MAP

அருள்சகோதரி Daria Tyborska. அருள்சகோதரி Daria Tyborska. 

அருள்பணியாளர்களுக்காக செபிக்கும் பெத்தானியா மறைப்பணி

பெத்தானியா மறைப்பணி 1999-ஆம் ஆண்டு பிப்ரவரி 4, அன்று, அருள்சகோதரி கேப்ரியலா பாசிஸ்தாவின் முன்முயற்சியால் தொடங்கப்பட்டது

மெரினா ராஜ் - வத்திக்கான்

பெத்தானியா மறைப்பணியானது அருள்பணியாளர்களுக்கான பணியில் அவர்களுக்கு ஆன்மிக உடனிருப்பையும் உறுதுணையையும் வழங்குகின்றது என்றும், 26 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இப்பணியானது, ஆயிரக்கணக்கான பொதுநிலையினரையும் அருள்பணியாளர்களையும் செபத்தில் ஒன்றிணைத்துள்ளது என்றும் கூறினார் அருள்சகோதரி Daria Tyborska.

சாதாரண மக்களாக அருள்பணியாளர்களின் குறைகளையும் தவறுகளையும் மட்டும் கவனித்து, அவர்களுக்காக செபிப்பதை தற்போது நாம் மறந்துவிட்டோம் என்று கூறிய அருள்சகோதரி Daria Tyborska அவர்கள், பெத்தானியா மறைப்பணி அருள்பணியாளர்களுக்காக செபிக்கும் பணியை முதன்மையாகக் கொண்டுள்ளது என்றும் வத்திக்கான் செய்திகளுக்கு எடுத்துரைத்தார்.

பெத்தானியா மறைப்பணி 1999-ஆம் ஆண்டு பிப்ரவரி 4, அன்று, அருள்சகோதரி கேப்ரியலா பாசிஸ்தாவின் முன்முயற்சியால் தொடங்கப்பட்டது என்றும், அருள்பணியாளர்களின் மகிழ்ச்சிகளையும் கவலைகளையும் கேட்டு, அவர்களுக்கு செபத்துடன் பதிலளித்து வந்தார் என்றும் கூறினார்.

அருள்பணியாளர்களுக்காக செபிக்க ஏற்பாடு செய்யப்பட்ட முதல் நற்கருணை ஆராதனையில் எட்டுபேர் கலந்து கொண்டு தங்கள் வாழ்நாள் முழுவதும் ஓர் அருள்பணியாளருக்காக சிறப்பாக செபிக்க தங்களை அர்ப்பணித்துக் கொண்டனர் என்றும் கூறினார் சகோதரி டாரியா.

தற்போது 8,800 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இம்மறைப்பணியில் இருக்கின்றனர் என்றும், பெத்தானியா சபை அருள்சகோதரிகளால் வழிநடத்தப்படும் இப்பணியானது செபத்தின் வழியாக அருள்பணியாளர்களை ஆதரிப்பதையும் மேய்ப்புப்பணியில் அவர்களுக்கு உதவுவதையும் அடிப்படையாகக் கொண்டது என்றும் கூறினார் அருள்சகோதரி Daria Tyborska. 

ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஓர் அருள்பணியாளர் நியமிக்கப்படுகிறார், அவருக்காக அவர்கள் செபிக்க வேண்டும், அவருடைய "நிழலாக" மாறி, தூய ஆவி மற்றும் கடவுளின் தாய் மரியாவிடம் செபிப்பதன் வாயிலாக விவேகத்துடன் அவரை ஆதரிக்கிறார்கள் என்றும் கூறினார் சகோதரி டாரியா.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 ஜூன் 2025, 14:20