MAP

காக்கும் கனிவுமிகு கடவுள் காக்கும் கனிவுமிகு கடவுள் 

விவிலியத் தேடல் : திருப்பாடல் 69-6, காக்கும் கனிவுமிகு கடவுள்!

தாவீது அரசரின் இத்தகைய உயர்வான மனநிலையை நாம் எப்போதும் பற்றிக்கொள்ள வேண்டும்.
விவிலியத் தேடல் : திருப்பாடல் 69-6, காக்கும் கனிவுமிகு கடவுள்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில், 'பாவத்தால் விளைவது இழிநிலை!' என்ற தலைப்பில் 69-வது திருப்பாடலில், 19 முதல் 28 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும் 29 முதல் 36 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானிப்போம். இப்போது இறை ஒளியில் அவ்வார்த்தைகளை வாசிப்போம். “எளியேன் சிறுமைப்பட்டவன்; காயமுற்றவன்; கடவுளே! நீர் அருளும் மீட்பு எனக்குப் பாதுகாப்பாய் இருப்பதாக! கடவுளின் பெயரை நான் பாடிப் புகழ்வேன்; அவருக்கு நன்றி செலுத்தி, அவரை மாட்சிமைப்படுத்துவேன்; காளையை விட இதுவே ஆண்டவருக்கு உகந்தது; கொம்பும் விரிகுளம்பும் உள்ள எருதைவிட இதுவே அவருக்கு உகந்தது. எளியோர் இதைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள்; கடவுளை நாடித் தேடுகிறவர்களே, உங்கள் உள்ளம் ஊக்கமடைவதாக. ஆண்டவர் ஏழைகளின் விண்ணப்பத்திற்குச் செவிசாய்க்கின்றார்; சிறைப்பட்ட தம் மக்களை அவர் புறக்கணிப்பதில்லை. வானமும் வையமும் கடல்களும் அவற்றில் வாழும் யாவும் அவரைப் புகழட்டும். கடவுள் சீயோனுக்கு மீட்பளிப்பார்; யூதாவின் நகரங்களைக் கட்டி எழுப்புவார்; அப்பொழுது அவர்களுடைய மக்கள் அங்கே குடியிருப்பார்கள்; நாட்டைத் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்வார்கள். ஆண்டவருடைய அடியாரின் மரபினர் அதைத் தம் உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்; அவரது பெயர்மீது அன்பு கூர்வோர் அதில் குடியிருப்பர்” (வச 29-36)

முதலில் ஒரு சிறிய கதைக்கு நமது செவிகளைத் திறப்போம். அரசர் ஒருவர் தன் பகைவர்களுக்குப் பயந்து கோட்டை ஒன்றைக் கட்டினார். அதில் யாரும் புகுந்துவிடக்கூடாது என நினைத்து, ஒரேயொரு வாசலை மட்டும் அவர் அதில் வைத்தார். வேறு எந்த இடத்திலும் ஜன்னலையோ, வாசலையோ வைக்கவில்லை. தன் எதிரிகள் எப்படியாவது புகுந்து விடுவார்களோ என்ற அச்சத்தில் அவ்வாறு அதைக் கட்டியிருந்தார் அரசர். அந்த ஒரு வாசலிலும் பல வீரர்களைக் காவலுக்கு வைத்திருந்தார் அவர். ஒருநாள் தன்னைப் பார்க்கவந்த தன் உயிர் நண்பரிடம், “நான் இப்போதுதான் முழுமையான பாதுகாப்பை உணர்கிறேன்” என்று சொன்னார் அரசர். உண்மையை மட்டுமே சொல்லி பழக்கப்பட்ட அந்த நண்பர், அரசரின்  தவறைச் சுட்டிக்காட்ட விரும்பினார். அதனால் அரசரிடம், “நண்பா, உன் பகைவர்கள், இந்த கோட்டைக்குள் இருக்கின்ற ஒரே வாசல் வழியாகக்கூட வர வாய்ப்பிருக்கிறது. அதனால் அந்த வாசலையும் நீ அடைத்துவிடு, அப்போது நீ இன்னும் அதிகப் பாதுகாப்பாக இருக்கலாம்” என்று சொன்னார். அதைக் கேட்டு அதிர்ச்சியுற்ற அரசர், “இந்த ஒரு வாசலையும் அடைத்துவிட்டால், என் கோட்டை கல்லறைபோல் ஆகி விடுமே” என்று கூறினார். அப்போது அந்த நண்பர், “இப்போது மட்டும் உனது கோட்டை எப்படி இருக்கிறது” என்று கேட்டார்.

