MAP

புனிதர்கள் பேதுரு பவுல் புனிதர்கள் பேதுரு பவுல்   (© 2025 Ascension Press.)

புனிதர்கள் பேதுரு பவுல் : தாய்த்திருஅவையின் இருபெரும் தூண்கள்!

தாய்த்திருஅவையின் இருபெரும் தூண்களான புனிதர்கள் பேதுருவும் பவுலும், தங்களுடைய உயிரையே தந்து இயேசுவின் மீது தாங்கள் கொண்டிருந்த தூய அன்பை வெளிப்படுத்தினர்.
புனிதர்கள் பேதுரு பவுல் : தாய்த்திருஅவையின் இருபெரும் தூண்கள்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள் I. திப 12:1-11    II. 2 திமொ 4:6-8, 17-18   III. மத் 16:13-19)

இன்று பாஸ்கா காலத்தைக் கடந்து பொதுக் காலத்தின் பதிமூன்றாம் ஞாயிற்றுக்கிழமையைத் தொடங்குகிறோம். இந்நன்னாளில் நமது அன்னையாம் திருஅவை புனிதர்கள் பேதுரு பவுல் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது. இருபெரும் தூண்களாகத் தொடக்க கால திருஅவையைத் தாங்கிப் பிடித்த. இவ்விருவரும் கிபி 64-ஆம் ஆண்டு முதல் 65-ஆம் ஆண்டு வரை வேதகலாபனையில் மறைச்சாட்சிகளாகக் கொல்லப்பட்டவர்கள். புனித பவுல் உரோமைக் குடிமகன் என்பதால் வாளால் வெட்டப்பட்டுக் கொல்லப்பட்டார். புனித பேதுரு அவரது வேண்டுகோளுக்கேற்ப தலைகீழாக சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார்.

புனித பேதுருவின் வாழ்வு

பேதுரு கலிலேயாவில் உள்ள பெத்சாய்தா என்னும் ஊரில் பிறந்தார். இவரின் இயற்பெயர் சீமோன். இயேசுதான் இவரை பேதுரு என்று பெயர்மாற்றம் செய்தார். கெனசரேத்து ஏரிக்கரையில் இயேசு பேதுருவைச் சந்தித்தபோது. அங்கே என்னே நிகழ்ந்தது என்பதை நாம் அறிவோம். சீமோனை நோக்கி, “ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்” என்று இயேசு கூறியபோது, அவர் மறுமொழியாக, “ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும், உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்” என்கிறார். உடனே அவர்களுக்குப் பெருந்திரளான மீன்கள் கிடைக்கின்றன. அப்போது மற்றவர்கள் எல்லாம் மீன்களை நோக்கித் தங்களின் கவனத்தைத் திரும்பியபோது, பேதுரு மட்டும் இயேசுவை நோக்கி தனது முழுக்கவனத்தையும் திருப்பி,  அவரின்  கால்களில் விழுந்து, “ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்” என்று கூறுகின்றார். உடனே இயேசுவும், “அஞ்சாதே; இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்” என்று கூறி அவரது இறையழைத்தல் பணிக்கு உரமிடுகின்றார். இந்நிகழ்விற்குப் பிறகு அவர் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றுகிறார் (காண்க லூக் 5:1-11).

