உண்மையுடன் தொடர்புடைய உண்மையான மத சுதந்திரம்
சுஜிதா சுடர்விழி - வத்திக்கான்
உண்மையான மத சுதந்திரம் என்பது உண்மையுடன் தொடர்புடையது என்றும், அது ஒருவர் விரும்பியதைச் செய்வதிலிருந்து வேறுபட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் அமெரிக்க ஆயர் தாமஸ் பாப்ரோக்கி.
ஜூன் 22, ஞாயிறு முதல் 29, ஞாயிற்றுக்கிழமை வரை அமெரிக்காவில் உள்ள தலத்திருஅவையானது மத சுதந்திர வாரத்தைக் கொண்டாடுவதை முன்னிட்டு வத்திக்கான் செய்திகளுக்கு அளித்த நேர்காணலில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் அமெரிக்காவில் உள்ள ஸ்பிரிங்ஃபீல்ட் மறைமாவட்டத்தின் ஆயர் தாமஸ் பாப்ரோக்கி.
தூய ஜான் ஃபிஷர் மற்றும் தாமஸ் மோர் விழாவிலிருந்து தொடங்கி, இது ஜூன் 29-ஆம் நாள் தூய பேதுரு மற்றும் பவுல் பெருவிழாவுடன் முடிவடைய இருக்கின்ற இந்த மத சுதந்திர வாரமானது, அமெரிக்க கத்தோலிக்க ஆயர்களின் மாநாட்டின் (USCCB) ஒரு முயற்சியாக, கொண்டாடப்படுகின்றது என்றும் தெரிவித்துள்ளார் ஆயர் பாப்ரோக்கி.
“கத்தோலிக்கர்கள் மட்டுமல்லாது அனைத்து மதத்தைச் சார்ந்தவர்களுக்கும் மத சுதந்திரத்தின் அடிப்படை உரிமை மற்றும் உண்மையைப் ஊக்குவிக்க இந்த மத சுதந்திர வாரமானது அழைப்பு விடுக்கின்றது” என்ற தூய இரண்டாம் ஜான் பால் அவர்களின் வரிகளை மேற்கோள்காட்டியுள்ள ஆயர் பாப்ரோக்கி அவர்கள், இது நமது சுதந்திரம் மற்றும் உரிமைகள் பற்றிய கேள்வி மட்டுமல்லாது, நல்ல குடிமக்களாக இருக்க வேண்டிய கடமைகள் நமக்கு உள்ளன என்பதை வலியுறுத்துகின்றன என்றும் எடுத்துரைத்துள்ளார்.
பொது நன்மை, நமது நாட்டை மேம்படுத்துதல், நமது நாட்டின் சுதந்திரத்தைப் பாதுகாத்தல் போன்றவற்றிற்கு இந்த மத சுதந்திர வாரத்தின் வழியாக நாம் உதவுகிறோம் என்றும் எடுத்துரைத்துள்ள ஆயர் பாப்ரோக்கி அவர்கள், மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் அறிவிக்கப்பட்ட யூபிலி ஆண்டு கருப்பொருள் இந்த மத சுதந்திர வாரத்தின் கருப்பொருளுடன் இணைக்கப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மத சுதந்திரத்தின் அடிப்படையில் நம்பிக்கைக்கு சாட்சிகளாக இருக்கக் கூடிய வழிகளில் செபிக்கவும், சிந்திக்கவும், செயல்படவும் செயல்படுத்தவும் வேண்டுமென்று இல்லினாய்ஸில் உள்ள ஸ்பிரிங்ஃபீல்ட் மறைமாவட்டத்தின் ஆயர் பாப்ரோக்கி அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்