MAP

ஆண்டவரின் பேரன்பு ஆண்டவரின் பேரன்பு  

விவிலியத் தேடல்: திருப்பாடல் 69-4, ஆண்டவரின் பேரன்பு நன்மைமிக்கது!

தாவீதைப் போன்று நாமும் நமது பாவ வழிகளைக் கண்டறிந்து அவற்றிலிருந்து விடுதலைப்பெற இறையருள் வேண்டி இந்நாளில் மன்றாடுவோம்.
விவிலியத் தேடல்: திருப்பாடல் 69-4, ஆண்டவரின் பேரன்பு நன்மைமிக்கது!

செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில், 'இறையில்லத்தின்மீது பற்றார்வம் கொள்வோம்!' என்ற தலைப்பில் 69-வது திருப்பாடலில், 9 முதல் 12 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்து மகிழ்ந்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும் 13 முதல் 18 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானிப்போம். இப்போது அவ்வார்த்தைகளை அமைதிநிறைந்த மனதுடன் மனதுடன் வாசிப்போம். "ஆண்டவரே! நான் தக்க காலத்தில் உம்மை நோக்கி விண்ணப்பம் செய்கின்றேன்; கடவுளே! உமது பேரன்பின் பெருக்கினால் எனக்குப் பதில்மொழி தாரும்; துணை செய்வதில் நீர் மாறாதவர். சேற்றில் நான் அமிழ்வதிலிருந்து என்னைக் காத்தருளும்; என்னை வெறுப்போரிடமிருந்தும் ஆழ்கடலிலிருந்தும் என்னை விடுவித்தருளும். பெருவெள்ளம் என்னை அடித்துக்கொண்டு போகாதிருப்பதாக! ஆழ்கடல் என்னை விழுங்காதிருப்பதாக! படுகுழி தன்வாய் திறந்து என்னை மூடிக் கொள்ளாதிருப்பதாக! ஆண்டவரே! எனக்குப் பதில்மொழி தாரும்; உம் பேரன்பு நன்மை மிக்கது; உமது பேரிரக்கத்தை முன்னிட்டு என்னை நோக்கித் திரும்பும். உமது முகத்தை அடியேனுக்கு மறைக்காதேயும்; நான் நெருக்கடியான நிலையிலிருக்கிறேன்; என் மன்றாட்டுக்கு விரைவில் பதில்மொழி தாரும். என்னை நெருங்கி, என்னை விடுவித்தருளும்; என் எதிரிகளிடமிருந்து என்னை மீட்டருளும்” (வச. 13-18).

