கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழா : ‘உயிரில் கலக்கும் உன்னத உறவு’
செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்
(வாசகங்கள் I.தொநூ 14: 18-20 II. 1 கொரி 11: 23-26 III. லூக் 9: 11b-17)
இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நாகசாகி ஆகிய இரண்டு நகரங்களில் அமெரிக்கவால் வீசப்பட்ட இருபெரும் அணுகுண்டுகள் இலட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தன. அப்போது ஹிரோஷிமாவில் இயேசு சபையின் மறைந்த முன்னாள் அதிபர் பேதுரு அருப்பே அவர்கள் நவதுறவியரின் இயக்குநராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அந்நகரிலிருந்த நாக்கமுரா என்ற ஏழை இளம்பெண் அவருக்கு நன்கு அறிமுகமாகியிருந்தார். இறைபக்தியும் நற்கருணை ஆண்டவர்மீது தணியாத தாகமும் கொண்டிருந்த நாக்கமுராவும் அந்தக் குண்டுவெடிப்பில் சிக்கி சின்னாபின்னமாகியிருந்தாள். அவ்விளம்பெண்ணின் நிலை என்ன ஆயிற்று என்றே தெரியாத நிலையில், தன் நவதுறவியரை அழைத்துக்கொண்டு நற்கருணையையும் கரங்களில் தாங்கிக்கொண்டு அப்பெண்ணைச் சந்திக்கச் சென்றார் பேதுரு அருப்பே. அப்பெண் தங்கியிருத்த அந்தக் குடிசையானது அணுகுண்டுவெடிப்பில் சிக்கி சுக்குநூறாக சிதைந்து போயிருந்தது. அப்போது நவதுறவியரின் உதவியோடு இடிபாடுகளையெல்லாம் அகற்றிவிட்டு நாக்கமுராவைத் தேடினார். அந்தோ பரிதாபம்! பாதி எரிந்தும் எரியாமலும் அலங்கோலமான நிலையில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்தார் நாக்கமுரா. அவரைத் தொட்டு தூக்கி முதலுதவி செய்ய முனைந்தார் பேதுரு அருப்பே. அப்போது கொடிய வேதனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நாக்கமுரா, முனகிக்கொண்டே, “தந்தையே! எனக்கு நற்கருணைக் கொண்டு வந்திருக்கிறீர்களா?” என்று அவரைப் பார்த்துக் கேட்டார். “இதோ! இதோ! உனக்காகவே கொண்டு வந்திருக்கிறேன்” என்று கூறியவாறே, தன் கரங்களில் வைத்திருந்த சிறிய நற்கருணைப் பேழையைத் திறந்து திருநற்கருணையை அவருக்கு வழங்கினார். சொல்லொண்ணா அந்தத் துயரத்தின் மத்தியிலும் இன்முகத்தோடு இயேசுவை தன் உள்ளத்தில் ஏற்ற சிறிது நேரத்திலேயே நாக்கமுராவின் உயிர் பிரிந்தது. உயிரோட்டம் நிறைந்த இந்த நிகழ்வை ‘நற்கருணையில் வளர்ந்தேன்’ என்ற நூலில் பதிவு செய்திருக்கிறார் அண்ணல் பேதுரு அருப்பே.
இன்று நாம் கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். இப்பெருவிழா இயேசுவின் உயிரில் கலந்த உறவாக வாழ நம்மை அழைக்கின்றது. `நற்கருணை என்பது கிறிஸ்தவ வாழ்வின் ஊற்றும் உச்சமும்’ என்று இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கம் கூறுகிறது. ஆம், கிறிஸ்தவர்களாகிய நாம் நம்முடைய வாழ்வுக்கான எல்லா ஆசியையும் அருளையும் நற்கருணையில் இருந்தே பெறுகின்றோம். ஆப்பிரிக்க நாட்டின் ஒரு கிராமத்தில் திருப்பலிக்காகக் கூடிவந்த மக்கள், ‘நற்கருணை இல்லாமல் எங்களால் வாழ முடியாது’ என்று உறுதிபடக் கூறினர். காரணம், நற்கருணை வழியாக கிறிஸ்து நம் வாழ்வில் ஒன்றரக் கலந்துவிடுகிறார். ஒருமுறை உப்புச்சிலை கடலைப் பார்த்து, “நான் உன்னை உயிருக்கு உயிராகக் காதலிக்கிறேன்” என்று கூறியதாம். அதற்கு கடல், “அதனை நீ எப்படி நிரூபிப்பாய்” என்று கேட்டதற்கு, “இதோ இப்படித்தான்” என்று கூறி அந்த உப்புச்சிலை கடலுக்குள் இறங்கிப் போய் கடல் நீரோடு ஒன்றரக் கலந்து போனதாம். இயேசுவும் இப்படித்தான் “நான் உங்களை உயிருக்குயிராக அன்பு செய்கிறேன்” என்று கூறி தன் திருவுடலையும் திருஇரத்தத்தையும் நமக்கு வழங்கியதன் வழியாக நம்முள் ஒன்றாகிப் போனார். நாள்தோறும் திருப்பலியில் நாம் உண்ணும் திருவுடல், திருஇரத்தம் வழியாக அவரோடு நாமும் ஒன்றாகிப் போகிறோம்.
