MAP

தூய ஆவியார் பெருவிழா தூய ஆவியார் பெருவிழா  

தூய ஆவியார் பெருவிழா : நீதியின் குரலாக ஒலிக்கும் தூய ஆவியார்!

எங்கெல்லாம் அநீதி தலைவிரித்தாடுகிறதோ அங்கெல்லாம் தூய ஆவியாரின் நீதிக்கான குரலாக நாம் ஒலிக்க வேண்டும்.
தூய ஆவியார் பெருவிழா : நீதியின் குரலாக ஒலிக்கும் தூய ஆவியார்

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள் I. திப 2: 1-11   II. உரோ 8: 8-17   III. யோவா 14: 15-16, 23-26)

கடந்த 2022-ஆம் ஆண்டு மே மாதம் 15-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று, மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 10 அருளாளர்களைப் புனிதர் நிலைக்கு உயர்த்தினார். அவர்களில் டைட்டஸ் பிராண்ட்ஸ்மாவும் ஒருவர். இவருடைய வாழ்வும் உயிர்த்தியாகமும் சற்று வித்தியாசமானது. இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மனியின் தக்காவோ வதை முகாமில் மறைச்சாட்சியாகக் கொல்லப்பட்டவர் இவர். 1881-ஆம் ஆண்டில் நெதர்லாந்தில் பிறந்த இவர், கார்மேல் துறவு சபையின்  அருள்பணியாளராகத் திருப்பொழிவு செய்யப்பட்டார். உரோமைப் பாப்பிறை கிரகோரியன் பல்கலைக்கழகத்தில் மெய்யியலில் முனைவர் பட்டம் பெற்று, சமூகவியல் படிப்பையும் முடித்தவர். மெய்யியல் மற்றும், தியானயோகிகள் ஆழ்நிலை வரலாறு கல்வியைக் கற்றுக்கொடுத்தவர். நெதர்லாந்து ஆயர்கள், இவரைக் கத்தோலிக்கப் பத்திரிகையாளர்களின் செய்தித் தொடர்பாளராக நியமித்து, நாத்சி சர்வாதிகாரத்தை எதிர்த்து விளம்பரங்கள் செய்யுமாறு பணித்தனர். 1942-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜெர்மனி நெதர்லாந்தை ஆக்கிரமித்தபோது பிராண்ட்ஸ்மா கைது செய்யப்பட்டார். கத்தோலிக்கச் செய்தித்தாள்கள் நாத்சி பிரச்சாரத்தை வெளியிட வேண்டும் என்று அவர் அறிவித்தால், அவர் துறவு மடத்தில் அமைதியான வாழ்க்கை வாழ அனுமதிக்கப்படுவார் என்று நாத்சிகள் அவரிடம் கூறியபோது பிராண்ட்ஸ்மா அதை ஏற்க மறுத்துவிட்டார். அதற்காக அவர் தக்காவோ வதை முகாமில் கொடுந்துயரங்களுக்கும் பட்டினிக்கும் ஆளானார். அதே ஆண்டு ஜூலை 26-ஆம் நாளன்று, கார்போலிக் அமிலம் எனப்படும் நஞ்சு ஊசி செலுத்தப்பட்டு அவர் படுகொலை செய்யப்பட்டார். அப்போது அவருக்கு வயது 61.  

