MAP

தாவீதின் இறைவேண்டல் தாவீதின் இறைவேண்டல்  

விவிலியத் தேடல் : திருப்பாடல் 69-3, இறையில்லம் மீது பற்றார்வம் கொள்வோம்!

தாவீது அரசரே இவ்வளவு பொறுமையுடன் கடவுளிடம் சரணடைந்திருக்கிறார் என்றால் நாமும் அவர்போல வாழ்ந்திடல் வேண்டும்.
விவிலியத் தேடல் : திருப்பாடல் 69-3, இறையில்லம் மீது பற்றார்வம் கொள்வோம்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘மதிகேடுகள் மன்னிக்கப்படட்டும்!’ என்ற தலைப்பில் 69-வது திருப்பாடலில், 5 முதல் 8 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும்  9 முதல் 12 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானிப்போம். இப்போது அவ்வார்த்தைகளை பக்திநிறை மனதுடன் வாசிப்போம். “உமது இல்லத்தின்மீது எனக்குண்டான ஆர்வம் என்னை எரித்துவிட்டது; உம்மைப் பழித்துப் பேசினவர்களின் பழிச்சொற்கள் என்மீது விழுந்தன. நோன்பிருந்து நான் நெக்குருகி அழுதேன்; அதுவே எனக்கு இழிவாய் மாறிற்று. சாக்குத் துணியை என் உடையாகக் கொண்டேன்; ஆயினும், அவர்களது பழிச்சொல்லுக்கு உள்ளானேன். நகர வாயிலில் அமர்வோர் என்னைப் பற்றிப் புறணி பேசுகின்றனர்; குடிகாரர் என்னைப் பற்றிப் பாட்டுக் கட்டுகின்றனர்” (வச 9-12).

முதலில், “உமது இல்லத்தின்மீது எனக்குண்டான ஆர்வம் என்னை எரித்துவிட்டது; உம்மைப் பழித்துப் பேசினவர்களின் பழிச்சொற்கள் என்மீது விழுந்தன" என்று உரைக்கும் தாவீதின் வார்த்தைகள் குறித்துத் தியானிப்போம். தாவீது தனது ஒப்புயர்வற்ற ஆண்டவராம் கடவுள்மீது கொண்டுள்ள நம்பிக்கையை அவரது நகரத்தின் வாயில்களில் அமர்ந்திருக்கும் இஸ்ரயேல் குழுமங்களின் தலைவர்களால்கூட கேலியும் கிண்டலும் செய்யப்படுகிறது. தான் பெற்றுள்ள இத்தகையதொரு அவமானம் தனக்கு நேர்ந்தது என்பதைக் காட்டிலும் தனது கடவுளுக்கு நேர்ந்ததாகக் கருதுவதாலேயே, "உமது இல்லத்தின்மீது எனக்குண்டான ஆர்வம் என்னை எரித்துவிட்டது" என்று ஆதங்கப்படுகிறார் தாவீது. மேலும் தனது அன்பர் கடவுளைப் பழிப்பது தன்னையே பழிப்பதற்குச் சமம் என்று தாவீது நினைப்பதாலேயே, "உம்மைப் பழித்துப் பேசினவர்களின் பழிச்சொற்கள் என்மீது விழுந்தன" என்கின்றார். இவ்விடத்தில் இயேசு ஆண்டவர் எருசலேம் கோவிலைத் தூய்மைப்படுத்திய நிகழ்வுடன் ஒப்பிட்டுப் பார்ப்போம். அங்கே என்ன நிகழ்கின்றது என்பதை இப்போது வாசிப்போம். யூதர்களுடைய பாஸ்கா விழா விரைவில் வரவிருந்ததால் இயேசு எருசலேமுக்குச் சென்றார்; கோவிலில் ஆடு, மாடு, புறா விற்போரையும் அங்கே உட்கார்ந்திருந்த நாணயம் மாற்றுவோரையும் கண்டார்; அப்போது கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி, அவர்கள் எல்லாரையும் கோவிலிலிருந்து துரத்தினார்; ஆடுமாடுகளையும் விரட்டினார்; நாணயம் மாற்றுவோரின் சில்லறைக் காசுகளைக் கொட்டிவிட்டு மேசைகளையும் கவிழ்த்துப்போட்டார். அவர் புறா விற்பவர்களிடம், “இவற்றை இங்கிருந்து எடுத்துச் செல்லுங்கள்; என் தந்தையின் இல்லத்தைச் சந்தை ஆக்காதீர்கள்” என்று கூறினார். அப்போது அவருடைய சீடர்கள். “உம் இல்லத்தின் மீதுள்ள ஆர்வம் என்னை எரித்துவிடும்” என்று மறைநூலில் எழுதியுள்ளதை நினைவு கூர்ந்தார்கள் (காண்க. யோவா 2:13-17). இங்கே இயேசு இவ்வளவு கோபம் கொள்வதற்கு முக்கிய காரணமே, அவர் அதன்மீது கொண்டிருந்த பற்றார்வம்தாம்.

