அன்னை ஓர் அதிசயம் – Monte Berico மற்றும் ரோ அன்னை மரியா திருத்தலங்கள், இத்தாலி
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
விச்சென்சா (Vicenza) நகரம், இத்தாலியின் வடகிழக்கில் வெனெத்தோ மாநிலத்தின் தலைநகராகும். உலகின் அழகிய நகரங்களில் ஒன்றாகக் கருதப்படும் வெனிஸ் நகருக்கு மேற்கே ஏறக்குறைய 60 கிலோ மீட்டர் தூரத்திலும், இத்தாலியின் வணிக மாநகரமான மிலானுக்கு கிழக்கே 200 கிலோ மீட்டர் தூரத்திலும் இந்நகரம் அமைந்துள்ளது. வளமையான வரலாறு மற்றும் கலாச்சாரத்துக்குப் பெயர்போன விச்சென்சா நகரம் பலநாட்டவர் வந்து தங்கும் நகரமாக மாறி வருகிறது. பல அருங்காட்சியகங்கள், வளாகங்கள், பெரிய பெரிய வீடுகள், ஆலயங்கள் என இந்நகரம் பல கலாச்சாரச் செல்வங்களைக் கொண்டுள்ளது. இந்நகரிலுள்ள ஒலிம்பிக் நாடக அரங்கு("city of Palladio") 1994ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் கல்வி, கலாச்சார மற்றும் அறிவியல் நிறுவனமான UNESCOவின் பாராம்பரிய வளங்களில் ஒன்றாக இணைக்கப்பட்டது. இந்நகரிலிருந்து ஏற்றுமதியாகும் பொருள்களின் மதிப்பை வைத்துப் பார்க்கும்போது, இந்நகரம் இத்தாலியின் மூன்றாவது பெரிய தொழிற்சாலை நகரமாகவும், நாட்டின் பணக்கார நகரங்களில் ஒன்றாகவும் உள்ளது. குறிப்பாக, இந்நகரிலுள்ள துணி மற்றும் எஃகுத் தொழிற்சாலைகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வேலை செய்கின்றனர். மேலும், இத்தாலியில் செய்யப்படும் தங்கம் மற்றும் பிற நகைகளில் ஐந்தில் ஒரு பகுதி விச்சென்சாவில் செய்யப்படுகின்றது. கணினி உதிரிப்பாகங்கள் செய்யும் தொழிற்சாலையும் இங்கு உள்ளது. சொல்லப்போனால், microprocessorஐக் கண்டுபிடித்தவர்களில் ஒருவரான Federico Faggin என்பவர் விச்சென்சாவில் பிறந்தவர். 2008ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இந்நகரில் 1,15,927 பேர் வாழ்கின்றனர். இவ்வளவு புகழ்பெற்ற விச்சென்சா நகர், மொந்தே பெரிக்கோ அதாவது பெரிக்கோ மலையடிவாரத்தில் (Monte Berico) வடக்கில் அமைந்துள்ளது.
மொந்தே பெரிக்கோ அல்லது பெரிக்கோ என்ற மலையின் உச்சியில், விச்சென்சா நகரை நோக்கியபடியுள்ள புனித மரியா திருத்தலத்தின் வரலாறு 15ஆம் நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது. 70 வயதான வின்சென்சா பசினி (Vincenza Pasini) என்ற வேளாண்மைத் தொழில் செய்து வந்த பெண்ணுக்கு 1426ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதியும், 1428ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் தேதியும் அன்னைமரியா காட்சி கொடுத்ததோடு இத்திருத்தலத்தின் வரலாறு தொடர்பு கொண்டது. வயலில் வேலை செய்து கொண்டிருந்த தனது கணவர் ஜொவான்னி தி மொந்தேமெட்சோவுக்கு மதிய உணவு எடுத்துச் சென்றபோது வின்சென்சாவுக்கு மொந்தே பெரிக்கோவில் அன்னைமரியா முதன்முறையாகக் காட்சி கொடுத்தார். அப்போது அன்னைமரியா வின்சென்சாவிடம், தன்னை மகிமைப்படுத்தும் விதமாக அவ்விடத்தில் ஓர் ஆலயம் கட்டுமாறு கேட்டுக்கொண்டார். அவ்வாறு கட்டினால் அந்நகரில் அப்போது பரவியிருந்த கொள்ளைநோய் பரவாமல் இருக்கும், இல்லையென்றால் தொந்தரவுகள் அதிக வன்முறைகளோடு மேலும் தொடரும் என்று சொன்னார். ஆனால் வின்சென்சா சொன்னதை ஆயரோ, அருள்பணியாளர்களோ நம்பவில்லை. கொள்ளைநோயின் கொடுமையும் தொடர்ந்தது. ஆயினும் அன்னைமரியா வின்சென்சாவுக்கு 1428ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் தேதிவரை பலதடவைகள் காட்சி கொடுத்து தான் முதல் காட்சியில் சொன்னதை வலியுறுத்தி வந்தார்.
