மூழ்கிய மக்களைத் தேடுவதற்கான மீட்புக் குழுக்கள் தங்களதுப் பணியினைத் தீவிரப்படுத்தியுள்ளனர் என்றும் செய்தியாளர்களுக்குத் தெரிவித்தார் Sheriff Larry L. Leitha

ஜூலை 4, வெள்ளிக்கிழமை காலை பெய்த தொடர் மழையால் 45 நிமிடங்களில் ஆற்றின் நீர் ஏறக்குறைய 30 அடி உயர்ந்தது என்றும், ஜூலை 4 இரவு நிலவரப்படி, கெர் கவுண்டியில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஏறக்குறைய 24 பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் ஷெரிப் லாரி எல். லீதா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

டெக்சாஸ் ஆளுநர் கிரெக் அபோட் ஜூலை 4 இரவு பல மாவட்டங்களுக்கு பேரிடர் அறிவிப்பை வெளியிட்டதாகவும், இதனால் டெக்சாஸ் மாநிலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கக்கூடிய அடிப்படைக்கருவி, உதவிகள், பணியாளர்கள் ஆகியோரை தாராளமாக அணுக முடியும் என்றும் கூறினார் ஷெரிப்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 ஜூலை 2025, 11:23