சிறப்பாக, எருசலேம் கோவில் இறைத்தந்தை வாழும் இல்லமாகவே கருதப்பட்டது. குறிப்பாக, இந்தக் கோவில் எப்போது யார் காலத்தில் கட்டப்பட்டது என்பது குறித்தும், அதன் வரலாறு குறித்தும் இதற்கு முன்பு நாம் தியானித்த பல்வேறு விவிலியத் தேடல் நிகழ்வுகளில் கண்டிருக்கின்றோம். இவ்விடம் ஒன்றைமட்டும் நாம் மீண்டும் நம் நினைவில் கொள்வோம். சாலமோன் அரசர் எருசலேம் திருக்கோவிலைக் கட்டிமுடித்து அதனைக் கடவுளுக்கு அர்ப்பணம் செய்தார். அதன்பிறகு கடவுள் சாலமோனுக்கு இரண்டாம் முறை கனவில் தோன்றி, "இவ்விடத்தில் எழுப்பப்படும் வேண்டுதல்களை என் கருணைக் கண் கொண்டு நோக்கிக் கவனத்தோடு செவிகொடுப்பேன். எனது பெயர் என்றென்றும் போற்றப்படுமாறு இக்கோவிலை நான் தெரிந்தெடுத்துத் திருநிலைப்படுத்தியுள்ளேன்; என் கண்ணும் கருத்தும் இதன்மேல் எந்நாளும் இருக்கும்" (காண்க. 2 குறி 7:15-16) என்று உரைக்கின்றார். ஆக, இந்தத் திருக்கோவிலில் வாழும் கடவுளை அவமானப்படுத்துவது தன்னை அவமானப்படுத்துவது போன்றது என்பதாலேயே தாவீது வேதனையடைகிறார். அவரது வழித்தோன்றலில் வரும் நமது ஆண்டவராம் இயேசுவும் இதே கண்ணோட்டத்தில்தான் இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறார். இயேசுவின் காலத்தில் எருசலேம் திருக்கோவில் பணக்காரர்களின் சந்தைக்கூடாரமாக மாறிப்போய் இருந்தது. அங்கே அநீதிகளும் ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்திருந்தன. இதன் காரணத்தினாலேயே இயேசுவுக்குக் கோபம் கொப்பளித்துக்கொண்டு வருகிறது. மேலும் இது ஒரேநாளில் ஏற்பட்ட கோபமும் அன்று, மாறாக, பல நாள் பார்த்துவந்த இந்தச் சந்தைக் கலாச்சாரத்தால் அவரது உள்ளம் கனன்றுகொண்டே இருந்திருக்க வேண்டும். நேரமும் காலமும் கைகூடி வந்தபோது, ‘பொறுத்ததுபோதும் பொங்கியெழு’ என்ற கதையாக, இந்தக் காரியத்தை கனகச்சிதமாக செய்துமுடித்திருக்கிறார் இயேசு. தாவீதின் காலத்தில் யூதச் சமுதாயக் குழுக்களின் தலைவர்கள் அவருக்கு எதிரியாக மாறி அவரை எள்ளிநகையாடி கேலியும் கிண்டலும் செய்ததுபோலவே, இயேசுவின் காலத்திலும் நிகழ்கின்றது. ஆக தாவீதின் எதிரிகள் இயேசுவின் எதிரிகளாக மாறிப்போகிறார்கள் என்பதையும் நம் நினைவில் கொள்ள வேண்டும்.

