MAP

துணை அதிபர் சாரா டுடெர்ட்டேவை பதவிநீக்கம் செய்யக்கோரி மக்கள் போராட்டம் துணை அதிபர் சாரா டுடெர்ட்டேவை பதவிநீக்கம் செய்யக்கோரி மக்கள் போராட்டம்   (Lisa Marie David)

பிலிப்பீன்ஸ் தலத்திருஅவை பொறுப்புக்கூறலின் பக்கம் இருக்க வேண்டும்!

தலத்திருஅவை நேர்மையைப் பற்றிப் போதிப்பது மட்டுமல்லாமல், கிறிஸ்தவ விழுமியங்களுக்கு ஏற்ப மிகவும் நீதியான மற்றும் பொறுப்புணர்வுள்ள சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

பிலிப்பீன்ஸ் நாட்டில் ஊழலை ஒழிப்பதில் தலைமை மட்டுமல்ல, முழு கிறிஸ்தவச் சமூகமும் குறிப்பிடத்தக்க அளவில் தனது பங்களிப்பை வழங்க வேண்டும் என்று அதன் பிரதிநிதிகள் சபை கேட்டுக்கொண்டுள்ளதாகக்  கூறியுள்ளது யூக்கான் செய்தி நிறுவனம். கடந்த பிப்ரவரி மாதத்தில் அந்நாட்டுத் துணை அதிபர் சாரா டுடெர்ட்டே அவர்கள், பிரதிநிதிகள் சபையால் பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமைக் குறித்தும் இந்தச் செய்தித் தொகுப்பு விவாதிக்கிறது.

அரசியலமைப்பு உத்தரவுகள் இருந்தபோதிலும், அந்நாட்டின் மேல்சபை  இந்த வழக்கில் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், இது அதிலுள்ள அரசியல் உள்நோக்கங்கள் குறித்த சந்தேகங்களை எழுப்புகிறது என்றும் அச்செய்தி விளக்கியுள்ளது.

அரசியல்வாதிகளிடையே நேர்மையின்மை இயல்பாக்கப்பட்டு அரிதாகவே சவால் செய்யப்படும் நாட்டில் ஊழல் மற்றும் பொதுமக்களின் அலட்சியத்தின் கலாச்சாரத்தை இந்தச் செய்தித் தொகுப்பு விமர்சித்துள்ளதுடன், அரசியல் சார்பு எதுவாக இருந்தாலும், பொது அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் நீதி, நல்லாட்சி மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதில் கத்தோலிக்கத் திருஅவை மற்றும் பரந்த கிறிஸ்தவச் சமூகம் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை எடுத்துக்காட்டியுள்ளது அச்செய்தி நிறுவனம்,

அத்துடன் வாரிசு அரசுகளைத் தடை செய்வதற்கான சட்டம் உட்பட அரசியல் சீர்திருத்தங்களுக்காக வாதிடுதல், ஊழலை கண்டறிந்து அதற்குப் பதிலளிக்க சமூகங்களுக்குக் கல்வி கற்பித்தல், அதன் சொந்த நிறுவனங்கள் மற்றும் தலைமைக்குள் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதன் மூலம் ஒருமைப்பாட்டை மாதிரியாக்குதல்  ஆகிய மூன்று வழிகளில் கத்தோலிக்கத் தலத்திருஅவை வழங்கவேண்டிய பங்களிப்பையும் எடுத்துக்காட்டியுள்ளது அச்செய்தி.

தலத்திருஅவை நேர்மையைப் பற்றிப் போதிப்பது மட்டுமல்லாமல், கிறிஸ்தவ விழுமியங்களுக்கு ஏற்ப மிகவும் நீதியான மற்றும் பொறுப்புணர்வுள்ள சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளது அச்செய்தித் தொகுப்பு.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 ஜூன் 2025, 15:05