நமது இன்றைய நாள் விவிலியத் தேடலை ஓர் அர்த்தமுள்ள கதையுடன் தொடங்குவோம். இந்தக் கதை ‘ஒடோமி’ பழங்குடி மக்களால் சொல்லப்படுகிறது. கதையின் வயது ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். ஆனாலும் இக்கதை உணர்த்தும் உண்மை காலத்தையும் தாண்டி ஒளிர்ந்துகொண்டேதான் இருக்கிறது!. இப்போது கதைக்கு செவிமடுப்போம். ஒருநாள் விவசாயி ஒருவருக்கு கை காலின்றி ஒரு மகன் பிறந்தான். அவன் பெயர் ‘லெப்போ’. அவன் புழுவைப் போல ஊர்ந்து கொண்டிருப்பது அவனதுப் பெற்றோருக்கு மிகவும் வருத்தம் அளித்தது . ‘லெப்போ’ தனது தந்தையிடம், தான் கடவுளைச் சந்தித்து மன்றாடப் போவதாகச் சொல்லிப் புறப்பட்டான். அவன் உருண்டபடியே போய்க் கொண்டிருந்தபோது, ஒரு விவசாயி ‘‘எங்கே போய்க் கொண்டிருக்கிறாய்?’ எனக் கேட்டார். அதற்கு லெப்போ, "கடவுளைக் காணப் போய்க்கொண்டிருக்கிறேன்!’’ என்று சொன்னபோது, ‘‘கடவுளை பார்த்தால் எனக்காக ஒரு கேள்வி கேள். நான் கடினப்பட்டு உழைத்தாலும் ஏன் முன்னேற முடியவில்லை என்பதை அறிந்துகொண்டு வா’’ என்றார். இன்னொரு ஊரில் ஒரு நெசவாளி, ‘‘நானும் ஐந்து சகோதரர்களும் ஒன்றாக நெசவு நெய்கிறோம். அவர்கள் ஐவரும் நல்ல உடல்நலமுடன் இருக்க, நான் மட்டும் நோயாளியாக இருக்க என்ன காரணம் எனப் பதில் கேட்டு வா…” என்றார். லெப்போ இன்னொரு ஊரைக் கடந்து சென்றபோது அவனிடம் ஒரு செல்வந்தப் பெண் ‘‘நீ கடவுளை பார்த்தால் எனக்கு எல்லா செல்வங்களும் இருந்தும் குழந்தை செல்வம் இல்லாமல் போனது ஏன், எனக் கேட்டு வா’’ என்றாள். மூன்று கேள்விகளையும் மனதில் நிறுத்திக்கொண்டு, கடவுளைத் தேடி அலைந்தான் ‘லெப்போ’. ஆண்டுகள் கடந்தன. ஆனால் அவன் கடவுளைக் கண்டுபிடிக்க முடியாமல் சோர்ந்து போனான். முடிவில் ஒருநாள் சாலையில் கண் தெரியாத கிழவர் ஒருவர் மயங்கிக் கிடப்பதைக் கண்டு, தனது வாயிலேயே நீரை உறிஞ்சிக் கொண்டுவந்து, அவர்மீது மீது தெளித்து எழுப்பினான் லெப்போ. மயக்கம் தெளிந்த அந்தக் கிழவர், ‘‘நீ யார்?’’ எனக் கேட்டார்.‘‘என் பெயர் லெப்போ. எனக்குக் கை காலில்லை. அதை கேட்டு வாங்க கடவுளைத் தேடிக் கொண்டிருக்கிறேன்!’’ என்றான். அதைக் கேட்ட கிழவர், ‘‘எனக்குக் கடவுளின் வீடு தெரியும். அதைச் சொல்ல வேண்டும் என்றால் உன் கண்களை எனக்கு ஈடாகத் தர வேண்டும்!’’ என்று கேட்டார். சற்றும் தாமதிக்காமல் லெப்போ உடனே தன் கண்களைத் தோண்டி எடுத்து அந்தக் கிழவரிடம் நீட்டினான். மறுநிமிடம் கிழவரின் உருவம் மறைந்து, கடவுள் அவன் முன்னால் தோன்றினார். லெப்போவுக்கு உடனே கைகால்கள் உருவாகின. மிகவும் மகிழ்ச்சியடைந்த அவன் தன்னிடம் விவசாயியும், நெசவாளியும், செல்வந்தப் பெண்ணும், கேட்ட கேள்விகளைக் கடவுளிடம்  கூறி அதற்குப் பதில் கேட்டான். அதற்குக் கடவுள்,‘‘விவசாயி தனது நிலத்தில் விளைந்த தானியங்களைக் கூலியாட்களுக்குப் பகிர்ந்து அளிப்பதில்லை. அதனால் அவன் கடினப்படுகிறான். நெசவாளியோ, தனது சகோதரர்களின் உழைப்பைத் திருடி பொருள் சேர்க்கிறான். ஆகவே, அவன் நோயாளியாக இருக்கிறான்!’ என்றார். ‘‘சரி, அந்தப் பெண்ணுக்கு ஏன் குழந்தை பாக்கியம் இல்லை?’’ என்று லெப்போ கேட்டதற்கு, ‘‘அவளிடம் அன்பே இல்லை. பணப் பேயாக இருக்கிறாள். எப்போது தனது செல்வத்தை இல்லாதவர்களுக்குப் பகிர்ந்து தருகிறாளோ, மற்ற குழந்தைகளைத் தன் குழந்தையைப் போல நினைக்கிறாளோ… அப்போது அவளுக்குக் குழந்தைப் பிறக்கும்!’’  என்றார். கடவுளின் பதில்களைக் கேட்டு, ‘நமது செயல்களே நமது துயரங்களுக்கான மூலக் காரணம் என்பதைப் புரிந்துகொண்ட லெப்போ,  ‘‘மனிதனுக்கு கை கால்களை எதற்காகப் படைத்தீர்கள்?’’ என்று கடவுளிடம் கடைசியாக ஒரு கேள்வியைக்  கேட்டான். அதற்குக் கடவுள், ’’ஓடோடிச் சென்று உதவி செய்ய கால்களையும், அள்ளித் தரவும் அரவணைக்கவும் கைகளையும் படைத்தேன்!’’ என்றார். அப்போது, ’நமது கைகால்கள் நமக்குரியது மட்டுமல்ல, அடுத்தவர் துயர் துடைப்பதற்குமானது’ என்பதை புரிந்துகொண்ட லெப்போ தன் இல்லம் நோக்கிப் புறப்பாட்டான்.