அடுத்து, "நோன்பிருந்து நான் நெக்குருகி அழுதேன்; அதுவே எனக்கு இழிவாய் மாறிற்று. சாக்குத் துணியை என் உடையாகக் கொண்டேன்; ஆயினும், அவர்களது பழிச்சொல்லுக்கு உள்ளானேன்" என்று கூறுகின்றார் தாவீது. இங்கும் தாவீது உரியாவின் மனைவி பத்சேபாவுடன் செய்த பாவத்தின் சூழலின் பின்னணியில் தான் நோன்பிருந்து மனம்வெதும்பி கண்ணீர் சிந்தி அழுது நோன்பிருந்ததை தனது நினைவுக்குக் கொண்டுவருகிறார். அப்பகுதியை இப்போது வாசிப்போம். தாவீது நாத்தானிடம், “நான் ஆண்டவருக்கு எதிராக பாவம் செய்துவிட்டேன்” என்று சொன்னார். நாத்தான் தாவீதிடம், “ஆண்டவரும் உனது பாவத்தை நீக்கிவிட்டார். ஆயினும், ஆண்டவரின் எதிரிகள் அவரை இழிவாக எண்ணும்படி நீ இவ்வாறு செய்ததால் உனக்குப் பிறக்கும் மகன் உறுதியாகவே சாவான்” என்று சொன்னார். பின்பு, நாத்தான் தம் வீட்டுக்குச் சென்றார். உரியாவின் மனைவி தாவீதிற்குப் பெற்றெடுத்த குழந்தையை ஆண்டவர் தாக்க, அது நோயுற்றுச் சாகக் கிடந்தது.தாவீது அக் குழந்தைக்காக ஆண்டவரிடம் மன்றாடினார். உண்ணா நோன்பு மேற்கொண்டு உள்ளே சென்று இரவெல்லாம் தரையில் படுத்துக்கிடந்தார். அவர்தம் வீட்டின் பெரியோர்கள் தரையினின்று அவரை எழுப்பச் சென்றனர்; அவருக்கோ விருப்பமில்லை. அவர்களோடு அவர் உண்ணவுமில்லை. பின் ஏழாவது நாள் குழந்தை இறந்தது. குழந்தை இறந்ததைத் தாவீதின் பணியாளர் அவரிடம் சொல்ல அஞ்சினர். “குழந்தை உயிரோடு இருந்தும் நாம் அவரிடம் பேசிய போது அவர் நம் குரலுக்குச் செவி கொடுக்கவில்லையே! குழந்தை இறந்து விட்டது என்று நாம் அவரிடம் சொன்னால் அவர் தமக்கு என்ன தீங்கு இழைத்துக் கொள்வாரோ?’ என்று அவர்கள் பேசிக்கொண்டார்கள் (காண்க 2 சாமு 12:13-18).

