காசா மீதான இஸ்ரேலிய முற்றுகையை கண்டிக்கும் உதவி நிறுவனங்கள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
அனைத்துலக காரித்தாஸ் அமைப்பு உட்பட 100-க்கும் மேற்பட்ட மனிதாபிமான மற்றும் மனித உரிமை அமைப்புகள், இஸ்ரேலின் காசா முற்றுகையைக் கண்டித்துள்ள அதேவேளை, இந்நிலை பட்டினி, குழப்பம் மற்றும் இறப்பிற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளதாகவும் குறைகூறியுள்ளன.
மேலும் இவ்வமைப்புகள் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கை ஒன்றில் பின்வரும் கோரிக்கைகளை அரசுகளுக்கு வலியுறுத்தியுள்ளன.
உடனடி போர்நிறுத்தம் செய்க
உடனடி மற்றும் நிரந்தர போர்நிறுத்தத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும், மனிதாபிமான உதவிகள் மீதான அனைத்துக் கட்டுப்பாடுகளையும் நீக்க வேண்டும் எனவும் கூறியுள்ளதுடன், மனிதாபிமான உதவிகள் மக்களைச் சென்றடையும் வகையில் அனைத்து தரைவழிகளைத் திறக்க வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளன.
ஆயுதப் பரிமாற்றங்களை நிறுத்துக
ஐ.நா தலைமையிலான உதவி விநியோக பொறிமுறையை ஆதரிக்கவும் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள உதவி முறைகளை முடிவுக்குக் கொண்டு வரவும் விண்ணப்பித்துள்ளதுடன், பாரபட்சமற்ற மனிதாபிமான முயற்சிகளுக்கு நிதியளிப்பதைத் தொடரவும், மோதலுக்குப் பங்களிக்கும் ஆயுதப் பரிமாற்றங்களை நிறுத்தவும் கேட்டுக்கொண்டுள்ளன அவ்வமைப்புகள்.
உணவு விநியோக நிலையங்களில் 875 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. உறுதிப்படுத்தியதையும், தற்போதைய சூழ்நிலை உதவி நடவடிக்கைகளை ஏறக்குறைய சாத்தியமற்றதாக்குகிறது என்பதையும் மேற்கோள் காட்டி, காசாவில் உள்ள கடுமையான மனிதாபிமான நிலைமைகளை எடுத்துக்காட்டியுள்ளன இந்த அமைப்புகள்.
பொதுமக்கள் பட்டினிக் கிடப்பது ஒரு போர்க்குற்றம் என்பதை வலியுறுத்தியும், அனைத்துலகச் சமூகத்தின் செயலற்ற தன்மையைக் கண்டித்தும் குரலெழுப்பியுள்ள இவ்வமைப்புகள், உயிர்களைக் காப்பாற்ற தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க மாநிலங்களுக்கு அழுத்தம் கொடுத்துள்ளன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்