பேதுருவின் நம்பிக்கை அறிக்கை

இரண்டாவதாக,  இயேசுவைப் பற்றிய பேதுருவின் அறிக்கை மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. இயேசு சீடரை நோக்கி, “மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?” என்று கேள்வி எழுப்பியபோது,  “சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர்” என்று மற்றவர்கள் பதிலிறுத்தபோது பேதுரு மட்டும் அமைதிகாக்கிறார். “ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?” என்று இயேசு இரண்டாவது கேள்வியை எழுப்பியபோது, சற்றும் தாமதம் செய்யாமல், "நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” என்று பதில்மொழி தருகின்றார் பேதுரு. ஒருவேளை, இயேசுவே கூட இந்தப் பதிலை அவரிடமிருந்து எதிர்பார்த்திருப்பாரா என்பது நமக்குப் புரியவில்லை. அதனால்தான், அவரின் இந்தப் பதிலால் உள்ளம் பூரித்துப்போன இயேசு, “யோனாவின் மகனான சீமோனே, நீ பேறு பெற்றவன். ஏனெனில், எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார். எனவே, நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா. விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்” (மத் 16:13-19) என்று கூறி அவர் ஏற்கவேண்டிய தலைமைத்துவம் குறித்து முன்குறித்துக் கூறுகின்றார்.

பேதுருவின் பலவீனம்

இயேசுவே உண்மையான மெசியா என்று பேதுரு அறிக்கையிட்டாலும், அவரை ஓர் அரசியல் மெசியாகவே பார்த்தார். அதாவது, இயேசு தாவீதைப்போன்று வாளேந்திப் போராடி யூத மக்களுக்கு மீட்பளிப்பார் என்று எண்ணினார். அதனால்தான் இந்நிகழ்வைத் தொடர்ந்து, இயேசு தம் சாவை முதன்முறை முன்னறிவித்தபோது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்துகொண்டு, “ஆண்டவரே, இது வேண்டாம். இப்படி உமக்கு நடக்கவே கூடாது” என்று கூறுகின்றார். ஆனால், மெசியா குறித்த பேதுருவின் தவறான புரிதலை அவருக்கு உணர்த்தும்படியாகவே, "என் கண்முன் நில்லாதே சாத்தானே, நீ எனக்குத் தடையாய் இருக்கிறாய்; ஏனெனில், நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்” என்று அவருக்கு எடுத்துக்காட்டுகின்றார். இதுமட்டுமன்றி, “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில், தம் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர். மாறாக, என்பொருட்டுத் தம்மையே அழித்துக் கொள்கிற எவரும் வாழ்வடைவார்" (16:24-45) என்று உண்மைச் சீடத்துவத்துக்கான இலக்கணத்தையும் அவருக்கும் ஏனைய சீடர்களுக்கும் எடுத்துக்காட்டுகின்றார். மேலும் “ஆண்டவரே ஏன் இப்போது நான் உம்மைப் பின்தொடர இயலாது? உமக்காக என் உயிரையும் கொடுப்பேன்” (காண்க யோவா 13:37) என்று உணர்ச்சிவயப்பட்டு உரைத்தபோதும், அவரை மும்முறை மறுதலிக்கிறார் பேதுரு. ஆனால் தனது உயிர்ப்பிற்குப் பிறந்து திபேரியக் கடற்கரையில் பேதுருவை சந்திக்கும் இயேசு, “யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களைவிடமிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா?” (காண்க யோவா 21: என்று மும்முறை கேட்பதன் வழியாக அவரின் பலவீனத்தை பலமாக மாற்றுகிறார். தொடக்கத்தில், கெனசரேத்து ஏரிக்கரையில் “அஞ்சாதே; இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்” என்று கூறிய இயேசு, “என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்”  “என் ஆடுகளை மேய்”  “என் ஆடுகளைப் பேணிவளர்” என்று மும்முறைக் கூறி அவர் ஆற்றவேண்டிய பணிக்கான ஆணையை வழங்குகின்றார் இயேசு.