நமது உடல் மற்றும் இரத்தத்தின் மேன்மை
நமது உடல் கற்பனைக்கு எட்டாத அதிசயங்கள் நிறைந்தது. நம்மை வியப்புக்குள்ளாக்கும் விதத்தில் நமது உடல் ஒவ்வொரு வினாடியும் இயங்கிக் கொண்டே இருக்கிறது. ஆனால் உடல் என்ற இந்த உயிர் இயந்திரம் செய்யும் அற்புதங்களை நாம் நினைப்பதும் இல்லை. இரசிப்பதும் இல்லை. சராசரியாக ஒவ்வொரு மனிதரும் தங்கள் வாழ்நாள்களில் 30 ஆயிரம் கிலோ எடை கொண்ட உணவினை உட்கொள்கிறார். நமது இதயம் ஒர் ஆண்டிற்கு 43 இலட்சம் முறை துடிக்கிறது. இதுபோல் ஏராளமான பிரமிக்கத்தக்கப் பணிகளை ஒவ்வொரு வினாடியும் நமது உடல் செய்துகொண்டே இருக்கிறது. அவ்வாறே, நமது உடல் பல பாகங்களைக் கொண்டுள்ளது. அவை அனைத்தும் ஒருங்கிணைந்து ஒன்றுபட்டு இயங்குவது இந்த உயிர் இயந்திரத்தின் சிறப்பம்சமாக அமைகிறது. உடலுக்குள் இரத்தம் தினமும் 16 கோடியே 80 இலட்சம் மைல் தூரம் அளவிற்குப் பயணித்துத்துக்கொண்டே இருக்கிறது. இந்த இரத்தம் உடலின் ‘போக்குவரத்து அமைப்பாகவும், நோய் எதிர்ப்பு சக்திக்கு அடிப்படையாகவும் அமைகிறது. செல்களுக்குத் தேவையான ஆக்சிஜன், தண்ணீர், உணவு போன்றவைகளை இரத்தம்தான் சரியான நேரத்திற்குச் சிறப்பாகக் கொண்டு போய்ச் சேர்க்கிறது. அது மட்டுமின்றி செல்களின் பல்வேறு செயல்பாடுகளால் உருவாகும் கழிவுகள், அதற்குரிய இடங்களில் போய் சேரவும் இரத்தம்தான் துணைபுரிகிறது. அதற்காகதான் இரத்தம் தினமும் உடலுக்குள் அவ்வளவு தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. மேலும் இரத்தத்தின் சிவப்பு அணுக்களில் இருக்கும் ஹீமோகுளோபினின் பங்களிப்பு மிக முக்கியமானது. இதுதான், ஆக்சிஜனை சுவாச கட்டமைப்புகளில் இருந்து பெற்று, செல்களில் கொண்டுபோய் சேர்க்கிறது. அங்கிருந்து கார்பன் டை ஆக்சைடை மீண்டும் சுவாச கட்டமைப்புகளுக்குக் கொண்டு சேர்த்து, உடல் இயக்க நிலையை சீராக்குகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்குத் தேவையான வெள்ளை இரத்த அணுக்கள், இரத்தம் உறைவதற்குத் துணைபுரியும் பிளாஸ்மா போன்றவைகளும் இரத்தத்தில்தான் இருக்கின்றன. இவ்வளவு சிறப்புகளையும் உடைய நமது உடலும் இரத்தமும் பிறரின் நலன்களுக்காகவும் இந்தச் சமுதாயத்தின் மேம்பாட்டிற்காகவும் அர்ப்பணிக்கப்படும் தியாகத்தின் சின்னமாக மாறும்போது அது திருவுடல் திருஇரத்தம் என்ற பெருமையைப் பெறுகிறது.
