வியட்நாமிலுள்ள அன்னை மரியா திருத்தலத்தில் திரண்ட திருப்பயணிகள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
மே மாதத்தில் இடம்பெற்ற அன்னையின் வணக்க மாதத்தின் நிறைவைக் குறிக்கும் வகையில், வியட்நாமின் டா நாங் மறைமாவட்டத்தைச் சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்ட கத்தோலிக்கர்கள், திரா கியூவின் அன்னை மரியா திருத்தலத்திற்குத் திருப்பயணம் மேற்கொண்டதாகக் கூறியுள்ளது பீதேஸ் எனப்படும் செய்தி நிறுவனம்.
இந்தத் திருத்தலம் 140 ஆண்டுகள் பழமையான அன்னை கன்னி மரியாவின் காட்சியை நினைவுகூரும் வகையில் அமைந்துள்ளது எனவும், இது துயரமான காலங்களில் ஆறுதல் அளிக்கும் அன்னையின் திருத்தலமாக நம்பப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளது அச்செய்தி நிறுவனம்.
இந்த நிகழ்வு அன்னை மரியா எலிசபெத் சந்திப்புப் பெருவிழாவின் போது இடம்பெற்றது என்றும், மேலும் இது அன்பு, நம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்பின் வலிமைவாய்ந்த வெளிப்பாடாக அமைந்துள்ளது என்றும் பேராயர் ஜோசப் டாங் டக் அவர்களால் குறிப்பிடப்பட்டது என்றும் அச்செய்தியில் விவரிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திருப்பயணம் வரவிருக்கும் பெந்தக்கோஸ்து எனப்படும் தூய ஆவியார் பெருவிழாவிற்கு விசுவாசிகளைத் தயார்படுத்தியதுடன், மரியாவை "பெந்தக்கோஸ்தே பெண்மணி" எனக் கௌரவித்தது என்றும் குறிப்பிட்டுள்ளது அச்செய்திக் குறிப்பு.
மேலும் திரா கியூ (Tra Kieu) திருப்பயணம் என்பது நம்பிக்கை மற்றும் பணியின் ஒரு கூட்டுச் செயல் என்று பேராயர் டாங் டக் அவர்கள் வலியுறுத்திக் கூறியதையும் சுட்டிக்காட்டியுள்ளது அச்செய்தி.
மக்கள்தொகையில் ஏறத்தாழ 7 விழுக்காடு கத்தோலிக்கர்கள் வாழும் வியட்நாமில், அன்னை மரியாவின்மீதான பக்தி மிகவும் ஆழமாக உள்ளது என்றும், மே மாதம் முழுவதும், லா வாங் அன்னை மற்றும் நுய் குய் அன்னை போன்ற மரியன்னைத் திருத்தலங்களில் கொண்டாட்டங்களும் திருப்பயணங்களும் இடம்பெற்றதாகவும் எடுத்துக்காட்டியுள்ளது அச்செய்தி நிறுவனம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்