புதுவாழ்வுப் பெற்ற பேதுரு

உயிர்த்த இயேசுவுடனான இந்தச் சந்திப்பிற்குப் பிறகு, அவரது தரிசனம் பேதுருவை பழைய வாழ்விலிருந்து புதிய வாழ்விற்குக் கடந்துபோகச் செய்கின்றது. ‘இனிமேல் இதுதான் எனது பாதை, இதில்தான் எனது பயணம்’ என்ற தெளிவு பிறக்கிறது. அதன் விளைவாகத் தனது ஒப்புயர்வற்றத் தலைவராம் இயேசுவுக்காக எதையும் இழக்கத் தயாராகிறார் பேதுரு. இயேசுவின் புனிதமிகு பாடுகளும், இறப்பும், உயிர்ப்பும் அவரது நற்செய்தி பணிக்கான உரமாக அமைகின்றன. அதன்பிறகு, முழுத்துணிவுடன் தனது நற்செய்திப் பணியைத் தொடங்கும் பேதுரு, “என்ன ஆனாலும் நாங்கள் கண்டதையும் கேட்டதையும் எடுத்துரைக்காமலிருக்க எங்களால் முடியாது” (திபா 4:20) என்று கூறும் அளவிற்கு உயிர்த்த ஆண்டவரிடமிருந்து துணிவும் வலிமையும் பெறுகிறார்.

புனித பவுலடியாரின் வாழ்வு

இப்போது பவுலடியாரின் வாழ்வை உற்றுநோக்குவோம். சவுல் எனப்படும் பவுல் தர்சீஸ் நகரைச் சேர்ந்தவர்; பெஞ்சமின் குலத்தில் பிறந்தவர். இவர் கமாலியேல் என்பவரிடம் கல்வி கற்று, யூதச் சமயத்தைக் கடைபிடிப்பதில் மிக உறுதியாக இருந்த ஒரு பரிசேயராக விளங்கினார். அப்போதுதான் இவர் கிறிஸ்தவம் என்ற புதிய நெறியைக் குறித்துக் கேள்விப்பட்டு, அது யூத சமயத்திற்கு எதிராக இருப்பதாக நினைத்து, அம்மதத்தைப் பின்பற்றுவோரை அழித்தொழிக்க நினைத்தார். அதற்காக அவர் எருசலேமிலிருந்து ஆணையைப் பெற்றுக்கொண்டு தமஸ்கு நகர் வழியாகக் குதிரையில் வந்துகொண்டிருந்தபோதுதான், சவுலை சந்திக்கும் இயேசு, “சவுலே, சவுலே, ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்?” என்று கேள்வியெழுப்பும் இயேசு “நீ துன்புறுத்தும் இயேசு நானே" என்றும், "நீ எழுந்து நகருக்குள் செல்; நீ என்ன செய்யவேண்டும் என்பது அங்கே உனக்குச் சொல்லப்படும்” என்றும் கூறி அவரது நற்செய்திப் பணிக்கு அடித்தளமிடுகிறார். மேலும் “அவர் பிற இனத்தவருக்கும் அரசருக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் முன்பாக எனது பெயரை எடுத்துச் செல்ல நான் தேர்ந்தெடுத்துக் கொண்ட கருவியாய் இருக்கிறார். என் பெயரின்பொருட்டு அவர் எத்துணை துன்புறவேண்டும் என்பதை நான் அவருக்கு எடுத்துக்காட்டுவேன்” (காண்க திப 9:1-19) என்று அனனியாவிடம் கூறுகின்றார். பிறகு அவரது கையால் திருமுழுக்குப் பெறும் சவுல் புதுப்பார்வைப் பெறுகிறார். இந்நிகழ்விற்குப் பிறகு தொடங்கிய புனித பவுலடியாரின் நற்செய்தி அறிவிப்புப் பயணம் உரோமையில் அவர் தலைவெட்டப்பட்டு உயிர்துறப்பதுவரைத் தொடர்கிறது.