இதயம் நுழைந்து உயிரில் கலக்கும் உறவு
இயேசு அவர்களிடம், “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; மானிடமகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள். எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன். எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம். எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன். (யோவா 6:53-56). இயேசு கூறும் இந்தப் பகுதியை நாம் எப்படி புரிந்துகொள்வது? இயேசுவின் திருவுடலையும் திருஇரத்தையும் அடையாளப்படுத்தும் அப்பத்தையும் இரசத்தையும் நாம் உண்டு பருகும்போதெல்லாம் நாம் அவராகவே மாறிவிடுகிறோம். இந்நிலையில் அவரது வாழ்வும், இறையாட்சிக் கொள்கைகளும், இலட்சியங்களும் நமதாகின்றன. அதனால்தான் “இதை என் நினைவாகச் செய்யுங்கள்” என்றார் இயேசு. தும்பைச் செடி ஒன்றை வேருடன் பிடுங்கி அதனை சிவப்பு வண்ணம் கலந்த தண்ணீரில் சிறிதுநேரம் வைத்துவிட்டு பின்னர் அச்செடியின் எப்பகுதியை வெட்டி நூண்ணோக்கியில் வைத்துப் பார்த்தாலும் அத்தாவரம் முழுவதும் சிவப்பு வண்ணம் கலந்திருப்பதை நம்மால் காணமுடியும். காரணம், தும்பைச் செடி அவ்வளவு விரைவாகத் தண்ணீரை உறிஞ்சும் திறன் கொண்டது. அவ்வாறே, நாம் உண்ணும் இயேசுவின் திருவுடலும் திருஇரத்தமும் நம் உயிரோடும் உடலோடும் உணர்வோடும் ஒன்றாகக் கலந்துவிடுகிறது.
நாடே போற்றும் நல்லவராக நாட்டை ஆண்டு வந்தார் மன்னர் ஒருவர். திடீரென்று அம்மன்னருக்குத் தீராத நோய் ஒன்று ஏற்பட்டுவிட்டது. எத்தனையோ மருத்துவர்கள் வந்து சிகிச்சை அளித்தும், விதவிதமான மருந்துகளைச் சாப்பிட்டும் கூட அவரால் குணமாக முடியவில்லை. அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வந்தது. இதனால் அவரைக் குறித்து அமைச்சர்களும் நாட்டுமக்களும் அதிகம் கவலைப்பட்டனர். அப்போது இறுதியாக வந்த மருத்துவர் ஒருவர் மன்னரை பரிசோதித்துவிட்டு அமைச்சர்களிடம்,“உங்கள் மன்னர் ஏழு வயது நிரம்பிய ஒரு ஆண் குழந்தையைக் கொன்று சாப்பிட்டார் என்றால் அவர் நிச்சயம் உயிர் பிழைப்பார்” என்றார். மேலும், “அந்த ஆண்குழந்தைக்கு எவ்விதமான நோயும் இருக்கக்கூடாது. அதிலும் அத்தாய்க்கு அவன் ஒரே பிள்ளையாக இருக்க வேண்டும். அத்தாய் கைம்பெண்ணாகவும் இருக்கவேண்டும்” என்றெல்லாம் நிபந்தனைகள் விதித்தார் அம்மருத்துவர். மேலும் “எக்காரணம் கொண்டும் இச்செயல் மன்னருக்குத் தெரியாமல் பார்த்துக்கொள்ளுங்கள்” என்றும் அவர் அமைச்சர்களை எச்சரித்துவிட்டுப் போனார். அமைச்சர்களின் இரகசிய ஆணையை ஏற்று படைவீரர்களும் நாடு முழுவதும் அலைந்து தேடினார்கள். அப்படிப்பட்ட ஆண்குழந்தை அவர்களுக்குக் கிடைக்கவே இல்லை. மிகவும் சோர்ந்துபோய் அரண்மனைக்குத் திரும்பும் வழியில் ஒரு கிராமத்தில் ஒதுக்குப் புறமான வீட்டின் அருகே ஒரு ஆண் குழந்தை மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தது. படைவீரர்கள் அக்குழந்தையைப்பற்றி அருகில் உள்ளவர்களிடம் விசாரித்தனர். அக்குழந்தைக்கு மருத்துவர் கூறிய அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்றிருந்தன. உடனே அக்குழந்தையைப் பிடித்துக்கொண்டு வந்து கொன்று சமைத்து மன்னருக்கு விருந்து படைத்தார்கள்.