நாம் கேட்ட இந்தக் கதை, 'நான் மட்டும் ஏன் இத்தனை துயரங்களை அனுபவிக்கிறேன், என்னை மட்டும் ஏன் கடவுள் இப்படி சோதிக்கிறார், நான் படும் துயரங்களுக்கு முடிவே இல்லையா' என்று கூறும் மனிதர்களுக்கு மிகவும் பொருத்தமுடையதாக இருக்கின்றது. தாவீதின் வாழ்வும் கூட கடவுளின் பெருந்துணையில் மிகவும் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால் தனது அருள்கொடைகளையும், பேருதவிகளையும் வழங்கிக்கொண்டிருந்த கடவுளுக்கு எதிராக அவர் பாவம் செய்தபோது அவரது வாழ்வை இருள் கவ்விக்கொண்டது. ஆனாலும் தாவீது அந்த இருளிலேயே முற்றிலுமாக மூழ்கிப்போய்விடவில்லை, மாறாக, அதிலிருந்துத் தப்பிப் பிழைக்கிறார். தன்னிலை அறிந்து ஒறுத்தல்கள் வழியாக அவர் கடவுளிடம் திரும்பி வந்ததுதான் இதற்கு அடைப்படைக் காரணம். இன்றைய உலகில் பலர் தங்கள் பாவங்களிலும், பலவீனங்களிலும் வீழ்ந்தே கிடைப்பதற்கு முக்கியமான காரணம் தன்னிலை அறியாதுதான். இதன் பின்னணியில் இப்போது நமது சிந்தனைகளை இன்னும் ஆழப்படுத்துவோம்.

"ஆண்டவரே! நான் தக்க காலத்தில் உம்மை நோக்கி விண்ணப்பம் செய்கின்றேன்; கடவுளே! உமது பேரன்பின் பெருக்கினால் எனக்குப் பதில்மொழி தாரும்; துணை செய்வதில் நீர் மாறாதவர்" என்று தாவீது கூறும் வார்த்தைகள் குறித்துத் தியானிப்போம். இங்கே கடவுளின் பெருக்கெடுத்து ஓடும் பேரன்பைக் குறித்துப் பேசுகின்றார் தாவீது.  கடவுள் அன்பானவர், பண்பானவர், இரக்கம் நிறைந்தவர், பரிவு கொண்டவர், மன்னித்து ஏற்கக் கூடியவர், மனிதரின் பலவீனங்களை மறக்கக் கூடியவர் ஆகிய கடவுளுக்கு மட்டுமே உரிய நற்பண்புகளை, தாவீது கூறும் இந்த ஒற்றை வார்த்தை தன்னகத்தே கொண்டுள்ளது என்பதை அறிந்துகொள்வோம். மேலும் கடவுள் துணை செய்வதில் மாறாதவர் என்பது, எப்போதும் தொடரும் அவரது உடனிருப்பை உறுதிப்படுத்துகிறது. அடுத்து,  "சேற்றில் நான் அமிழ்வதிலிருந்து என்னைக் காத்தருளும்; என்னை வெறுப்போரிடமிருந்தும் ஆழ்கடலிலிருந்தும் என்னை விடுவித்தருளும்" என்கிறார் தாவீது. இங்கே கடவுளுக்கு எதிராக அவர் இழைத்த பாவம் சேற்றில் அமிழ்ந்துபோகுமளவிற்கு அவரைத் துயரப்படுத்துகிறது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. பொதுவாக, ஒருவர் சேற்றிலோ அல்லது புதைமணலிலோ சிக்கிக்கொண்டால் அவ்வளவுதான். அதிலிருந்து மீள்வது மிகவும் கடினம்தான். அதேவேளையில், ஒருசிலர் அவரை மீட்க வந்தாலும் கூட, அவ்வளவு எளிதில் அவரை மீட்டுவிட முடியாது. மிகவும் சிரமப்பட்டுதான் அவரை மீட்க வேண்டியிருக்கும். ஆக, பாவத்தில் சிக்கிக்கொள்வது என்பது சேற்றிலோ அல்லது புதைமணலிலோ அகப்பட்டுக்கொள்வது போன்றதுதான்  என்பதை நம் மனங்களில் நிறுத்துவோம்.