நம் அன்னையாம் திருஅவை இந்நாளில் பெந்தக்கோஸ்து என்று அழைக்கப்படும் தூய ஆவியார் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது. இந்நாளைத் திருஅவைப் பிறந்த நாளாகவும் நாம் சிறப்பிக்கின்றோம். இயேசுவின் விண்ணேற்றத்திற்குப் பின்பு அவரின் துணையாளராக வரும் தூய ஆவியார் திருத்தூதர்களை இயேசுவின் நற்செய்தியை அறிவிக்கும் நீட்சிகளாக வழிநடத்துகிறார். படைப்பின் தொடக்கத்திலேயே நீர்த்திரளின்மேல் அசைந்தாடிக் கொண்டிருந்த கடவுளின் ஆவியார் (தொநூ 1:2) உலகின் இறுதிவரைக்கும் உடன்பயணிக்கும் துணையாளராகச் செயல்படுகின்றார். “உலகிலே செய்யுமாறு தந்தை மகனிடம் ஒப்படைத்த வேலையைச் செய்துமுடித்ததும் திருஅவையை எந்நாளும் தொடர்ந்து தூய்மையாக்கவும், இதனால் நம்பிக்கை கொண்டோர் எல்லோரும் கிறிஸ்துவின் வழியாக ஒரே ஆவியார் மூலம் தந்தையை அணுகும் பேறுபெறவும் பெந்தக்கோஸ்து நாளில் தூய ஆவி அனுப்பப்பெற்றார். இவரே வாழ்வின் ஆவியாக, அதாவது பொங்கி எழும் ஊற்றாக மாறி நிலைவாழ்வை அளிப்பவராகத் திகழ்கின்றார். ஆவியார் திருஅவையையும் நம்பிக்கைக் கொண்டோரின் இதயங்களையும் கோவிலாகக் கொண்டு குடியிருக்கிறார்; அவர்களிடமிருந்த வண்ணம் அவர் வேண்டுகிறார்; அவர்கள் கடவுளின் பிள்ளைகள் என்பதற்குச் சான்று பகர்கின்றார்; முழு உண்மையை நோக்கித் திருஅவையை வழி நடத்துகிறார்; ஒன்றிப்பாலும் பணியாலும் அதில் ஒற்றுமையை விளைவிக்கிறார்; இன்னும் பலதரப்பட்ட திருஅவை ஆட்சி சார்ந்த கொடைகளையும் அருள்கொடைகளையும் அதற்கு அளித்து அதனை வழிநடத்துகிறார்; தம் கனிகளால் அதற்கு அணிசெய்கிறார்; நற்செய்தியின் வல்லமையால் திருஅவை இளமைப் பொலிவோடு துலங்கச் செய்கிறார்; என்றும் அதற்கு மறுமலர்ச்சி தருகிறார்; அதன் மணமகனான கிறிஸ்துவுடன் முழுமையாய் ஒன்றிக்கத் திருஅவையை வழிநடத்திச் செல்கிறார்” என்று தூய ஆவியாரின் செயல்பாடுகள் பற்றி ‘திருஅவையைத் தூய்மையாக்கும் தூய ஆவியார்’ என்ற தலைப்பில் இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடுகள் எடுத்தியம்புகின்றன.

நான் உங்களிடம் சொல்ல வேண்டியவை இன்னும் பல உள்ளன. ஆனால், அவற்றை இப்போது உங்களால் தாங்க இயலாது. உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார்" (யோவா 16:12-13) என்று ஏற்கனவே தூய ஆவியார் வருகையின் நோக்கம் பற்றி தொடக்கவுரைக் கொடுத்துவிட்டார் இயேசு. இன்றைய நற்செய்தியிலே, “என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார்” (யோவா 14:26) என்கின்றார் இயேசு. எனவே, தூய ஆவியார் கற்றுத்தரும் செயல்களில் நீதிக்கான செயல் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

