MAP

தமிழ்நாடு ஆயர் பேரவையின் இளைஞர் பணி குழுவின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றோர் தமிழ்நாடு ஆயர் பேரவையின் இளைஞர் பணி குழுவின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றோர்  

சமூக அவலங்களை சீர்தூக்கி பார்க்க இளைஞர் இயக்கமாக செயல்பட வேண்டும்

இளைஞர் இயக்கங்கள் தனது சமூகப் பணியில் முன்னேறி வந்து கொண்டிருக்கின்றன, பதின்பருவ வயதைச் சேர்ந்த மாணாக்கர்களுக்கு சரியான வழிகாட்டுதல் அளிக்க வேண்டியது தேவை - ஆயர் நசரேன்

மெரினா ராஜ் - வத்திக்கான்

மாணாக்கர் அனைவரும் இயக்கமாகச் சேர்ந்து, தங்களைச் சுற்றியுள்ள சமூக அவலங்களை உற்றுப் பார்த்து, அது ஏன் நிகழ்கிறது என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்றும், அதற்கு தங்களால் இயன்ற செயல்பாடுகளை இளம் கத்தோலிக்க மாணாக்கர் / இளம் மாணாக்கர் இயக்க மாணவர்கள் முன்னெடுக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார் ஆயர் சூசை நசரேன்.

தமிழ்நாடு ஆயர் பேரவையின் இளைஞர் பணி குழுவின் ஒரு முக்கிய அங்கமாக செயல்படும் இளம் கத்தோலிக்க மாணாக்கர் / இளம் மாணாக்கர் (இகமா / இமா) இயக்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் கடந்த வாரம் திருச்சியில் நடைபெற்றது.

கடந்த ஜூன் 22 ஞாயிற்றுக்கிழமையன்று திருச்சியில் நடைபெற்ற இக்கூட்டத்தின் காலை திருப்பலியை. நிறைவேற்றி நிறைவு அமர்வில் உரையாற்றியபோது இவ்வாறு கூறினார் தமிழ்நாடு ஆயர் பேரவையின் இளைஞர் பணிக்குழு தலைவர் மேதகு ஆயர் நசரேன்.

"மாணாக்கர் இயக்கம் ஒருகாலத்தில் இலட்சம் உறுப்பினர்களுடன் செயல்பட்ட  பெருமையை பெற்றுள்ளது என்றும், தற்பொழுது அனைத்து இடங்களிலும் சிறார் இயக்கங்கள் நன்றாக நடைபெறுகின்றன என்றும் தெரிவித்தார் ஆயர் நசரேன்.

இளைஞர் இயக்கங்கள் தனது சமூகப் பணியில் முன்னேறி வந்து கொண்டிருக்கின்றன என்று எடுத்துரைத்த ஆயர் அவர்கள், இவை இரண்டிற்கும் இடைப்பட்ட பதின்பருவ வயதைச் சேர்ந்த மாணாக்கர்களுக்கு சரியான வழிகாட்டுதல் அளிக்க வேண்டியது தேவை என்றும் வலியுறுத்தினார்.

நிகழ்வின் தொடக்கமாக இயக்க கொடியினை ஏற்றும் நிகழ்வில் இகமா/ இமா இயக்கத்தின் மாநிலத் தலைவர் செல்வன். ஜான் ரெக்ஸ், துணைத் தலைவர் செல்வி. சிலம்பரசி ஆகியோர் ஆயருடன் இணைந்து இயக்க கொடியினை ஏற்றினர். இயக்கப் பாடலை பொருளர் செல்வன். ஆடம்ஸ் பாடினார். செயலாளர் செல்வி லூர்து மேரி இந்திய அரசியலமைப்பின் முகப்புரையை வாசித்தார்.

பாரம்பரியக் குத்துவிளக்கு ஏற்றலுடன் தொடங்கிய முதல் அமர்வில் கடந்த ஆறு மாத செயற்பாட்டு மற்றும் நிதி அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு அதன்பின் மறைமாவட்டங்களின் செயல்பாடுகள் பகிரப்பட்டன.

இரண்டாம் அமர்வில், கைவிடப்பட்ட கைம்பெண்களுக்காக இளைஞர்கள் இயக்கமாக எவ்வாறு துணை நிற்க வேண்டும் என்பதை உணர்த்தும் ‘கயல்’ குறும்படம் வெளியிடப்பட்டது. பின்னர் அருட்சகோதரி ஜேசு பாக்கியம் அவர்கள் அண்மையில் தாங்கள் பங்கேற்ற இளைஞர் பணிக்கான பயிற்சிப் பட்டறையின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

மூன்றாம் அமர்வில், ஆணாதிக்க சமூக வன்முறைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு துணையாக நின்று அவர்களை ஆதரிக்க வேண்டியதன் தேவையை எடுத்துரைக்கும் ‘துளிர்’ குறும்படம் திரையிடப்பட்டது. தொடர்ந்து இளைஞர் பணிக்குழுவின் செயலர் பணி. எடிசன் அவர்கள், "இகமா / இமா இயக்கத்தின் தேவையும் இயங்கு முறையும்" என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். இதில் இகமா இயக்கத்தின் நிறுவனரான கர்தினால் ஜோசப் கார்டைன் அவர்களின் சமூக பங்களிப்பு மற்றும் அவரை இன்றைய இளைஞர்கள் முன்மாதிரியாக ஏற்று செயல்பட வேண்டியதன் தேவை வலியுறுத்தப்பட்டது.

பின்னர் பங்கேற்பாளர்கள் குழுக்களாகப் பிரிந்து, ஒவ்வொரு பங்கிலும் இகமா இயக்கத்தை தொடங்கும் வழிமுறைகள் மற்றும் கார்டைன் அணுகுமுறையை பரவலாக்கும் வழிமுறைகள் குறித்து கலந்துரையாடினர். இந்த அமர்வு தோழமை ஆட்சி முறையில் நடைபெற்றது.

நிறைவு அமர்வில், மேதகு ஆயர் நசரேன் அவர்கள் ஊக்கமளிக்கும் உரை நிகழ்த்தினார்.  இக்கூட்டம், குழு கலந்துரையாடலின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்ட தீர்மானங்களை நிறைவேற்றியவுடன், இயக்கப் பாடல் பாடி இனிதே நிறைவுற்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 ஜூன் 2025, 14:00