1428ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் தேதியன்று வின்சென்சாவுக்கு அன்னைமரியா தோன்றினார். அச்சமயத்தில் விச்சென்சா நகரம் கொடிய துன்பங்களுக்கு உள்ளாகி சிதைந்திருந்தது. இந்தக் கடைசி காட்சியின்போதும் தான் முதல் காட்சியில் சொன்னதுபோல், தனக்கென அவ்விடத்தில் ஓர் ஆலயம் கட்டுமாறு வலியுறுத்தினார். அவ்வாறு அம்மலையில் கட்டும்போது அங்கு பாறையிலிருந்து தண்ணீர் ஊற்றெடுக்கும் என்றும் அன்னைமரியா கூறினார். இந்தக் கடைசி காட்சிக்குப் பிறகு அந்நகர ஆயர், அருள்பணியாளர்கள், நகரத் தலைவர்கள், ஆலோசனைக் குழுவினர் என 1500 பேர் கூடி பெரிக்கோ மலையில் விரைவில் ஆலயம் கட்டுவதற்குத் தீர்மானித்தனர். அதற்கு 24 நாள்கள் கழித்து ஆகஸ்ட் 25ஆம் தேதியன்று ஆயர் தலைமையில் அனைவரும் பெரிக்கோ மலைக்கு ஏறிச்சென்று ஆலயம் கட்டும் பணியைத் தொடங்கினர். அப்போது அங்கு பாறையிலிருந்து நீர் பெருக்கெடுப்பதைக் கண்டு அனைவரும் வியந்தனர். அம்மலையிலிருந்து தண்ணீர் ஆறாக, பெரும் சப்தத்துடன் பெருக்கெடுத்து ஓடியது. பல புதுமைகளும் நடந்தன. பலர் குணம் பெற்றனர். கொள்ளைநோயும் நின்றது. அதன் பின்னர் ஆயர் அக்காட்சி உண்மையென நம்பினார். மூன்று மாதங்களில் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது. அதற்குப் பின்னர் அப்பகுதி இன்றுவரை இறைவனின் அருளால் கொள்ளைநோயிலிருந்து முற்றிலும் காப்பாற்றப்பட்டுள்ளது.