இருவேறு இயல்புகள்

தன் சீடர்களுக்குப் போதனை செய்துகொண்டிருந்த குரு ஒருவர், “ஒவ்வொரு மனிதருடைய உள்ளத்திலும் இரண்டு ஓநாய்கள் வாழ்கின்றன. அவை எப்போதும் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டே இருக்கின்றன” என்றார். உடனே எழுந்த சீடர் ஒருவர், “குருவே, அப்படியென்றால் இறுதியில் எந்த ஓநாய் சண்டையில் வெற்றியடையும்” என்று கேட்டார். அதற்கு குரு, “நீ எந்த ஓநாய்க்கு அதிக உணவூட்டி வளர்க்கிறாயோ அந்த ஓநாய்தான் இறுதியில் வெல்லும்” என்றார். நமது உள்ளங்களிலும் தூய ஆவிக்கும் தீய ஆவிக்குமான போராட்டம் இடைவிடாது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. அதாவது, வாழ்வா சாவா, நன்மையா தீமையா, ஒளியா இருளா, உயர்வா, தாழ்வா, நீதியா அநீதீயா என மனிதர் தனது வாழ்க்கையில் போராடுகிற பொழுதெல்லாம் அவர் எடுக்கின்ற முடிவைப் பொறுத்தே அவரின் வாழ்வு மாறுபடுகிறது. குறிப்பாக நீதி, நேர்மை, உண்மை, சமத்துவம், உடன்பிறந்த உறவு என உயர்ந்த விழுமியங்கள் பக்கம் நிற்கவேண்டுமென்றால் அவர் கட்டாயம் தூய ஆவியாரின் உடனிருப்பைத்தான் தேடவேண்டும். இவைகளன்றி, சுயநலம் கொண்டு இவ்வுலகப் பேரின்பங்களில் மூழ்கி வாழ நினைப்பவர்கள் தீய ஆவியின் பக்கம் நின்றுகொள்வர். உலகம் தொடங்கியதிலிருந்து இன்றுவரை இந்த இரண்டு ஆவிகளுக்குமான போராட்டம் என்பது தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது. ஆக, தூய ஆவியாரின் பக்கம் நிற்பவர்கள் நீதிக்காகத் தங்கள் இன்னுயிரை இழப்பவர்களாகவும், தீய ஆவியின் பக்கம் நிற்பவர்கள், அவர்களின் உயிர்களைப் பறிக்கும் தீயவர்களாகவும் வாழ்ந்து வருகின்றனர் என்பதே வரலாறு நமக்குச் சொல்லும் பாடம்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில், கடவுளின் ஆவி, அதாவது, தூய ஆவியார் குறித்தும், தீய ஆவி குறித்தும் பேசுகின்றார் புனித பவுலடியார். குறிப்பாக, "ஊனியல்புக்கு ஏற்ப வாழ்வோர் கடவுளுக்கு உகந்தவர்களாய் இருக்க முடியாது. ஆனால், கடவுளின் ஆவி உங்களுக்குள் குடிகொண்டிருந்தால், நீங்கள் ஊனியல்பைக் கொண்டிராமல், ஆவிக்குரிய இயல்பைக் கொண்டிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டிராதோர் அவருக்கு உரியோர் அல்ல" (வச. 8-9) என்று அவர் கூறும் வார்த்தைகள் நாம் எந்த ஆவியின் பக்கம் நின்று செயல்பட வேண்டும் என்பதை எடுத்துக்காட்டுவதாக இருக்கின்றன. குறிப்பாக, இந்த வார்த்தைகளில் ஊனியல்புக்குரிய இயல்பு, ஆவிக்குரிய இயல்பு என்று இருவேறு இயல்புகளை எடுத்துக்காட்டுகின்றார் புனித பவுலடியார். இவற்றையே ஊனியல்பின் செயல்கள் என்றும் தூய ஆவியின் கனிகள் என்றும் கலாத்தியருக்கு எழுதிய திருமடலிலே தெளிவுபடக் கூறுகின்றார். பரத்தைமை, கெட்ட நடத்தை, காமவெறி, சிலைவழிபாடு, பில்லி சூனியம், பகைமை, சண்டை, சச்சரவு, பொறாமை, சீற்றம், கட்சி மனப்பான்மை, பிரிவினை, பிளவு, அழுக்காறு, குடிவெறி, களியாட்டம் ஆகிய பதினாறு செயல்களையும் ஊனியல்புக்கு உரியவைகளாகவும் (தீய ஆவி), அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் ஆகிய ஒன்பதையும் தூய ஆவிக்குரிய கனிகளாகவும் எடுத்துக்காட்டுகிறார் (காண்க. கலா 5:19-23). அதனால்தான்,  "ஊனியல்புக்கேற்ப வாழ்வோரின் நாட்டமெல்லாம் அந்த இயல்புக்கு உரியவற்றின்மீதே இருக்கும்; ஆனால், ஆவிக்குரிய இயல்புக்கேற்ப வாழ்வோரின் நாட்டம் ஆவிக்கு உரியவற்றின் மீதே இருக்கும். ஊனியல் மனநிலை கொண்டிருப்போருக்கு வருவது சாவே; ஆவிக்குரிய மனநிலை கொண்டிருப்போருக்கு வருவது வாழ்வும் அமைதியும் ஆகும்" (உரோ 8: 5-6) என்றும் தெளிவுபடுத்துகின்றார். ஆக, தூய ஆவியின் துணையால் வாழும் நாம், அந்த ஆவி காட்டும் நெறியிலேயே நடக்க முயல்வதுதான் நீதிக்கான செயல்களின்படி வாழ்வதாகும்.

