அனைத்துலகச் சமூகம் அமைதிக்காக உழைக்க அமெரிக்க ஆயர்கள் வலியுறுத்தல்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நீடித்த அமைதியை அடைவதற்காக பலதரப்பு தூதரக உறவுக்கான ஈடுபாட்டைப் புதுப்பிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு அமெரிக்க ஆயர்கள் தங்கள் அரசையும், அனைத்துலகச் சமூகத்தையும் வலியுறுத்தியுள்ளனர்.
அனைத்துலக நீதி மற்றும் அமைதிக்கான USCCB குழுவின் தலைவரான ஆயர் ஏ. எலியாஸ் ஜைடன் அவர்கள், மத்திய கிழக்கில் அணு ஆயுதங்களின் பெருக்கம், அதேபோல் வன்முறையின் இந்த அதிகரிப்பு, அப்பகுதியில் எஞ்சியிருக்கும் பலவீனமான நிலையை மேலும் ஆபத்தில் ஆழ்த்துகிறது என்று அவ்வறிக்கையில் எச்சரித்துள்ளார்.
"சமரசம் மற்றும் அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் மனித மாண்பை உறுதி செய்யும் தீர்வுகளை ஊக்குவிப்பதன் வழியாகவும், நல்லிணக்கப் பாதைகளைத் தொடங்குவதன் வழியாகவும் அமைதிக்கான நோக்கத்தை ஆதரிப்பது அனைத்து நாடுகளின் கடமையாகும்" என்று திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கூறியுள்ளதையும் இந்த அறிக்கையில் மேற்கோள்காட்டியுள்ளார் ஆயர் ஜைடன்.
"ஒருமித்த கருத்தின் அடிப்படையில் உரையாடல் மூலம் அமைதி நிலவும்" என்று கூறியுள்ள தெஹ்ரான் பேராயர் கர்தினால் டொமினிக் ஜோசப் மாத்தியூ அவர்களுடைய இறைவேண்டலில் தான் ஒன்றிணைவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார் ஆயர் ஜைடன்.
அதேவேளையில், கத்தோலிக்க விசுவாசிகளையும், நல்லெண்ணம் கொண்ட அனைத்து மக்களையும், மத்திய கிழக்கில் விரோதப் போக்குகள் முடிவுக்கு வருவதற்காக இடைவிடாமல் இறைவேண்டல் செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார் ஆயர் ஜைடன்.
ஜூன் 13, வெள்ளிக்கிழமை இஸ்ரேல் ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியபோது தற்போதைய மோதல் வெடித்தது. இதில் மூத்த இராணுவ அதிகாரிகள் மற்றும் ஈரானின் அணுசக்தி திட்டத்தில் பணிபுரியும் விஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர்.
மேலும் இஸ்ரேலில் உள்ள இலக்குகள் மீது ஏவுகணை மற்றும் இராக்கெட் தாக்குதல்கள் மூலம் ஈரான் பதிலடி கொடுத்தது. ஜூன் 17, செவ்வாய்க்கிழமை வரை தொடர்ந்த இந்தத் தாக்குதல்களில் ஈரானில் 220-க்கும் மேற்பட்டவர்களும் இஸ்ரேலில் 21 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்