இங்கே, "அதுவே எனக்கு இழிவாய் மாறிற்று" என்று கூறும் தாவீதின் வார்த்தைகளை இன்னும் சற்று ஆழப்படுத்துவோம். தாவீது தனது வாழ்வில் பெற்ற வெற்றிகள் அனைத்தும் கடவுளின் அருள்துணையால் மட்டுமே நிகழ்ந்தவை என்பது நமக்குத் தெரியும். அதிலும் குறிப்பாக, ஓர் இளைஞனாக அவர் கோலியாத்தை எதிர்த்து நின்றபோது, கடவுள் அவருக்கு மாபெரும் வெற்றியளித்தார் (காண்க. 1 சாமு 17:43-47). இதனைத் தொடர்ந்து அவர்மீது காழ்ப்புணர்வு கொண்ட மன்னர் சவுலையும் அழித்தொழித்து, அவரது ஆட்சியை தாவீதிடம் ஒப்படைத்தார் கடவுள். இதன்பிறகு தனது எதிரிகளையெல்லாம் வென்றழித்து ஒரு மாபெரும் பேரரசராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார் தாவீது. இவையனைத்தும் கடவுளின் பெருந்துணையால் மட்டுமே நிகழ்ந்தது. ஆனால் பத்சேபாவுடன் புரிந்த பாவத்தின் காரணமாக, தனக்குதவிய கடவுளை மனம்நோகச் செய்து அவரது எதிரிகளை மனமகிழ்வடையச் செய்துவிட்டார் தாவீது. இதனால்தான், "ஆண்டவரின் எதிரிகள் அவரை இழிவாக எண்ணும்படி நீ இவ்வாறு செய்துவிட்டாய்" என்ற வார்த்தைகள் இறைவாக்கினர் நாத்தானின் வாயிலிருந்து வெளிப்படுவதைப் பார்க்கின்றோம். அதேவேளையில், தான் பத்சேபாவுடன் புரிந்த பாவமே தனக்கு இழிநிலையைக் கொண்டு வந்துவிட்டது என்று பகிரங்கமாக ஒப்புக்கொள்வதையும் நம்மால் காண முடிகிறது.

இறுதியாக, "நகர வாயிலில் அமர்வோர் என்னைப் பற்றிப் புறணி பேசுகின்றனர்; குடிகாரர் என்னைப் பற்றிப் பாட்டுக் கட்டுகின்றனர்” என்று கூறுகின்றார் தாவீது. அந்தக் காலத்தில் மட்டுமல்ல இந்தக் காலத்திலும் கிராமப்புறங்களில் தேநீர்க் கடைகளில் கூடும் பெரியவர்கள் புறணி பேசும் வழக்கத்தைக் கொண்டிருப்பதைப் பார்க்கின்றோம். காலங்கள் மாறினாலும் காட்சிகள் இன்னும் மாறாமல்தான் இருக்கின்றன. இப்படிப் புறணி பேசுபவர்களில் சில குடிகாரர்களும் இருப்பார்கள் என்பதும் திண்ணம். இவர்கள் பெரும்பாலும் நல்லவர்களையும் அதிலும் குறிப்பாக, கோவிலுக்குச் செல்லும் இறைபக்தர்களை அதிகம் கேலியும் கிண்டலும் செய்து புறணி பேசுவார்கள். அதேவேளையில், இவர்கள் சாதாரண குடிமக்களாக இருந்திருக்க முடியாது. காரணம், ஒரு பேரரசரைக் குறித்து புறணி பேசும் அளவிற்குத் துணிவு கொண்டிருக்க முடியாது. ஆனால் இவர்கள் மக்கள் செல்வாக்குப் பெற்ற பெரியவர்களாவோ, அல்லது அவர்களின் தலைவர்களாகவோ இருந்திருக்க வேண்டும் என்பது நமக்குத் தெரிய வருகிறது. அதனால்தான் தாவீது இவ்வாறு கூறுகின்றார். ஆகவே உன்னத நிலையில் இருந்த தாவீது அரசரே இவ்வளவு பொறுமையுடன் கடவுளிடம் சரணடைந்திருக்கிறார் என்றால் நாமும் அவர்போல வாழ்ந்திடல் வேண்டும். இவ்வருளுக்காக இந்நாளில் மன்றாடுவோம். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 ஜூன் 2025, 11:42