இன்றைய இரண்டாம் வாசகத்தில், "நான் இப்போதே என்னைப் பலியாகப் படைக்கிறேன். நான் பிரிந்து செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது. நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன் என் ஓட்டத்தை முடித்துவிட்டேன். விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இனி எனக்கென வைக்கப்பட்டிருப்பது நேரிய வாழ்வுக்கான வெற்றி வாகையே. அதை இறுதி நாளில் ஆண்டவர் எனக்குத் தருவார்; நீதியான அந்த நடுவர் எனக்கு மட்டுமல்ல, அவர் தோன்றுவார் என விரும்பிக் காத்திருக்கும் அனைவருக்குமே தருவார்" என்று பவுலடியார் கூறும் வார்த்தைகள் அவரது அர்ப்பணம் நிறைந்த நற்செய்தி வாழ்வுக்குச் சான்றாக அமைகின்றது. மேலும் “பன்முறை சிறையில் அடைபட்டேன்; கொடுமையாய் அடிபட்டேன்; பன்முறை சாவின் வாயிலில் நின்றேன். ஐந்துமுறை யூதர்கள் என்னைச் சாட்டையால் ஒன்று குறைய நாற்பது அடி அடித்தார்கள். மூன்றுமுறை தடியால் அடிபட்டேன்; ஒருமுறை கல்லெறிபட்டேன்; மூன்றுமுறை கப்பல் சிதைவில் சிக்கினேன்; ஓர் இரவும் பகலும் ஆழ்கடலில் அல்லலுற்றேன். பயணங்கள் பல செய்தேன்; அவற்றில், ஆறுகளாலும் இடர்கள், என் சொந்த மக்களாலும் இடர்கள், பிற மக்களாலும் இடர்கள், நாட்டிலும் இடர்கள், காட்டிலும் இடர்கள், கடலிலும் இடர்கள், போலித் திருத்தூதர்களாலும் இடர்கள், இப்படி எத்தனையோ இடர்களுக்கு ஆளானேன். பாடுபட்டு உழைத்தேன்; பன்முறை கண்விழித்தேன்; பசிதாகமுற்றேன்; பட்டினி கிடந்தேன்; குளிரில் வாடினேன்; ஆடையின்றி இருந்தேன்” (2 கொரி 11: 24- 27) என்று பவுல் சொல்வதன் வழியாக அவர் கிறிஸ்துவுக்காக அனுபவித்த பாடுகளை நாம் அறிந்துகொள்ள முடிகிறது. இவர் மட்டும் திருஅவைக்குள் வந்திருக்காவிட்டால் அதன் பயணமும் வளர்ச்சியும் இத்தகையதொரு உன்னதமான நிலையை அடைவதற்கு வழிவகுத்திருக்குமா என்பது தெரியவில்லை. ஆனாலும் யாரை, எப்போது, எக்காரணத்திற்காகத் தடுத்தாட்கொள்ள வேண்டும் என்று உயிர்த்த ஆண்டவருக்குத் தெரியும். அவரின் இந்தத் தடுத்தாட்கொள்ளும் நிகழ்வு புனித அகுஸ்தினார், புனித இஞ்ஞாசியார், புனித சவேரியார் எனத் தொடங்கி இன்றுவரை உலகம் முழுவதும் தொடர்கிறது என்பது மாபெரும் உண்மை அன்றோ!