அக்குழந்தையின் உடலை உண்டு இரத்தத்தைப் பருகிய மன்னர் உயிர் பிழைத்தார். வானளாவிற்கு மகிழ்ந்தார். தான் குணமடைந்ததற்கான காரணத்தை அறிந்துகொள்ள அமைச்சர்களை அழைத்து விசாரித்தார். வேறுவழியின்று அவர்கள் உண்மையை உரைத்தபோது மன்னர் மனம் வெதும்பி அழுதார். அத்தாயை தான் உடனே சந்தித்து காலில் விழுந்து கதறியழுது மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும், அக்குழந்தைக்கு ஈடாக அதிக செல்வங்களைக் கொடுக்க வேண்டும் என்றும் கூறினார். அமைச்சர்களும் படைவீரர்களும் மன்னரை அழைத்துக்கொண்டு அக்கிராமத்திற்குச் சென்றனர். வீட்டுவாசலில் மனநிறைவோடு அமர்ந்திருந்த அத்தாயை நோக்கினார் மன்னர். “அம்மா, என்னை மன்னித்துவிடுங்கள்” என்று கூறி அவர் கதறி அழுதபோது, அத்தாய் ஓடிவந்து மன்னரைக் கட்டிப்பிடித்துக்கொண்டு, “மன்னா, எப்போது என்மகனைக் கொன்று சாப்பிட்டு அவனது இரத்தத்தைக் குடித்தீர்களோ, அப்போதே நீங்கள் என் மகனாகிவிட்டீர்கள். இப்போது, என்னுடைய இரத்தம்தான் உங்கள் உடம்பிலும் ஓடுகிறது. இதன்றுமுதல் நீங்கள் என்னுடைய இரத்த சொந்தமாகிவிட்டீர்கள். இனி என் கனவுகளும் நினைவுகளும் நீங்கள்தான். என் உயிர் பிரியும் வரையிலும், ஏன், பிரிந்த பின்னரும் கூட என் உற்ற உயிர் மகனும் நீங்கள்தான்” என்றார். அத்தாயின் நிறையன்பில் ஒன்றிந்துபோன மன்னர் அன்றுமுதல் அத்தாயின் உண்மை மகனாகிப்போனார். உண்மை அன்பை பற்றி கவிஞர் வைரமுத்து எழுதுகிறபோது, ‘விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே’ என்கிறார்.
இயேசுவின் மரணத்தை அறிக்கையிடுவோம்
இன்னும் சிறப்பாக இன்றையப் பெருவிழா இயேசுவின் தூய்மைமிகு மரணத்தையும் உயிர்ப்பையும் அறிக்கையிட நமக்கு அழைப்புவிடுக்கின்றது. அதனால்தான் திருப்பலியில் எழுந்தேற்றத்திற்குப் பிறகு, இது நம்பிக்கையின் மறைபொருள் என்று அருள்பணியாளர் கூறியதும், "ஆண்டவரே, நீர் வருமளவும் உமது இறப்பினை அறிக்கையிடுகின்றோம், உமது உயிர்ப்பினையும் எடுத்துரைக்கின்றோம்” என்று நாம் பதில்மொழி தருகின்றோம். இதனைத்தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில், "ஆண்டவரிடமிருந்து நான் எதைப் பெற்றுக்கொண்டேனோ அதையே உங்களிடம் ஒப்படைக்கிறேன்" என்று கூறும் புனித பவுலடியார், ஆண்டவராகிய இயேசு காட்டிக்கொடுக்கப்பட்ட அந்த இரவில், அப்பத்தை எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப்பிட்டு, “இது உங்களுக்கான என் உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள்” என்றார். அப்படியே உணவு அருந்தியபின் கிண்ணத்தையும் எடுத்து, “இந்தக் கிண்ணம் என் இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை. நீங்கள் இதிலிருந்து பருகும் போதெல்லாம் என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள்” (காண்க. மத் 26:26-29) என்று இறுதி பாஸ்கா விருந்தில் இயேசு மொழிந்த வார்த்தைகளை எடுத்துக்காட்டுகின்றார். மேலும் இயேசுவின் திருவிருந்தில் நாம் பங்குகொள்ள வரும்வேளைகளில் எவ்வித வேறுபாடுமின்றி உறவில் ஒன்றிக்க வேண்டும் என்பதையும், நம்மில் இருப்பதை பிறருடன் பகிர்ந்து வாழ வேண்டும் என்பதையும் நம் மனதில் நிறுத்துவோம். இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஐயாயிரம் பேருக்கு உணவு அளிக்கும் நிகழ்வில் இவ்விரு பண்புகளையும் பார்க்கின்றோம். மேலும் இவ்வுறவும் பகிர்வும் நமக்கு நிறைவளிக்க வேண்டும். இதனைத்தான், 'அனைவரும் வயிறார உண்டனர்' (வச 17) என்று பதிவு செய்கின்றார் லூக்கா. நாள்தோறும் நம் இதயம் நுழையும் இயேசுவின் திருவுடலும் திருஇரத்தமும் நம் உயிரில் கலந்து அவரது அன்பிலும் உறவிலும் நம்மை நிலைநிறுத்தட்டும். அன்பு, பகிர்வு, உறவு, ஒன்றிப்பு, தியாகம் ஆகிய உன்னதமான இறையாட்சிக்கான விழுமியங்களை நம் வாழ்வில் நிலைநிறுத்தட்டும். இவ்வருளுக்காக இந்நாளில் மன்றாடுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்