இந்தக் கதையில் வரும் அரசரைப் போல நமது தாவீது அரசர் இல்லை. கோட்டையை நம்புவதைக் காட்டிலும், அரசர்க்கெல்லாம் அரசராக விளங்கும் கடவுளை மட்டுமே நம்பினார். அவரை மட்டுமே தனது அரணாகவும், கோட்டையாகவும், தஞ்சமாகவும் கொண்டிருந்தார். அதனால்தான் அனைத்துக் காரியங்களிலும், அவர் கடவுளை மட்டுமே முழுமையாக சார்ந்திருந்தார். இப்போது, தாவீதும் கூறும், “எளியேன் சிறுமைப்பட்டவன்; காயமுற்றவன்; கடவுளே! நீர் அருளும் மீட்பு எனக்குப் பாதுகாப்பாய் இருப்பதாக! கடவுளின் பெயரை நான் பாடிப் புகழ்வேன்; அவருக்கு நன்றி செலுத்தி, அவரை மாட்சிமைப்படுத்துவேன்; காளையை விட இதுவே ஆண்டவருக்கு உகந்தது; கொம்பும் விரிகுளம்பும் உள்ள எருதைவிட இதுவே அவருக்கு உகந்தது" என்ற வார்த்தைகள் குறித்துத் தியானிப்போம். இவ்விடம் முதலில் தன்னை "எளியவன், சிறுமைப்பட்டவன், காயமுற்றவன் என்ற வார்த்தைகளால் எடுத்துக்காட்டுகிறார். தாவீது அரசர் 'எளியவர்' என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. காரணம், இஸ்ரயேல் மக்களின் அரசர் ஆவதற்கும் முன்பும் ஆன பின்பும் தன்னை ஓர் எளியவன் ஆக்கிக்கொண்டார். இது அவரது வாழ்வின் இறுதிவரைத் தொடர்ந்தது என்பதும் திண்ணம். இதற்கு ஒரு குறிப்பிட்ட நிகழ்வைச் சொல்லலாம். கடவுளின் பேழை ஓபேது — ஏதோமின் இல்லத்திலிருந்து தாவீதின் நகருக்கு அக்களிப்போடு கொண்டு வரப்படுகிறது. அப்போது ஆண்டவரின் பேழையை ஏந்தியவர்கள் ஆறு அடிகள் எடுத்து வைத்ததும் ஒரு காளையையும் ஒரு ஆட்டுக் கிடாயையும் பலியிட்டார். நார்ப்பட்டால் நெய்யப்பட்ட ஏபோத்தை அணிந்துகொண்டு, தாவீது தம் முழு வலிமையோடு ஆண்டவர் முன்பாக நடனமாடிக்கொண்டிருந்தார். ஆனால் இது அவரது மனைவிக்குப் பிடிக்கவில்லை. அப்போது சவுலின் மகள் மீக்கால் தாவீதை எதிர் கொண்டு, “இழிந்தவன் ஒருவன் வெட்கமின்றித் தன் ஆடைகளைக் கழற்றுவதுபோல, இஸ்ரயேலின் அரசர் தம் பணியாளரின் பணிப்பெண்களுக்கு முன்பாகத் தம் ஆடைகளைக் கழற்றி இன்று பெருமை கொண்டாரே!” என்று ஏளனம் செய்தாள். “ஆண்டவரின் மக்கள்மீதும் இஸ்ரயேல்மீதும் தலைவனாக இருக்குமாறு உன் தந்தையையும் அவர் தம் வீட்டாரையும் ஒதுக்கிவிட்டு, என்னைத் தேர்ந்து கொண்ட ஆண்டவர் திருமுன் நான் ஆடினேன்; இன்னும் ஆடுவேன். நான் என்னை இன்னும் கடையவனாக்கிக் கொள்வேன்; என் கண்முன் என்னைத் தாழ்த்திக் கொள்வேன்; நீ குறிப்பிட்ட பணிப்பெண்களுக்கு முன்பாக நான் பெருமை அடைவேன்” என்று தாவீது மீக்காலிடம் கூறினார். இதன் காரணமாக, சவுலின் மகள் மீக்காலுக்குச் சாகும் வரை குழந்தைப்பேறு கிட்டவில்லை. (காண்க 2 சாமு 6:1-23). இவ்விடம், "நான் என்னை இன்னும் கடையவனாக்கிக் கொள்வேன்; என் கண்முன் என்னைத் தாழ்த்திக் கொள்வேன்" என்று கூறும் தாவீத்தின் வார்த்தைகள் நம் உள்ளங்களை ஈர்க்கின்றன. இஸ்ரயேலின் மாபெரும் அரசர் ஆண்டவர் முன்பாகத் தன்னை எந்த அளவிற்குத் தாழ்த்திக்கொள்கின்றார் பாருங்கள்! இந்தவொரு நிலை இவ்வுலகின் அரசியல்வாதிகளுக்கு இருக்கின்றதா அல்லது நமது இருபால் துறவியரிடம்தான் இருக்கின்றதா என்பதை இத்தருணத்தில் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்