அடுத்து, "பெருவெள்ளம் என்னை அடித்துக்கொண்டு போகாதிருப்பதாக! ஆழ்கடல் என்னை விழுங்காதிருப்பதாக! படுகுழி தன்வாய் திறந்து என்னை மூடிக் கொள்ளாதிருப்பதாக!" என்கின்றார் தாவீது.  இந்த இறைவார்த்தைகளிலும் அவர் பாவம் குறித்துதான் பேசுகின்றார். இவ்விடம் பெருவெள்ளம், ஆழ்கடல், படுகுழி ஆகிய மூன்றையும் பாவத்துடன் ஒப்பிட்டுக்காட்டுகின்றார் தாவீது அரசர். முதலில், "பெருவெள்ளம் என்னை அடித்துக்கொண்டு போகாதிருப்பதாக!" என்கின்றார். ஒரு மனிதர் பெருவெள்ளத்தில் மாட்டிக்கொண்டால் தப்பிக்க இயலாது. பெருவெள்ளம் இவ்வுலகில் எவ்வளவுபெரிய அழிவுகளையும், உயிர்ச்சேதங்களையும், பாதிப்புகளையும் ஏற்படுத்தியது மற்றும் இன்றும் ஏற்படுத்தி வருகின்றது என்பதை நாம் அறிவோம். இங்கே பாவம் ஏற்படுத்தும் விளைவும் பெருவெள்ளம் போன்றதுதான் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக தாவீது இவ்வாறு கூறுகின்றார் என்பதைப் புரிந்துகொள்வோம். அடுத்து "ஆழ்கடல் என்னை விழுங்காதிருப்பதாக!" என்கிறார் தாவீது. பாவம் ஆழ்கடலைப் போன்று என்னை அழிக்காதிருப்பதாக என்ற அர்த்தத்தில்தான் இவ்வாறு உரைக்கின்றார். ஆழ்கடலில் மாட்டிக்கொண்டால் தப்பவே முடியாது என்பதை நமது மீனவ நண்பர்களைக் கேட்டாலே நமக்குப் புரிந்துவிடும். கடந்த 2004-ஆம் ஆண்டு ஏற்பட்ட பூமி அதிர்வு காரணமாக ஆழ்கடலில் இருந்து புறப்பட்ட ஆழிப்பேரலைகள் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றுகுவித்தன என்பதை நமது நினைவுக்குள் கொண்டு வருவோம். ஆக, பாவம் இதைவிட மிகவும் கொடுமையானது என்பது தாவீதின் வார்த்தையிலிருந்து வெளிப்படுகிறது. தொடர்ந்து, "படுகுழி தன்வாய் திறந்து என்னை மூடிக் கொள்ளாதிருப்பதாக!" என்று கூறுகின்றார். இங்கே படுகுழி என்பதும் அப்படிதான். இது திடீரென்றோ அல்லது நில அதிர்வுகளாலோ ஏற்படக்கூடிய ஒன்று. அண்மையில் மியான்மாரில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட சில படுகுழிகள் பார்ப்பதற்கே பெரும் அச்சத்தை ஏற்படுத்தக்கூடியவையாக இருந்தன. இதன் காரணமாகவே, தான் புரிந்த பாவத்தை பெரும் பேரிடர்களை உண்டாக்கும் இம்மாதிரியான இயற்கை நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு, தன்னை காக்குமாறு இறைவேண்டல் செய்கின்றார் தாவீது. ஆகவே நாமும் நமது பாவ வழிகளைக் கண்டறிந்து அவற்றிலிருந்து விடுதலைப்பெற இறையருள் வேண்டி இந்நாளில் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 ஜூன் 2025, 12:51