பேதுருவும் பவுலும்

புனிதர்கள் பேதுருவும் பவுலும் ஈடு இணையற்றவர்கள். இருவரும் போட்டிபோட்டுக்கொண்டு நற்செய்தியை அறிவித்தவர்கள். பேதுரு யூதர்களுக்கு நற்செய்தியை அறிவிப்பதில் கவனம் செலுத்தினார். பவுல் பிற இன மக்களுக்கு நற்செய்தியை அறிவிப்பதில் கவனம் செலுத்தினார். இந்த நற்செய்தி அறிவிப்புப் பணியில் ஏற்பட்ட எண்ணற்ற சவால்களையும், சங்கடங்களையும், துன்ப துயரங்களையும் இருவரும் ஒருசேர தாங்கிக்கொண்டனர். அதேவேளையில், இவர்களுக்குள் கருத்துவேற்றுமை ஏற்பட்டபோது அதனை நேர்பட பேசிக்கொண்டவர்கள் (காண்க. கலா 2:11). உயிர்த்த இயேசு கேபாவுக்கு தோன்றினார் (1 கொரி 15:5) என்று கூறும் பவுலடியார், அவரைத் திருஅவைத் தூண்களில் ஒருவர் (கலா 2:9) என்று அழைக்கின்றார். அவ்வாறே புனித பேதுருவும் தனது கடிதத்தில், "நம் அன்பார்ந்த சகோதரர் பவுலும் தமக்கு அருளப்பட்ட ஞானத்தின்படி இவ்வாறுதான் உங்களுக்கு எழுதியுள்ளார்" (காண்க. 2 பேது 3:16) என்று கூறி பவுலடியாரின் சிறப்பு வரத்தை அங்கீகரிக்கின்றார். குறிப்பாக, பேதுரு படிப்பறிவற்ற மீனவர். ஆனால் பவுலடியார் மெத்த படித்தவர் (காண்க. திப 22:3). கிரேக்க செவ்விலக்கியம், தத்துவம் மற்றும் ஒழுக்கவியலில் பவுலுக்கு நன்கு புலமை இருந்தது. அவரது கடிதத்தில் அவர் எடுத்துக்காட்டும் உருவகங்கள், கருத்துக்கள், எடுத்துக்காட்டுகள் ஆகியவை இதற்குச் சான்றுகளாக அமைகின்றன. இப்படி இருந்தும்கூட, அறிவில் தங்களுள் யார் பெரியவர் என்ற போட்டி அவர்களுக்குள் எப்போதும் எழுந்ததே இல்லை. ஆக, நமது அன்றாட நற்செய்தி அறிவிப்புப் பணிகளில், கருத்து வேற்றுமைகள் நிலவிடினும் அவைகள் நலம் பயப்பவைகளாக இருக்க வேண்டும் என்பதையும், நற்செய்தி அறிவிப்பு என்னும் தொடர் ஓட்டத்தில் எப்போதும் நோக்கம் மட்டுமே முதன்மைத்துவம் பெறவேண்டும் என்பதையும் இவ்விருவரின் வாழ்வு நமக்கு எடுத்துக்காட்டுகின்றது. இதனை மனதில் கொண்டு நமது நற்செய்தி அறிவிப்புப் பணிகளை இன்னும் ஆழப்படுத்துவோம்.

ஒருசமயம் கடலில் மூழ்கி முத்தெடுப்பவர்கள், கடலில் மூழ்கும்போது எப்போதோ கடலில் மூழ்கிய ஒரு கப்பலைக் கண்டுபிடித்தனர். அதிலிருந்து அவர்கள் நிறைய விலை உயர்ந்த பொருள்களை கண்டெடுத்தனர். அதில் ஒன்றுதான் வைரத்தால் ஆன மோதிரம். அந்த மோதிரத்தில் ஒரு கையானது இதயத்தைத் தாங்கிப் பிடிப்பது போன்று இருந்தது. அதற்குக் கீழே, “என்னுடைய இதயத்தைத் தவிர உனக்குக் கொடுப்பதற்கு என்னிடம் ஒன்றுமில்லை” (I have nothing more to give you) என்ற வசனம் பொறிக்கப்பட்டிருந்தது. இந்த மோதிரம் ஒருவர் மற்றவர்மீது கொண்ட அன்பை வெளிப்படுத்த மிக உன்னத பரிசைத் தருவது போன்று இருக்கின்றது. பேதுருவும் பவுலும் தங்களுடைய உயிரையே தந்து, இயேசுவின் மீது கொண்டிருந்த அன்பை வெளிப்படுத்தினர். ஆகவே, நாமும் இயேசுவின் மீது கொண்ட அன்பை வெளிபடுத்த நமது உயிரைத் தரமுன்வர வேண்டும். இவ்வருளுக்காக இந்நாளில் இறையருள் வேண்டி மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 ஜூன் 2025, 09:57