ஒரு நூற்றாண்டு கடந்து அந்த நீரூற்று வற்றிவிட்டது. ஆயினும் 1955ஆம் ஆண்டில் அவ்விடத்தில் புதிய துறவு சபை இல்லம் கட்டத் தொடங்கியபோது மீண்டும் நீர் ஊற்றிலிருந்து தண்ணீர் வந்தது. மொந்தே பெரிக்கோ திருத்தலம், தற்போது ஐரோப்பாவில் அன்னைமரியாவுக்கென அர்ப்பணிக்கப்பட்டுள்ள மிக்பெரிய திருத்தலங்களில் ஒன்றாக உள்ளது. ஒவ்வொரு மாதத்தின் முதல் ஞாயிறன்று ஏறக்குறைய 22 ஆயிரம் பேர் ஒப்புரவு அருள்சாதனத்தைப் பெறுகின்றனர். இத்திருத்தலத்தை நிர்வகித்து வரும் மரியின் ஊழியர் சபை அருள்பணியாளர்களில் ஒருவர் கூறியபோது, சிலவேளைகளில் இரவு பத்துமணிவரைகூட ஒப்புரவு அருள்சாதனத்தைக் கேட்கவேண்டியிருக்கும் என்று தெரிவித்தார். மரியின் ஊழியர் சபையினர் 1435ஆம் ஆண்டுமுதல் இந்த அழகான, புனிதம் நிறைந்த மொந்தே பெரிக்கோ திருத்தலத்தை நிர்வகித்து வருகின்றனர். நூற்றாண்டுகளாக இந்தத் திருத்தலம், Palladio, Piovene, Miglioranza போன்ற புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர்களால் சீரமைக்கப்பட்டுள்ளது. அன்னைமரியாவை மேன்மைப்படுத்தும் விதத்தில் அங்குள்ள படிக்கட்டுகள் 1595ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டன. இத்திருத்தலத்தை அந்நகரத்தோடு இணைக்குமாறு அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டுகள் Francesco Muttoni என்பவரால் 1746ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி உருவாக்கப்பட்டன. இவை 150 வளைவுகளுடன் 10 பகுதிகளாக ஏறக்குறைய 700 மீட்டர் நீளத்தைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு பகுதியும் செபமாலையின் 15 பேருண்மைகள் மற்றும் 150 அருள்நிறைந்த மரியே செபத்தின் அடையாளமாக உள்ளது.
இயேசுவின் தாயாம் அன்னைமரியா தினமும் உலகெங்கும் செய்துவரும் அற்புதங்கள் அளவற்றவை. அத்தாயிடம் செல்வோம்.
வியாகுல அன்னை திருத்தலம், ரோ, இத்தாலி
இத்தாலியின் மிலான் நகருக்கு அருகில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரம் ரோ. இந்நகரின் இரு விவசாயிகள் வேலைக்குச் செல்லும் வழியில் அந்நகரின் சிறிய பழங்கால ஆலயத்திலுள்ள வியாகுல அன்னைப் படத்துக்கு முன்பாக அடிக்கடி செபிப்பது வழக்கம். அது 1583ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் நாள். அன்று அவ்விருவரும் அந்த வியாகுல அன்னைப் படத்துக்கு முன்பாகச் செபித்துக்கொண்டிருந்தபோது அவ்வன்னையின் கண்கள் அழுதழுது வீங்கியவை போன்று இருந்ததைப் பார்த்து திகைத்து நின்றனர். அவர்கள் பார்ப்பது தவறு என நினைத்து அவ்விருவரும் அப்படத்துக்கு அருகில் சென்று உற்றுப் பார்த்தனர். அச்சமயத்தில் அவ்வன்னையின் கண்களிலிருந்து இரத்தக் கண்ணீர் வடிந்தது. தேவ அன்னை மிகவும் துயரத்தில் இருக்கிறார் என இவ்விரு விவசாயிகளும் எண்ணி வேதனையடைந்தனர். இதை மற்றவர்களுக்கும் சொல்லச் சென்றனர். அந்நகர் மக்கள் அனைவரும் வந்து அப்புதுமையைப் பார்த்தனர். அங்கு வந்திருந்தவர்களில் ஒருவர், அப்படத்திலிருந்து வர்ணம் கரைந்து விழுவதுதான் இந்த இரத்த நிறக் கண்ணீர் என்று கருதி தனது கைக்குட்டையால் அந்த இரத்தக் கண்ணீரைப் பிடித்தார். பின்னர் அந்தத் துணியில் படிந்த கறை, வர்ணம் அல்ல, மாறாக அது இரத்தம் என்பதை ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தினர்.
