உலகில் 5 கோடிக்கும் அதிகமானோர் மனித வர்த்தகத்தால் பாதிப்பு!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
ஜூலை 30, இப்புதனன்று, மனித வர்த்தகத்திற்கு எதிரான உலக நாள் சிறப்பிக்கப்பட்ட வேளை, உலகளாவிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றமாக இது அதிகரித்து வருவதை ஐக்கிய நாடுகள் அவை எடுத்துக்காட்டியுள்ளது.
இந்த ஆண்டின் கருப்பொருளான "மனித வர்த்தகம் என்பது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் - சுரண்டலை முடிவுக்குக் கொண்டுவருதல்" என்ற தலைப்பில், சட்ட அமலாக்கம், நீதி அமைப்புகள் மற்றும் குடிமைச் சமூகத்தின் ஒருங்கிணைந்த நடவடிக்கைக்கு ஐ.நா. அழைப்பு விடுத்துள்ளது.
அண்மைய ஐ.நா. அறிக்கைகள் உலகளவில் 5 கோடிக்கும் அதிகமான மக்கள் சுரண்டப்படுவதாகக் காட்டுகின்றன. மேலும் 2019 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளுக்கு இடையில், கட்டாய உழைப்பு 47 விழுக்காடு அதிகரித்துள்ளது என்றும், பாதிக்கப்பட்டவர்களில் 61 விழுக்காட்டினர் பெண்கள் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்டவர்கள் 162 நாடுகளிலிருந்து மனித வர்த்தகம் செய்யப்பட்டவர்கள் என்றும், இவர்கள் 128 நாடுகளுக்கு மனித வர்த்தகம் செய்து அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கும் அதன் அறிக்கை, இது நெருக்கடியின் உலகளாவிய அளவைக் காட்டுகிறது என்றும் கூறியுள்ளது.
மோதல், காலநிலை மாற்றம், நாடுகடந்த குற்றங்கள் ஆகியவை இந்த மனித வர்த்தகத்திற்கு முக்கிய காரணிகளாகும் என்றும், 2020–2023-ஆண்டுகளுக்கு இடையில் மனித வர்த்தகத்தால் பாதிக்கப்பட்டுள்ள 2,00,000 பேர் வரை அடையாளம் காணப்பட்ட போதிலும், இன்னும் பலர் இந்த எண்ணிக்கையில் மறைந்துள்ளனர் என்றும் எச்சரித்துள்ள ஐ.நா, வலுவான சட்டங்கள், சிறந்த எல்லை தாண்டிய ஒத்துழைப்பு மற்றும் சிறப்பான தொழில்நுட்பப் பயன்பாடு ஆகியவற்றை இதற்கான தீர்வுகளாக வலியுறுத்தியுள்ளது.
சிறந்த எல்லை தாண்டிய ஒத்துழைப்பு மற்றும் சிறந்த தொழில்நுட்ப பயன்பாடு
திருத்தந்தை 23-ஆம் ஜான் சமூகம் உள்ளிட்ட குழுக்கள் ஆண்டுதோறும் 8,00,000 புதிய பாதிக்கப்பட்டவர்களை எடுத்துக்காட்டி அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க கேட்டுக்கொண்டுள்ளது.
துறவறத்தாரின் பன்னாட்டு அமைப்பால் நடத்தப்படும் தலித்தா கும் என்ற அமைப்பு, கடந்த 2024-ஆம் ஆண்டில் ஏறத்தாழ 9,40,000 பேருக்கும், 47,000 உயிர் பிழைத்தவர்களுக்கும் உதவி வழங்கி உள்ளது மற்றும் கானா மற்றும் பிரேசில் (Ghana and Brazil) போன்ற நாடுகளில் உதவும் பணிகளை விரிவுபடுத்தியுள்ளது.
மனித வர்த்தகத்தை எதிர்த்துப் போராடுவதற்கு குற்றவியல் வலைப்பின்னல்களை அகற்றவும், பாதிக்கப்படக் கூடியவர்களைப் பாதுகாக்கவும் ஒன்றுபட்ட, உலகளாவிய முயற்சிகள் தேவை என்பதையும் ஐக்கிய நாடுகள் அவை சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்