வியட்நாமில் நற்கருணை இளையோர் இயக்க 6-வது மாநாடு
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
வியட்நாமிய கத்தோலிக்கத் தலத்திரு அவையில் EYM எனப்படும் நற்கருணை இளையோர் இயக்கம் ஒரு துடிப்பான மற்றும் பயனுள்ள ஆற்றலாக இருக்கின்றது என பேராயர் ஜோசப் நுயென் நாங் அவர்கள் பாராட்டியுள்ளதாகக் கூறியுள்ளது பீதேஸ் எனப்படும் செய்தி நிறுவனம்.
வியட்நாமின் நற்கருணை இளைஞர் இயக்கம் (EYM) அதன் 6-வது தேசிய மாநாட்டை ஜூன் 12 முதல் 14,வரை ஹோ சி மின் நகரில் நடத்தியவேளை, இவ்வாறு உற்சாகப்படுத்தியுள்ள பேராயர் நுயென் நாங் அவர்கள், இது அருள்பணியாளர்கள், அர்ப்பண வாழ்வுக்கு அழைக்கப்பட்ட இருபால் துறவியர் மற்றும் அர்ப்பணிப்புள்ள பொதுநிலையினருக்கு ஒரு முக்கியமான இறையழைத்தலின் தொடக்கப்பள்ளியாக அமைந்துள்ளது என்று கூறியுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளது அச்செய்தி நிறுவனம்.
இந்த நிகழ்வு 27 மறைமாவட்டங்களிலிருந்தும் தலைவர்களையும் உறுப்பினர்களையும் ஒன்றிணைத்தது என்றும், வியட்நாமின் இளையோரிடையே நம்பிக்கையை வளர்ப்பதில் இவ்வியக்கத்தின் பெரும் பங்கை எடுத்துக்காட்டுகிறது என்றும் உரைக்கிறது அச்செய்தி.
நற்கருணை இளையோர் இயக்கம் கல்வி, நம்பிக்கை உருவாக்கம் மற்றும் மறைக்கல்வி போதனை, திருப்பலி, பிறரன்புப் பணிகள் மற்றும் கலாச்சார நடவடிக்கைகள் மூலம் சமூக ஈடுபாட்டை வலியுறுத்துகிறது என்பதையும் அச்செய்தி சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் மாநாட்டின் கருப்பொருளான "எதிர்நோக்கு" என்பது இளையோர் உருவாக்கத்திற்கான ஆன்மிக மற்றும் நடைமுறை வழிகாட்டியாக அமைந்துள்ளது என்பதை ஆயர் பீட்டர் நுயென் வான் வியென் அவர்கள் வலியுறுத்தியதையும் எடுத்துக்காட்டியுள்ளது அச்செய்தித் தொகுப்பு.
அதேவேளையில், இவ்வியக்கத்தின் பொதுச் செயலாளர் அருள்தந்தை ஜான் லு குவாங் வியட் அவர்கள், நற்கருணை இளையோர் இயக்கத்தின் தாக்கத்தை விரிவுபடுத்த தலத் திருஅவைத் தலைவர்களிடமிருந்து கூடுதல் ஆதரவைக் கோரினார் என்றும் கோடிட்டுக் காட்டியுள்ளது இச்செய்தி நிறுவனம்.
ஊக்கமளிக்கும் விதமாக, பல குருத்துவக் கல்லூரிகளும் துறவற நிறுவனங்களும் தங்கள் உருவாக்கப் பயிற்சித் திட்டங்களில் நற்கருணை இளையோர் இயக்கப் பயிற்சியை ஒருங்கிணைத்து வருகின்றன. 1929-ஆம் ஆண்டு வியட்நாமில் நிறுவப்பட்டு, உலகளாவிய நற்கருணை இளையோர் இயக்கத்தால் (பிரான்சில் தோன்றிய) ஈர்க்கப்பட்டு, திருவிவிலியம், நற்கருணை, அப்போஸ்தலிக்க நடவடிக்கை மற்றும் கலாச்சாரப் பாதுகாப்பு மூலம் இளையோரை நல்ல குடிமக்களாகவும் உண்மையுள்ள கிறிஸ்தவர்களாகவும் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது இவ்வியக்கம்,.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்