இறைவாக்கினர் வாழ்வில் தூய ஆவியார்

பழைய ஏற்பாட்டு நூல்களில் இறைவாக்கினர்கள் தூய ஆவியாரின் தூண்டுதல்பெற்று நீதிக்காகக் குரல்கொடுப்பதைக் காண முடிகிறது. அதிலும் குறிப்பாக, சிறிய இறைவாக்கினர்கள் மிகப்பெரும் துணிச்சலோடு உண்மையின் பக்கம் நின்றுகொண்டு நீதிக்காகக் குரல் எழுப்புகின்றனர். “வறியோரை நசுக்கி, நாட்டில் உள்ள ஒடுக்கப்பட்டோரை அழிக்கின்றவர்களே, இதைக் கேளுங்கள்; ‘நாம் தானியங்களை விற்பதற்கு அமாவாசை எப்பொழுது முடியும்? கோதுமையை நல்ல விலைக்கு விற்பதற்கு ஓய்வுநாள் எப்பொழுது முடிவுறும்? மரக்காலைச் சிறியதாக்கி, எடைக்கல்லைக் கனமாக்கி, கள்ளத் தராசினால் மோசடி செய்யலாம்; வெள்ளிக்காசுக்கு ஏழைகளையும் இரு காலணிக்கு வறியோரையும் வாங்கலாம்; கோதுமைப் பதர்களையும் விற்கலாம்’ என்று நீங்கள் திட்டமிடுகிறீர்கள் அல்லவா?’ ஆண்டவர் யாக்கோபின் பெருமைமீது ஆணையிட்டுக் கூறுகின்றார்: அவர்களுடைய இந்தச் செயல்களுள் ஒன்றையேனும் நான் ஒருபோதும் மறக்கமாட்டேன் (ஆமோ 8:4-7). அவ்வாறே முதியவர் இருவரின் தீய ஆசைக்கு இணங்காத சூசன்னா என்ற இறையச்சம் கொண்டிருந்த இளம்பெண்ணுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. அவர் சாவுக்குத் தீர்ப்பிடப்பட்ட நிலையில் கடவுளை நோக்கி அபயக்குரல் எழுப்புகிறார். அப்போது, தானியேல் என்னும் இளைஞன் வழியாகக் கடவுள் அப்பெண்ணைக் காப்பாற்றி நீதியை நிலைநிறுத்துவதைப் பார்க்கிறோம். ஆண்டவர் சூசன்னாவுடைய கூக்குரலுக்குச் செவிசாய்த்தார். கொல்லப்படுமாறு அவர் நடத்திச் செல்லப்பட்ட பொழுது, தானியேல் என்னும் பெயருடைய இளைஞரிடம் தூய ஆவியைக் கடவுள் தூண்டிவிட்டார். தானியேல் உரத்த குரலில், “இவருடைய இரத்தப்பழியில் எனக்குப் பங்கில்லை” என்று கத்தினார். (தானி (இ) 2:44). இப்படி எத்தனையோ நீதிக்கான செயல்கள் இன்று நம்மத்தியிலும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வெளியாகும் லங்கேஷ் பத்திரிகையின் முதன்மை ஆசிரியரும் மூத்த பெண் பத்திரிகையாளருமான கௌரி லங்கேஷ். பிரபல ஆங்கில நாளேடுகளில் பணியாற்றியவர். பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் வசித்து வந்த இவர் சமூகச் சிந்தனையாளராகவும், எழுத்தாளராகவும், போராட்டக்காரராகவும் விளங்கினார். வகுப்பு வாதம் மற்றும் மதவாதத்துக்கு எதிராகச் செயல்பட்டவர். மத்திய அரசை விமர்சித்தும், இந்துத்துவாவை எதிர்த்தும் தொடர்ந்து பல்வேறு கட்டுரைகளை இவர் எழுதி வந்தார். கோரக்பூரில் நிகழ்ந்த குழந்தைகள் மரணம், குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற கலவரங்கள், இஷ்ரத் ஜஹான் விவகாரம், உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து எழுதிய இவர், பணமதிப்பிழக்கம், ரோஹிங்கியா இனத்தவர் மீது நடத்தப்படும் அத்துமீறல்கள் உள்ளிட்டவைகள் குறித்தும் பேசி வந்தார். இவரின் இதழில் வெளிவந்த கட்டுரை ஒன்றுக்காக பாஜக எம்பி பிரஹலாத் ஜோஷி இவர்மீது அவதூறு வழக்குத் தொடர்ந்திருந்தார். வலது சாரிகளைக் கடுமையாக விமர்சித்து வந்த கவுரி லங்கேஷ், எப்போதும் தன் கருத்துக்களை முன்வைக்கத் தயங்காத துணிச்சல் மிக்கவர். இந்நிலையில், 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதியன்று, வெளியே சென்று விட்டு தனது காரில் வீட்டுக்கு திரும்பினார். காரை வெளியே நிறுத்திவிட்டு வீட்டுக்குள் செல்வதற்காக வாயிற்கதவைத் திறக்க முயன்றபோது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் நான்கு பேர், அவரைத் துப்பாகியால் சரமாரியாக சுட்டனர். இரத்த வெள்ளத்தில் சரிந்த அவர், நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மூத்த பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இக்கொலைக்குப் பல்வேறு கண்டனக் குரல்களும் எழுந்தன. ஆகவே நீதிக்காகக் குரல் கொடுத்து உயிர்துறக்கும் அனைவருமே தூய ஆவியாரால் இயக்கப்படுபவர்களே!