அடுத்து, "காளையை விட இதுவே ஆண்டவருக்கு உகந்தது; கொம்பும் விரிகுளம்பும் உள்ள எருதைவிட இதுவே அவருக்கு உகந்தது" என்கின்றார் தாவீது. இதன் பொருள் என்ன? அதாவது, கடவுள் அருளும் மீட்பைக் கண்டுணர்ந்து கொள்வதும், அவரைப் பாடிப்புகழ்வதும், அவருக்கு நன்றி கூறுவதும், காளைகளை பலிபீடங்களில் கடவுளுக்கு எரிபொருள்களாகப் படைப்பதைக் காட்டிலும் மென்மையானது என்று குறிப்பிட்டுக் காட்டவே, இவ்வாறு உரைக்கின்றார் தாவீது அரசர். மேலும் "ஆண்டவர் ஏழைகளின் விண்ணப்பத்திற்குச் செவிசாய்க்கின்றார்; சிறைப்பட்ட தம் மக்களை அவர் புறக்கணிப்பதில்லை" என்ற வார்த்தைகள் வழியாக அவரை ஏழை எளிய மக்களின் கடவுளாகவும், சிறைப்பட்ட அம்மக்களுக்கு விடுதலை அளிப்பவராகவும் எடுத்துக்காட்டுகின்றார் தாவீது அரசர். இறுதியாக கடவுள் தான் எப்போதும் பிரசன்னமாயிருக்கும் எருசலேம் திருக்கோவிலுக்கு மீப்பளிப்பவர் என்றும், அத்தகைய புனிதத்தின் புனிதமான திருநகரை அவர்தம் மக்கள் எப்போதும் உரிமையாக்கிக்கொள்வர் என்றும் கூறி இத்திருப்பாடலை நிறைவு செய்கின்றார் தாவீது அரசர்.

ஒரு பணக்காரன் தன் வீட்டுக்கு குரு ஒருவரை அழைத்து வந்தான். பெரிய வீடு. இருவரும் மொட்டை மாடியில் நின்றிருந்தார்கள். அப்போது அப்பணக்காரன். ‘‘குருவே, வடக்குப் பக்கம் பாருங்கள். அதோ அங்கே தூரத்தில் ஒரு பனைமரம் தெரிகிறதே, அதுவரை என்னோட நிலம்தான். நான்தான் கவனிச்சுக்கறேன். இதோ தெற்குப் பக்கம் தெரிகிறதே ஒரு மாமரம், அதுவரையும் என் இடம்தான். மேற்குப் பக்கம் பாருங்கள், தூரத்தில் ஒரு டிரான்ஸ்பார்மர் தெரியுதே, அதுவரைக்கும் என் இடம்தான். அப்புறம் வீட்டுக்கு எதிரில் கிழக்குப் பக்கம் முழுதும் என்னுடையதுதான். இந்தச் சொத்துக்கள் எல்லாம் நான் கடினப்பட்டு சம்பாதித்தவை. ஆனால் இத்தனை வசதிகள் இருந்தும் கூட எனக்கு நிம்மதி இல்ல குருவே’’ என்றான். அப்போது அவனை அமைதியாகப் பார்த்த குரு, ‘‘எல்லா இடங்களிலேயும் சொத்து சேகரித்து வைத்திருக்கிறாய். இங்கே சேர்த்து வைத்திருக்கிறாயா?’’ என்று அவனது இதயத்தைச் சுட்டிக் காட்டினார். பணக்காரனுக்குப் புரியவில்லை. அப்போது தொடர்ந்த குரு, “இவ்வுலகின் செல்வங்கள் எல்லாம் ஒருநாள் அழிந்துபோய்விடும். ஆனால் என்றுமே அழியாத ஒரே செல்வம் கடவுள் மட்டுமே. அவரை அடைவதற்கு  நீ இதுவரை என்ன முயற்சி செய்திருக்கிறாய்” என்று கேட்டார். அவன் அப்படியே அமைதியானான்.

தனக்கு எல்லாம் நிறைவாக இருந்தும் கூட, தாவீது அரசர் கடவுளை மட்டுமே தனது ஒரே செல்வமாகக் கொண்டிருந்தார். அவர் கடவுளைத் தவிர தனது அரசப் பதவியை என்றுமே உயர்வாகக் கருதியதில்லை. மேலும் கடவுளைத் தனது ஒரே செல்வமாகக் கொண்டிருக்க, தனது அரசப் பதவியைக் கூட இழப்பதற்குத் தயாராக இருந்தார். மேலும் “எளியேன் சிறுமைப்பட்டவன்; காயமுற்றவன்" என்று தாவீது கூறும் வார்த்தைகள், அவர் கடவுளை தனது ஒப்புயர்வற்ற ஒரே செல்வமாகக் கொண்டிருந்ததற்கு அவரது எதிரிகளால் சிறுமைப்படுத்தப்பட்டிருக்கலாம் மற்றும் காயப்படுத்தப்பட்டிருக்கலாம், அல்லது எள்ளிநகையாடப்பட்டிருக்கலாம் என்பதை எடுத்துக்காட்டுவதாகக் கூட நாம் புரிந்துகொள்ளலாம். ஆகவே, தாவீது அரசரின் இத்தகைய உயர்வான மனநிலையை நாம் எப்போதும் பற்றிக்கொள்ள வேண்டும். இவ்வருளுக்காக இந்நாளில் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 ஜூன் 2025, 14:04