MAP

தமஸ்கஸ் ஆலயம் தாக்குதல் தமஸ்கஸ் ஆலயம் தாக்குதல்  (ANSA)

தமஸ்கஸ் ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்தில் மனித குண்டுவெடிப்பு

தமஸ்கஸின் ட்வீலா பகுதியில் உள்ள தூய எலியாஸ் தேவாலயத்தில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர்

சுஜிதா சுடர்விழி - வத்திக்கான்

ஜூன் 22-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தமஸ்கஸில் உள்ள தூய  எலியா கிரேக்க ஆர்த்தடாக்ஸ் ஆலயத்தில் நடந்த வழிபாட்டில் கலந்து கொண்ட  ஒருவர் மனித வெடிகுண்டுகளால்  நடத்திய தாக்குதலில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர் எனவும் தாக்குதல் நடத்தியவர் வெடிக்கும் வார்க்கச்சை அணிந்திருந்ததாகவும்  சிரியா  ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தாக்குதல் நடத்தியவர் இஸ்லாமிய அரசு என்று அழைக்கப்படும் அமைப்பைச் சேர்ந்தவர் என்று  சிரியாவின் உள்துறை அமைச்சகம் கூறியுள்ளபோதிலும், தாக்குதலுக்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

தாக்குதல் நடத்தியவர் ஆலயத்திற்குள் நுழைந்து, மக்கள்  மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, பின்னர் தனது வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாக அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் 52 பேர் காயமடைந்ததாக  நலத்துறை  அமைச்சகம் தெரிவித்துள்ள அதேவேளை, சிரியாவின்  தகவல்துறை அமைச்சர் ஹம்சா மொஸ்தபா தனது  X  தள  பதிவில் இதை பயங்கரவாத தாக்குதல் என்று அழைத்துள்ளதுடன்,  குற்றவியல் அமைப்புகளை எதிர்த்துப் போராடுவதற்கும், மக்களின்  பாதுகாப்பை அச்சுறுத்தும் அனைத்து தாக்குதல்களிலிருந்தும் மக்களை  பாதுகாப்பதற்கும் அதன் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதற்கான அரசின் உறுதிமொழியையும் நாங்கள் நிலைநிறுத்துவோம் என்றும் உறுதியளித்துள்ளார்.

மேலும், அந்தியோக்கியா மற்றும் அனைத்து கிழக்கின் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் ஆயர் மற்றும்  துணை ஆயர்  இணைந்து  கூறுகையில், தாக்குதல் நடத்தியவர் ஆலயத்திற்குள் ஒரு கையெறி குண்டை வீசியதாகவும் கூறியுள்ளனர்.

சிரியாவின்   அரசுத்தலைவர் அகமது அல்-ஷாரா அவர்கள் ஜனவரி மாதம் பஷர் அல்-அசாத்தை பதவி நீக்கம் செய்த பின்னர் தமஸ்கில் நடந்த முதல் மனித குண்டுவெடிப்பு இதுவாகும், மற்றும் இந்த தாக்குதலைத் தொடர்ந்து கிரேக்க வெளியுறவு அமைச்சகம் இந்த கடுமையான பயங்கரவாத மனித  குண்டுவெடிப்பைக் கண்டித்து ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த பயங்கரவாதச்  செயலைப்  பொறுப்பேற்று சிரியா நாட்டின்  இடைக்கால அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கிறிஸ்தவ சமூகங்கள் மற்றும் அனைத்து மதக் குழுக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை செயல்படுத்தப்பட வேண்டும் என்றும், அவர்கள் அச்சமின்றி வாழ அனுமதிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் அழைப்பு விடப்பட்டுள்ளது..

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 ஜூன் 2025, 15:47