ரோ நகர் ஆலயத்தில் வியாகுல அன்னைப் படத்திலிருந்து வடிந்த இரத்தக் கண்ணீர் எவ்வளவு நேரம் வடிந்தது என யாருக்கும் தெரியவில்லை. ஆனால் விரைவாக அந்தச் சிறிய ஆலயம் பங்கு மக்களால் நிறைந்துவிட்டது. இவர்கள் அனைவருமே இப்புதுமைக்குச் சான்று. உடனடியாக இச்செய்தி மிலானுக்கும், அதைச் சுற்றியிருந்த கிராமங்களுக்கும் பரவியது. அப்போது மிலான் பேராயராக இருந்த புனித சார்லஸ் பொரோமேயோவுக்கும் தகவல் சொல்லப்பட்டது. புனித சார்லசும் இப்புதுமை குறித்து பரிசீலனை செய்வதற்கு கார்லோ பஸ்கஃபே என்பவரை நியமித்தார். 40 பேர் இப்புதுமைக்குச் சாட்சி கூறினர். இவ்விசாரணையின் முடிவு உரோமையில் திருப்பீடத்துக்கு அனுப்பப்பட்டது. இப்புதுமை உண்மையானது என உறுதி செய்யப்பட்டது. 1583ஆம் ஆண்டு ஜூன் 4ஆம் தேதி பேராயர் சார்லஸ் ரோவுக்கு மேய்ப்புப்பணி தொடர்பாகச் சென்றார். இரத்தக் கண்ணீர் வடித்த புனித வியாகுல அன்னைப் படத்துக்கு முன்பாக நீண்டநேரம் செபித்தார். பின்னர் அங்குக் கூடியிருந்த மக்களிடம், 1583ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் நாள் நடந்த புதுமை உண்மையானது. இந்த இடத்தில் பெரிய ஆலயத்தை எழுப்புவோம். அது மிலான் உயர்மறைமாவட்டத்துக்கு மையத் திருத்தலமாக அமைந்திருக்கும் என அறிவித்தார்.
1583ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் நாள் அவ்விடத்துக்கு மீண்டும் வந்த மிலான் பேராயர் சார்லஸ், இப்புனித இடத்தைக் கண்காணிக்கும் பொறுப்பை ஒப்லாத்தி என்ற அருள்பணியாளர் சபையிடம் ஒப்படைத்தார். 1576ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் நாளன்று இப்புனிதப் பேராயரால் தொடங்கப்பட்ட இச்சபை, புதிய ஆலயம் கட்டுவதற்கான நன்கொடைகளைப் பெறத் தொடங்கியது. 1584ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் நாளான செவ்வாய்க்கிழமையன்று புதிய ஆலயத்துக்கான அடிக்கல்லை நாட்டினார் பேராயர் சார்லஸ். ஏறக்குறைய நாற்பது ஆண்டுகள் கடந்து இப்புதிய ஆலயத்துக்கான மணிக்கூண்டும் கோபுரமும் எழுப்பப்பட்டன. இத்தனை ஆண்டுகள் கடந்தும் இன்றும் இத்திருத்தலம் மிகுந்த அழகுடன் பல கலைவண்ண வேலைப்பாடுகளுடன் திகழ்கிறது. இத்திருத்தலத்தில் பல சிறிய பீடங்களும் உள்ளன. வியாகுல அன்னை வடித்த இரத்தக் கண்ணீரைப் பிடித்த கைக்குட்டை இன்றும் திருப்பூட்டறையில் திருநற்கருணை பேழை போன்றதோர் அமைப்பில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது.
ரோ வியாகுல அன்னை பேராலயத்தில் இன்றும் ஏப்ரல் 24ஆம் தேதி அப்புதுமை நடந்த நிகழ்வு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஆயினும் அகிலத் திருஅவையில் செப்டம்பர் 15ஆம் நாள் வியாகுல அன்னை விழா சிறப்பாகக் கொண்டாடப்படுவதால் ரோவிலும் இத்திருத்தல விழா செப்டம்பர் 15ஆம் நாளன்று சிறப்பிக்கப்படுகிறது. இறந்த மகன் இயேசுவை தனது மடியில் கொண்டிருப்பது போன்று அன்னைமரியா இத்திருத்தலத்தில் வைக்கப்பட்டுள்ளார். 1909ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதியன்று பெர்த்தெ பெத்தித் என்ற பிரான்சிஸ்குவின் அருள்பணியாளருக்கு இயேசு காட்சி கொடுத்து, மரியின் இதயத்தைக் குத்தித் துளைத்த இதயத்தை மக்கள் அன்பு செய்யுமாறு சொல்லச் சொன்னார். வியாகுல அன்னை பக்தி கத்தோலிக்கருக்கு மிகவும் விருப்பமானதாகும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்