தூய ஆவியாரின் பன்முகத்தன்மை

அடுத்து தூய ஆவியார் வெளிப்படுத்தும் இன்னொரு முக்கியமான பண்பு பன்முகத்தன்மை. சாதி, மதம், இனம், நிறம், மொழி, நாடு, கலாச்சாரம், பண்பாடு என்ற வேறுபாடுகளைக் கடந்து அனைவரையும் தனது சகோதரர் சகோதரிகளாக ஏற்று அன்பு செய்வதையும் பணிபுரிவதையும் தான் பன்முகத்தன்மை என்று வரையறை செய்கின்றோம். தூய ஆவியார் இந்தப் பன்முகத்தன்மையைக் கொண்டவராக எல்லாரையும் எல்லா மக்களுக்கும் நீதியான செயல்களின் அடிப்படையில் பணியாற்றத் தூண்டுகிறார். இதைத்தான் இன்றைய முதல் வாசகமும் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. குறுகிய நோக்கம் விடுத்து அனைவரையும் கடவுளின் மக்களாகப் பார்க்கும் மனப்பான்மை நமக்குள் ஏற்படும்போதுதான் நமது நீதிகானப் பணிகள் அனைத்து மக்களுக்கும் உரியதாக அமையும். இப்பண்பில் வளர இந்நாளில் தூய ஆவியாரிடம்  மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 ஜூன் 2025, 11:47