திருத்தந்தைக்கு நன்றி தெரிவிக்கும் மியான்மார் மக்கள்
ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்
மியான்மாரில் நடைபெறும் மோதல்களை கடந்த ஞாயிறு மூவேளை ஜெபத்தில் நினைவுகூர்ந்த திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் வார்த்தைகளுக்கும், துன்புறும் மக்கள் மீது அவர் கொண்டிருக்கிற அக்கறைக்கும் மியான்மாரில் உள்ள மந்தாலே உயர் மறைமாவட்டத்தின் முதன்மை குரு அருள்பணியாளர் Peter Sein Hlaing Oo,அவர்கள் நன்றி தெரிவித்ததுள்ளதாக Fides செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Sagaing பகுதியில் உள்ள பல கிராமங்கள் முற்றிலும் கைவிடப்பட்ட நிலையில், தொடர்ந்து நடைபெறும் குண்டு வீச்சுகளால் பல பகுதிகள் சாம்பலாகியுள்ளன என்றும், அங்குள்ள மக்கள் எங்கு செல்வது என்று தெரியாத பரிதாப நிலையில் உள்ளனர் என்றும், அப்பகுதியில் உள்ள பல கத்தோலிக்கக் கோவில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்றும் அருள்பணியாளர் Hlaing Oo கூறியதாகத் தெரிவித்துள்ளது அச்செய்தி நிறுவனம்.
மியான்மாரின் மக்கள் உதவியற்றவர்களாகவும் பாதுகாப்பற்றவர்களாகவும் உள்ள நிலையில், மியான்மாரின் அருள்பணியாளர்கள் தங்களின் உயிரையும் பொருட்படுத்தாது மிகவும் ஆபத்தான பகுதிகளிலும், குறிப்பாக முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக பணியாற்றி வருகின்றனர் என்று செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார் அருள்பணியாளர் Hlaing Oo .
மேலும், மியான்மாரின் அருள்பணியாளர்கள் மற்றும் மக்கள், ஒவ்வொரு நாளும் அமைதிக்காகவும், நாட்டின் எதிர்காலத்திற்காகவும் இறைவேண்டல் செய்வதோடு திருப்பலிகள் ஒப்புக்கொடுப்பதாகவும், இந்தக் கடினமான சூழலிலும் இறைவன் மீது நம்பிக்கை கொண்டு வாழ்வதாகவும் அருள்பணியாளர் கூறியதாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன், மந்தாலேவில் நடக்கும் போர் மட்டுமல்லாமல், நிலநடுக்கம் ஏற்படுத்திய அழிவுகளும் மக்கள் வாழ்க்கையை கடுமையாக பாதித்துள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியதாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு முன், சாகைங் பகுதியிலுள்ள Oe Htein Kwin என்ற கிராமத்தில் நடந்த விமான தாக்குதலில் 20 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்கள் உயிரிழந்தனர் என்றும், அந்த வன்முறையின் மீதான சோகம் மற்றும் கோபம் இன்னும் குறையாத நிலையில், போர் மோதல்களினால் பல கிராமங்கள் அழிக்கப்பட்டுள்ளன என்றும், பொது மக்கள் பல இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர் என்றும், யாங்கூனில் உள்ள Joseph Kung என்னும் கத்தோலிக்கர் ஒருவர் கூறியுள்ளதாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து இடம்பெற்று வரும் உள்ளநாட்டுப் போரால் மியான்மார் நாடு முழுவதும் மிகவும் சோர்வடைந்துள்ள நிலையில் திருத்தந்தையின் வார்த்தைகள் அவர்களுக்கு பெரும் நம்பிக்கை அளிப்பதாகவும், மியான்மாரை அவர் நினைவுகூரும் போதெல்லாம் அவர்கள் தனிமையில் இல்லை என்ற உணர்வைப் பெறுவதாகவும் Joseph Kung செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்