இளம்பெண்களுக்கு ஆதரவளிக்கும் தென்கொரியா அருள்சகோதரிகள்
மெரினா ராஜ் – வத்திக்கான்
சியோலில் உள்ள நல்ல ஆயன் இல்லத்தில், பாதிக்கப்பட்ட இளம் பெண்களுக்கு குடும்பத்தின் அரவணைப்பு, அன்பு, ஏற்றுக்கொள்ளும் உணர்வு போன்றவற்றை அருள்சகோதரிகள் வழங்கி வருகின்றனர் என்றும், பாதுகாப்பான மற்றும் வசதியான இடத்தில் இதனைப் பெறும் பெண்கள், மீண்டும் தங்களது வாழ்வை வாழ ஆரம்பிக்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளார் அருள்சகோதரி Marie Jean,
50 ஆண்டுகளுக்கும் மேலாக, சியோலில் உள்ள சுஞ்சியோனிலும், தென் கொரியாவின் ஜெஜுவிலும் இயேசு மற்றும் அன்னை மரியாவின் நல்ல ஆயன் சபை அருள்சகோதரிகள் பாதிக்கப்பட்ட பெண்களுக்காகப் பணியாற்றி வருவது குறித்து ஃபீதேஸ் எனப்படும் கத்தோலிக்க செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார் அச்சபையின் அருள்சகோதரியும், தென்கொரியாவில் உள்ள தலித்தாகும் என்னும் பெண்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான அருள்சகோதரி Marie Jean.
கணவர்களால் கைவிடப்பட்ட ஒற்றைப் பெற்றோர்களான பெண்கள், புலம்பெயர்ந்தவர்கள், கருவுற்றிருக்கும் பெண்கள், குடும்பத்திற்குள்ளாக முறைகேடுகளுக்கு ஆளான பெண்கள், போன்றோருக்கு அருள்சகோதரிகள் உதவி வருகின்றனர் என்றும், 1995 ஆம் ஆண்டு நன்கொடையாளர்களின் உதவியுடன் சுஞ்சியோனில் நிறுவப்பட்ட சகோதரிகளின் இல்லமானது, நாடு முழுவதிலுமிருந்து வரும் பெண்கள் மற்றும் சிறுமிகளைப் பாதுகாக்கும் வண்ணம் பழைய மற்றும் புதிய நன்கொடையாளர்களின் ஆதரவுடன் இன்றும் வளர்ந்து வருகிறது என்றும் எடுத்துரைத்துள்ளார் அருள்சகோதரி ஜீன்.
குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கான அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்தல், மொழி மற்றும் கலாச்சாரத் தடைகளால் ஏற்படும் துன்பங்கள், வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த வாழ்க்கைத் துணைவர்களிடையே தகவல் தொடர்புகளை மேம்படுத்துதல், துன்பத்தில் உள்ள பெண்களுக்கான ஆதரவு போன்ற பல்வேறுப் பணிகள் தற்போது வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார் அருள்சகோதரி ஜீன்.
குடும்ப வன்முறை மற்றும் குடும்பப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கான இல்லங்களையும் சகோதரிகள் நடத்துகிறார்கள் என்றும், "நல்ல ஆயன் இல்லம் போன்ற இந்த அமைப்புக்களின் வழியாக பாதிக்கப்பட்ட பெண்கள் தங்கள் குடும்பங்களிடமிருந்து ஆதரவைப் பெறுவதைப்போல உணர்கின்றார்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் அருள்சகோதரி ஜீன்.
வீட்டில் பெற்றோரால் ஏற்படும் துன்புறுத்தல்கள் மற்றும் முறைகேடுகளால் அடையும் துன்பத்தை விட பெரிய வலி எதுவும் இல்லை. ஆரோக்கியமான சுதந்திரத்தையும் மன-உணர்ச்சி மீட்சியையும் அடைவது நீண்ட பாதை, ஆனால் அப்பெண்களுக்கு அதை தாராள மனத்துடன் சகோதரிகள் செய்கிறார்கள் என்று தெரிவித்த சமூகப் பணியாளரான மரியானா இனியா யங் அவர்கள், பலர் தங்கள் மீட்புக் கதைகளைப் பகிர்ந்து கொள்ள திரும்பி வருகிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்